You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: "கார்த்திகேய சிவசேனாபதி ஆதாரமின்றி குற்றம்சாட்டுவதா?" - எஸ்.பி. வேலுமணி ஆவேசம்
- எழுதியவர், மு. ஹரிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் என் மீது ஆதாரமின்றி குற்றம்சாட்டுகிறார் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி என்று மாநில அமைச்சரும் தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார். இந்த இருவருக்கும் இடையே கடும் போட்டி அங்கு நிலவுகிறது. சில தினங்களுக்கு முன்பு பிபிசி தமிழுக்கு கார்த்திகேய சிவசேனாபதி அளித்த நேர்காணலில், வேலுமணி தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி தனது பிரசார உத்திகள் குறித்து பேசியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, தொண்டாமுத்தூர் தொகுதியில் களம் காணும் எஸ்.பி.வேலுமணி பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணலை இங்கே வழங்குகிறோம். அவரது பேட்டியில் இருந்து.
தொடர்ந்து மூன்றாவது முறையாக தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறீர்கள். 25 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக-திமுக நேரடியாக மோதும் இந்த தொகுதியில் உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
இந்த கேள்வியை மக்களிடம் கேட்டால் அவர்களே பதில் சொல்வார்கள். கல்லூரிகள், கூட்டுக் குடிநீர் திட்டம், மருத்துவமனைகள் மேம்பாடு என மக்களுக்காக பல்வேறு திட்டங்களை இந்த தொகுதியில் செய்துள்ளோம்.
தொண்டாமுத்தூர் தொகுதி மட்டுமல்ல கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் மக்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். குறிப்பாக, தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிகமான வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள அனைத்து தடுப்பணைகளிலும் தூர் வாரப்பட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கோவை மாவட்டம் வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு 10 கிலோ மீட்டர் அளவிற்கு நீளமான பாலம் கட்டப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டம், அத்திக்கடவு அவினாசி திட்டம், விமான நிலைய விரிவாக்கம், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
முன்பெல்லாம் மருத்துவத்திற்காக இங்குள்ள மக்கள் சென்னைக்கு சென்று வந்தனர். ஆனால், தற்போது கோவை அரசு மருத்துவமனையில் அனைத்து நவீன சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக மக்களை சந்தித்த திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்ததும் கடந்த இரண்டு வருடங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கொரோனா காலத்தில் ஒவ்வொரு குடும்பத்தையும் பாதுகாக்கும் விதமாக நாங்கள் பொருட்கள் வழங்கினோம். மக்களை தேடிச்சென்று உதவினோம். வெற்றி பெற்ற திமுக கூட்டணி எம்பிக்கள் யாரும் கொரோனா காலத்தில் கூட எதுவும் செய்யவில்லை. இதையெல்லாம் மக்கள் மனதில் வைத்து வாக்களிக்க உள்ளனர். அந்த வகையில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு சிறப்பாக உள்ளது.
தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருக்கிறது?
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இன்னும் பல திட்டங்களை நிறைவேற்ற உள்ளோம்.
விவசாயிகளுக்காக குளங்களை மேம்படுத்துவது, இரண்டாம் கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்ற உள்ளோம்.
கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதுபோன்ற பல்வேறு திட்டங்களை அமல்படுத்த உள்ளோம். அந்த வகையில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும், செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களையும் மனதில் வைத்து மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.
எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உங்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டிற்கு உங்களின் பதில் என்ன?
ஸ்டாலின் எப்போதும் என்னை பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் மலுமிச்சம்பட்டியில் உள்ள தொகுதிகளில் பிரசாரத்திற்காக கோவை வந்தவர், 134 முறை என் பெயரை சொல்லியிருக்கிறார்.
2017ஆம் ஆண்டு வரை என் மீது எந்த புகாரையும் அவர் வைக்கவில்லை. அந்த ஆண்டு குறுக்கு வழியில் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என அவர் நினைத்தார். அதற்காக பல்வேறு முயற்சிகளை செய்தார். ஆனால் அவரின் முயற்சிகள் அனைத்தையும் நானும், தங்கமணியும் முறியடித்தோம்.
புரட்சித்தலைவி அம்மாவின் நேர்மையான, நியாயமான ஆட்சி, எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர நாங்கள் உறுதுணையாக இருந்தோம். அந்த வகையில் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது பல்வேறு புகார்களை ஸ்டாலின் சுமத்தி வருகிறார்.
அத்துடன், தொண்டாமுத்தூர் தொகுதிக்கு வெளியூர் வேட்பாளர் ஒருவரை திமுக சார்பில் ஸ்டாலின் நிறுத்தியுள்ளார். தாய்குலத்தை கொடுமை செய்து சிறை தண்டனை பெற்று வந்தவர் அவர். என்மீது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். எவ்வித வளர்ச்சித் திட்டங்களையும் அவர்கள் பிரசாரத்தில் கூறுவதில்லை.
என்னைப் பற்றி அவதூறாக பேசுவதற்காகவே, ஸ்டாலின் அவரை (கார்த்திகேய சிவசேனாபதி) இங்கு நிறுத்தியுள்ளார். நான் தொகுதியிலேயே முடங்கி விடுவேன் என நினைத்தனர். ஆனால், நான் பொறுப்பாளராக இருக்கும் 21 தொகுதிகளிலும் பிரசாரம் செய்து வருகிறேன். மக்களின் ஆதரவு எங்களுக்கே உள்ளது.
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக எத்தனை தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது?
200க்கும் மேற்பட்ட தொகுதிகளை அதிமுக கைப்பற்றும் என உறுதியாக நம்புகிறேன். காரணம், தமிழகத்தில் எடப்பாடி அலை வீசுகிறது.
குடும்ப பெண்களுக்கு ரூ.1,500 நிதியுதவி, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி, இலவச வாஷிங் மிஷின் என மக்களுக்கான பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்துள்ளோம்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜெயித்த திமுகவின் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த வேலையும் செய்யவில்லை. மக்கள் இதையெல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஸ்டாலின் எந்த காலத்திலும் முதலமைச்சராக வர முடியாது.
திமுக எத்தனை தொகுதியில் ஜெயிக்க வாய்ப்புள்ளதாக நினைக்கிறீர்கள்?
ஸ்டாலின் ஜெயிப்பதே உறுதி இல்லை என நான் கருதுகிறேன். வெறும் விளம்பரங்கள், ஆள் வைத்து கருத்துக்கணிப்புகள் வெளியிடுவது இவற்றை மட்டுமே வைத்து ஜெயித்துவிடலாம் என அவர் நினைக்கிறார். களத்தில் அதிமுகவிற்கே வரவேற்பு இருக்கிறது. எதிர்வரும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வருவார். அதிமுகவிற்கு மக்கள் மத்தியில் முழுமையான ஆதரவு இருக்கிறது.
பிற செய்திகள்:
- சீமான் வளர்ந்தது எப்படி? திராவிட இயக்கப் பாசம் முதல் தமிழ் தேசியம் வரை
- பெட்ரோல், டீசல் மூலம் இந்திய அரசுக்கு கிடைக்கும் வரி 300 சதவீதம் அதிகரிப்பு
- "மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்தால் சிஏஏ உடனடி அமல்" - அமித் ஷாவின் அதிரடி வாக்குறுதி
- "1996" தேர்தல்: 4ஆவது முறையாக முதல்வரான கருணாநிதி - சுவாரஸ்ய வரலாறு
- இந்தியா-பாகிஸ்தான் சமரசத்துக்கு செளதி அதிக அக்கறை காட்டுவது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: