"அரசியல் கூட்டங்கள், மக்களின் அலட்சியத்தால் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து" - எச்சரிக்கும் சுகாதாரத்துறை

J RADHAKRISHNAN

பட மூலாதாரம், J RADHAKRISHNAN

பிரசுரிக்கப்பட்டது

"தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதற்கு பொதுமக்களின் அலட்சியமே காரணம்" என்று மாநில சுகாதாரத்துறை செயலாளர் ஜே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டுகளை புதன்கிழமை ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பொதுமக்கள் மத்தியில் கொரோனா பரவல் தொடர்பாக ஒருவித அலட்சியம் நிலவுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் பத்தில் இருந்து 5 சதவீதத்துக்கு உட்பட்டுத்தான் உள்ளது. அதனால் எந்த ஆபத்தான சூழலிலும் நமக்கு வைரஸ் பரவாது என்றவாறு சிலர் உள்ளனர்," என்று கூறினார்.

"குறிப்பாக, பிப்ரவரி மாதத்தை பொறுத்தவரை வைரஸ் பாதிப்பு அதிகரித்தது. அதற்கு காரணம், அப்போது நடந்த திருமணங்கள், பிறந்தநாள், இறப்புகள் மற்றும் அதற்குப் பிந்தைய நிகழ்ச்சிகள் என தெரிய வந்துள்ளது. இந்த மாதத்தில் அளவுக்கு அதிகமான அரசியல் கூட்டங்கள் நடக்கின்றன. அவற்றில் பங்கெடுக்க வருவோர் பலரும் முக கவசம் அணிவதில்லை."

சவாலான மாவட்டங்கள்

"சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மிகவும் சவாலாக உள்ளன," என்று அவர் குறிப்பிட்டார்.

"கொரோனா பரவல் தடுப்புக்காக அரசு அறிமுகப்படுத்தியுள்ள வழிமுறைகள் எல்லோருக்கும் பொருந்தும். குறிப்பாக, கொரோனா வைரஸ் ஒரு நுண்கிருமி. அதற்கு பாகுபாடு கிடையாது. எந்த இடத்திலும் நாம் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின்றி செயல்பட்டால் அது நம்மை தாக்கவே செய்யும். அது மத ரீதியாக, கலாசார அல்லது அரசியல் கூட்டமாக இருந்தால் கூட அங்கு முக கவசம் அணியாமல் கை கழுவாமல், சமூக இடைவெளியின்றி இருப்பவர்கள் மத்தியில் வைரஸ் பரவும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்."

"இரண்டாவதாக, இந்த காலகட்டத்தில் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் சில விதிகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். உதாரணமாக, பள்ளிகளை எடுத்துக் கொண்டால் அவற்றில் காய்ச்சல், சளி இருப்பவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது. அவர்களுக்கு ஓரிரு நாட்களுக்கு உடல் சுகவீனம் தொடர்ந்தால் உடனடியாக அவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.""

"அதேபோல, உடனடியாக தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட வேண்டும். காய்ச்சல் இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மேல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். இதேபோல, வங்கிகள், விடுதிகள், உணவகங்கள், மதசார்பற்ற கூட்டங்கள், கலாசார கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள், சந்தைகள், பொதுப் போக்குவரத்து என அனைத்துக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வழிகாட்டுதல் நெறிகளை வெளியிட்டுள்ளன."

அரசியல் கூட்டங்களால் வைரஸ் பரவும் ஆபத்து

"அலுவலகங்களுக்கும் பொது இடங்களுக்கும் வருவோர் முக கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும், அவர்கள் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் அல்லது உடல் வெப்ப நிலை பரிசோதனைக்கு பிறகே உள்ளே வர அனுமதிக்க வேண்டும். ஆனால், இதில் எல்லாவற்றிலுமே சுணக்கம் காட்டப்படுகிறது. அதனால்தான் மைலாப்பூரில் உள்ள வங்கியிலும், வில்லிவாக்கத்தில் உள்ள விடுதியிலும் வைரஸ் பரவல் காணப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பரில் கூட ஒரு கல்லூரி விடுதியில் கூட பலருக்கு வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. எனவேதான் போதிய விழிப்புடன் செயல்படுமாறு தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகிறோம்."

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், EDAPPADI PALANISWAMY TWITTER

அரசியல் கூட்டங்களுக்கு வருவோர் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் அவர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்த வேண்டும். வைரஸ் பெருந்தொற்று அதிகரிக்க நெரிசலான மக்கள் கூட்டமும் முக்கிய காரணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார் ராதாகிருஷ்ணன்.

ஸ்டாலின்

பட மூலாதாரம், UDHAYNITHI STALIN

தடுப்பூசி போடுங்கள்

"இதற்கான விரிவான நடவடிக்கையை அரசு தலைமைச் செயலாளர் வெளியிட்டிருக்கிறார். தற்போது கொரோனா வைரஸ் தடுப்பூசி 16 லட்சம் பேருக்கு போடப்பட்டுள்ளது.

எனவே, யாருக்கு எல்லாம் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி உள்ளதோ அந்த வாய்ப்பை தயவு செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். முதியோர் மட்டுமின்றி 45 முதல் 59 வயதுடைய இணை நோய் உள்ளவர்கள் என அனைவரும் அவர்கள் எந்த தொழில் செய்பவர்களாக இருந்தாலும் இந்த தடுப்பூசி வாய்ப்பை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்.

தற்போது அரசிடம் 36 லட்சம் தடுப்பூசி மருந்துகளில் கையிருப்பாக 20 லட்சம் மருந்துகள் உள்ளன. இந்த மருந்துகள் தொடர்ந்து வரும். அரசு சார்பில் இந்த தடுப்பூசி இலவசமாக போடப்படுகின்றன. கூட்டு நோய் உள்ளவர்களுக்கான நோய் உச்ச வரம்பை குறைக்கவும் மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது."

"அண்மைக்காலங்களில் பரிசோதனை நடவடிக்கைகளை அதிகரிக்க கேட்டுக் கொண்டுள்ளோம். ஒருவருக்கு வைரஸ் இருப்பது உறுதியானால், அவருடன் தொடர்புடையவர்களிடமும் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டோம். இதை ஒட்டுமொத்தமாக தடுக்க வேண்டுமானால், முதலாவதாக முக கவசம் அணிய வேண்டும்.

இரண்டாவதாக வீட்டுத்தனிமையை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். யாருக்கும் தெரியாது என்பதால் வெளியே சென்று பிறருக்கும் நோய் பரவ காரணமாக இருக்க வேண்டாம். பரிசோதனையில் வைரஸ் பரவல் கண்டறியப்பட்டால் தயவு செய்து அரசு மருத்துவமனையில் சேர்ந்து இலவசமாக சிகிச்சை பெற்று விரைவில் குணமடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இல்லையென்றால் வீட்டுத்தனிமையை கட்டாயம் பின்பற்றி உரிய மருந்து, மாத்திரைகளை அரசு மருத்துவமனைகளில் இருந்து பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். இதற்காகத்தான் மாவட்ட அளவில் கொரோனா உதவி மருத்துவ நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன," என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: