தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: தமிழகம், புதுச்சேரியில் நிலுவை வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அரசியல் கட்சிகள்

காங்கிரஸ்

பட மூலாதாரம், VIJAYADHARANI TWTTER

பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, அதன் 21 வேட்பாளர்களை ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயரை அக்கட்சி மேலிடம் அறிவித்திருத்திருக்கிறது.

இதில், விளவங்கோடு தொகுதியில் விஜயதாரிணி, வேளச்சேரி தொகுதியில் ஜே.எம்.ஹெச். ஹாசன், மயிலாடுதுறை தொகுதியில் எஸ் ராஜகுமார், குளச்சல் தொகுதியில் ஜே.ஜி. பிரின்ஸ் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் தேர்வில் வெளிப்படைத்தன்மை நிலவவில்லை என்றும் சீட் ஒதுக்கீடுக்கு பேரம் நடப்பதாகவும் அதன் எம்.பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, விஷ்ணு பிரசாத் உள்ளிட்டோர் வெளிப்படையாக குற்றம்சாட்டினர். சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் தனது ஆதரவாளர்களுடன் விஷ்ணுபிரசாத் தர்னாவில் ஈடுபட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த நிலையில், தாமதப்படுத்தப்பட்டு வந்த எஞ்சிய நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டிருக்கிறது. .

புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் யார்?

நாராயணசாமி

பட மூலாதாரம், AICC

புதுச்சேரியில் திமுகவுடன் அணி சேர்ந்து காங்கிரஸ் போட்டியிடும் 14 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், ஊசுடு தொகுதியில் கார்த்திகேயன், லாஸ்பேட்டையில் வைத்தியநாதன், இந்திரா நரில் கண்ணன், முத்தியால்பேட்டையில் செந்தில் குமரன், காமராஜ் நகரில் ஷாஜகான், அரியாங்குப்பம் தொகுதியில் ஜெயமூர்த்தி, மணவெளியில் அனந்தராமன், ஏம்பலம் தொகுதியில் கந்தசாமி, நெட்டப்பாக்கம் தொகுதியில் விஜயவேணி, நெடுங்காடு தொகுதியில் மாரிமுத்து, திருநள்ளாறில் கமலக்கண்ணன், காரைக்கால் வடக்கில் ஏ.வி. சுப்ரமணியன், மாஹே தொகுதியில் ரமேஷ், கதிர்காமம் தொகுதியில் செல்வநாதன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும் திமுக 13 தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன. இதில் தற்போது காங்கிரஸ் போட்டியிடும் 14 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், புதுச்சேரி முதல்வராக இருக்கும் நாராயணசாமி இந்த தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

புதுச்சேரியில் பாஜக போட்டியிடும் 9 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு

பாஜக

பட மூலாதாரம், BJP

புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜக போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, லாஸ்பேட்டில் வி. சாமிநாதன், மண்ணாடிப்பட்டில் ஏ. நமச்சிவாயம், ஊசுடு தொகுதியில் ஜே. சரவணகுமார், காமராஜ் நகர் தொகுதியில் ஏ. ஜான் குமார், காலாப்பட்டில் பி.எம்.எல். கல்யாணசுந்தரம், நெல்லித்தோப்பில் விவிலியன் ரிச்சர்ட்ஸ் ஜான்குமார், மணவெளி தொகுதியில் ஆர். செல்வம், திருநள்ளாறு தொகுதியில் ஜி.என்.எஸ். ராஜசேகரன், நிரவி திருபட்டினம் தொகுதியில் வி.எம்.சி.எஸ். மனோகரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று பாஜக மத்திய தேர்தல் குழு அறிவித்துள்ளது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதிமுகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அதிமுகவிற்கு 5 தொகுதிகளை தேசிய ஜனநாயக கூட்டணி தலைமை ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து மற்ற 9 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.

சீமான் கட்சி என்ன நிலை?

சீமான்

பட மூலாதாரம், NAAM THAMILAR

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியில் 28 தொகுதிகளில் ஆண், பெண் வேட்பாளர்கள் இருவருக்கும் சரிசமமாக நாம் தமிழர் கட்சி தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் 2021ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்களின் அறிமுகப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 28 வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்தார்.

சீமான்

பட மூலாதாரம், NAAM THAMILAR KATCHI

ஆண், பெண் சமம் என்ற கோட்பாட்டில் பெண்களுக்குச் சம உரிமை அளிக்கவேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக, தமிழகத்தில் ஆண், பெண் இரு தரப்பிலும் தலா 117 தொகுதிகளைச் சரிசமமாக ஒதுக்கீடு செய்து 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை முன்னிருந்தப்பட்டது. இதே போன்று புதுச்சேரியிலும் ஆண், பெண் வேட்பாளர்கள் இருவருக்கும் சமமான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உட்பட நான்கு பிராந்தியங்களில் 30 தொகுதிகள் உள்ளன. இதில் கேரளா மற்றும் ஆந்திர மாநிலத்தால் சூழப்பட்ட மாஹே மற்றும் ஏனாம் தொகுதிகள் நீங்கலாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் உள்ள 28 தொகுதிகளில் ஆண், பெண் வேட்பாளர்கள் இருவருக்கும் தலா 14 தொகுதிகள் சீமான் ஒதுக்கீடு செய்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :