தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சேலம் வெள்ளி தொழிலாளர்களின் ஓட்டு யாருக்கு?

    • எழுதியவர், ஞா. சக்திவேல் முருகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

சேலம் மாவட்டத்தின் தனி அடையாளமாக இருக்கிறது வெள்ளிக் கொலுசுத் தொழில். இத்தொழிலில் ஒன்றரை லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சேலம் மாவட்டத்தில் சேலம் மேற்கு, சேலம் வடக்கு, வீரபாண்டி தொகுதிகளில் அதிகளவில் உள்ளனர். குறிப்பாக, வீரபாண்டி தொகுதியில் சிவதாபுரம், பனங்காடு, ஆண்டிப்பட்டி பகுதியில் பத்தாயிரத்துக்கும் கூடுதலான குடும்பங்கள் வெள்ளி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக்கு வட மாநிலங்களிலிருந்தும், ஆந்திரா, தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஆர்டர்கள் வருகின்றன. இந்த ஆர்டர்கள் செவ்வாய்பேட்டையில் உள்ள நகை கடைக்காரர்கள் பெற்று 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குகிறார்கள்.

இவர்கள் ஜிஎஸ்டி, கொரோனா ஊரடங்கு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வேலை வாய்ப்பு இழந்து மற்ற தொழிலுக்கு மாறி வரும் நிலையில் உள்ளனர். இவர்கள் நிலை குறித்தும், யாருக்கு ஓட்டு என்பது குறித்தும் அறிந்து கொள்ள வெள்ளி கொலுசு தயாரிக்கும் பகுதிக்கு விசிட் அடித்தோம்.

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது வீட்டின் முற்றத்திலேயே வெள்ளி கம்பி வேலை, உருக்கு கடைதல், பொடி வைத்தல், ஜதை கைப்பட்டையை தயார் செய்தல், மெருகுகூட்டுதல் என பல்வேறு பணிகளில் குடும்பத்தில் உள்ள பெண்களும், ஆண்களும் பணி செய்து வருகின்றனர்.

பனங்காடு பகுதியில் குடும்பத்தினருடன் வெள்ளி கால் கொலுசு பணியில் ஈடுபட்டு வரும் பூபதியிடம் பேசினோம்.

"வெள்ளி கொலுசு தயாரிப்பை கடந்த 25 ஆண்டுகளாக குடிசைத்தொழிலாக மேற்கொண்டு வருகிறோம். நாங்கள் கால் கொலுசு, முத்து கொலுசு, இடுப்பு சரம், மெட்டி, காப்பு, அரைஞாண் என பல்வேறு வெள்ளி பொருள்களைத் தயாரித்து வருகிறோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இரவு பகலாக, நாட்கணக்கில் பணி செய்து வந்த நாங்கள் தற்போது வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே வேலை பார்க்கிறோம்.

தற்போது வெள்ளி விலை உயர்வும், வட மாநிலங்களில் மிஷின் கொண்டு வெள்ளி கொலுசுகள் தயாரிப்பதும், ஜிஎஸ்டி, கொரோனா ஊரடங்கு போன்ற பிரச்னையால் எங்கள் பகுதியில் வேலை வாய்ப்பு குறைந்து விட்டது. இதுவரை நடந்த தேர்தலில் வெள்ளி கொலுசு தயாரிப்பவர்கள் குறித்து எந்த அரசியல் கட்சியும் அக்கறை காட்டியதில்லை. நாங்களும் அரசியல் கட்சிகளிடம் எதுவும் கோரிக்கை எதுவும் வைத்தில்லை. ஆனால், இந்த தேர்தலில் எங்கள் தொழிலை மேம்படுத்த பல்வேறு வகையில் உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க உள்ளோம்" என்றார்.

சேலம் மாவட்ட வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை சங்கத்தின் செயலாளர் ஆனந்தராஜன், "சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை சேலத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் 50 டன் அளவுக்கு வெள்ளிக் கொலுசு மற்றும் வெள்ளியிலான ஆபரண பொருட்கள் வெளி மாவட்டம், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு வேலைப்பாடுகள் செய்து அனுப்பி வந்தோம். சேலம் மாவட்டத்தில் மட்டும் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர், மூன்று தலைமுறைகளாக வெள்ளி கொலுசு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறோம்," என்று கூறினார்.

"நாங்கள் 20 கிராம் முதல் 400 கிராம் வரையிலான கொலுசு தயாரிக்கிறோம். கைவினை தயாரிப்பு கொலுசு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை உழைக்கும். ஆனால், இயந்திரம் மூலம் தயாரிக்கப்படும் கொலுசு குறைந்த காலமே உழைக்கும். இதைத் தெரியாமல் மக்கள் ஏமாறுகிறார்கள். தற்போது வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குடிசைத்தொழிலாக மேற்கொண்டு வரும் இத்தொழிலுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. இத்தகைய வரி விதிப்பு குறித்து தொழிலில் ஈடுபட்டு வருபவர்களிடையே புரிதல் இல்லாமல் இருக்கிறது. இது குறித்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்திட வேண்டும். வெள்ளி கொலுசு தொழில் மேம்பாடு அடைய மாவட்ட நிர்வாகமும், அரசும் கொலுசு உற்பத்தியாளர்களையும், வாடிக்கையாளர்களையும் இணைக்கும் வகையில் கொலுசு தயாரிப்பு தொழில் பூங்காவை அமைத்துத் தர வேண்டும். இதன் மூலம் சேலம் மாவட்டத்தின் தொழில் வளமும் கூடும். இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் முன்னேற்றம் அடைவார்கள். இதை அரசியல் கட்சிகள் கவனிக்க வேண்டும்," என்று ஆனந்தராஜன் கூறினார்.

சிவதாபுரம் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன், "மத்திய அரசு, ஜிஎஸ்டி வரி விதித்ததும் தொழில் தேக்கமடைந்து விட்டது உண்மைதான். ஆரம்பத்தில் மூன்று சதவிகிதமாக இருந்த வரியை 2.5 சதவிகிதமாகக் குறைத்திருக்கிறார்கள். குடிசைத் தொழிலாக மேற்கொள்ளப்படும் கொலுசு தொழிலுக்கு ஜிஎஸ்டி வரியை இன்னமும் குறைத்து இத்தொழிலில் ஏற்பட்ட தேக்கநிலையைச் சரி செய்ய வேண்டும்" என்றார்.

பனங்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா, " இத்தொழில் 1.5 லட்சம் பேர் ஈடுபட்டிருந்தாலும் எத்தகைய பணி பாதுகாப்பும் இல்லை. இதனால் தமிழக அரசு கொலுசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தனி நல வாரியம் அமைத்துத் தர முன்வர வேண்டும். வெள்ளி பொருள்கள் தயாரிப்பில் 10 மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் பெரும்பான்மையானவர்கள் சேலம் மாவட்டத்திலேயே உள்ளனர். எங்களுக்கு என தனி நல வாரியம் அமைப்பதில் அரசியல் கட்சிகளும், அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டும்," என்றார்.

வெள்ளிக் கொலுசு தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு வரும் சரஸ்வதி, "இரவு - பகல் பார்க்காமல் குடும்பத்தில் உள்ள அனைவரும் கொலுசு தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கு என்று தனி அடையாளம் இல்லாமல் இருக்கிறோம். பத்தமடை பாய், சேலம் ஜவ்வரிசி போன்ற பொருள்களுக்குக் காப்புரிமை பெற்றுத் தனி அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதைப்போலவே சேலம் வெள்ளிக் கொலுசுக்குத் தனி அடையாளத்தை ஏற்படுத்திடக் காப்புரிமை பெற்றுதர அரசியல் கட்சிகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும்" என்றார்.

கொரோனா ஊரடங்கு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு, வெள்ளி விலை உயர்வு போன்ற பிரச்னைகள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்வை முடங்கச் செய்திருக்கிறது. இன்னமும் தேர்தலில் பிரசாரம் சூடுபிடிக்காத நிலையில் அரசியல் கட்சிகளிடையே கோரிக்கை எழுப்ப வெள்ளிக் கொலுசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தயாராக உள்ளனர். எங்களின் கோரிக்கையை செவி சாய்ப்பவர்களுக்கே எங்களது ஓட்டு என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :