தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், INC TAMIL NADU
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு இடத்தைத் தவிர எல்லா இடங்களையும் கைப்பற்றியது. காங்கிரஸ் போட்டியிட்ட தேனி தொகுதியில் மட்டும் அக்கட்சி தோல்வியடைந்தது.
தற்போது சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை மீண்டும் அதே கூட்டணியைத் தக்கவைக்க நினைக்கிறது தி.மு.க. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் தவிர, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இடதுசாரி கட்சிகள், இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, ம.தி.மு.க., ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் உள்ளன. வேறு சில முஸ்லிம் கட்சிகளும் இந்தக் கூட்டணியில் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் கட்டமாக காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு, அடுத்ததாக மற்ற கட்சிகளுடன் பேச்சு வார்த்தையை நடத்த நினைக்கிறது தி.மு.க. அதன்படி வியாழக்கிழமை சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் குழுவுக்கும் தி.மு.க. குழுவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தையில் காங்கிரசின் சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், உம்மன் சாண்டி, கே.ஆர்.ராமசாமி, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் பங்கேற்றனர். தி.மு.கவின் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரை முருகன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர்.
பேச்சு வார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது என்று மட்டும் தெரிவித்தார். வேறு கேள்விகள் எதற்கும் பதிலளிக்கவில்லை. இதற்குப் பிறகு சத்யமூர்த்தி பவனில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது எண்ணிக்கை குறித்துப் பேசப்படவில்லையென்றும் தொகுதிகளை அடையாளம் காண்பது குறித்தே பேசப்பட்டதாகவும் காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் 41 இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட நிலையில், இந்த முறை குறைந்தது 30 இடங்களையாவது அக்கட்சி எதிர்பார்க்கிறது. ஆனால், தி.மு.கவைப் பொறுத்தவரை 20- 25 இடங்களுக்கு மேல் தரவிரும்பவில்லை.
முந்தைய தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், INC TAMIL NADU
இதற்கு முன்பாக, 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றது. அப்போது காங்கிரசிற்கு 41 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 6.47 சதவீத வாக்குகளைப் பெற்று, 8 இடங்களை மட்டுமே காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடிந்தது. அந்தக் கூட்டணியும் தோல்வியடைந்தது.
2011ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. 60 இடங்களை ஒதுக்க முன்வந்தபோது, வலியுறுத்திக் கேட்டு 63 இடங்களைப் பெற்றது காங்கிரஸ். அதில் அக்கட்சியால் ஐந்து இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. 9.3 சதவீத வாக்குகளே காங்கிரசிற்குக் கிடைத்தன.
நாடாளுமன்ற தேர்தல்களைப் பொறுத்தவரை 2019ல் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 9 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களை வென்றது. 17.76 சதவீத வாக்குகள் அக்கட்சிக்குக் கிடைத்தன.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டது 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில்தான். 2013ல் இலங்கை விவகாரம் தொடர்பாக கூட்டணி முறிந்துவிட்ட நிலையில், இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ், 4.3 சதவீத வாக்குகளை அதாவது 17,51,000 வாக்குகளை மட்டுமே பெற்றது. ஒரு இடத்திலும் அக்கட்சியால் வெற்றி பெற முடியவில்லை.
இந்த சட்டமன்ற தேர்தலில் 30 இடங்களுக்கும் குறைவாக இடங்கள் ஒதுக்கப்பட்டால், ராகுல் காந்தி இவ்விவகாரத்தில் தலையிட்டுப் பேசுவார் என்றும் வெகுவிரைவிலேயே அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகள் துவங்குமென்றும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
தி.மு.கவைப் பொறுத்தவரை, காங்கிரசிற்கு ஒதுக்கும் இடங்களிலேயே அதிக தோல்விகள் கிடைப்பதாகக் கருதுகிறது. 2011ல் 63 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது, 2016ல் 41 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது ஆகியவற்றைச் சுட்டிக்காட்டுகிறது.
பிற செய்திகள்:
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சசிகலாவின் இலக்கு மார்ச் மாதம்... தவறினால் அடுத்து என்ன நடக்கும்?
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: தலைமையேற்கப் போவது சசிகலாவா, தினகரனா?
- செய்திகளுக்கு கூகுள் – ஃபேஸ்புக் பணம் செலுத்தும் சட்டம்: இந்தியாவிலும் ஏற்படுமா?
- BBC Indian Sportswoman of the Year 2020: மார்ச் 8இல் வெற்றியாளர் அறிவிப்பு
- பைடன் அரசில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நீரா டாண்டன் மற்றும் விவேக் மூர்த்தியின் நியமனத்தில் சிக்கல் - காரணம் என்ன?
- மீண்டும் டிராக்டர் பேரணிக்கு அழைப்பு விடுக்கும் ராகேஷ் திகைத்: என்ன சொல்கிறது அரசு?
- தினகரனை முதலமைச்சராக்க அ.ம.மு.க. தீர்மானம்; சசிகலாவின் நிலைப்பாடு என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:























