சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து: 2 பெண்கள் உள்பட 5 பேர் பலி
தமிழக, இந்திய, உலக அளவிலான செய்திகளை நேயர்கள் இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

பட மூலாதாரம், ANI
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை (பிப்ரவரி 25) மாலையில ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சியில் தங்கராஜ் பாண்டியன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்த ஆலையில் 30க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன
வழக்கம்போல் இன்றும் இந்த பட்டாசு ஆலையில் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு அறையில் பேன்ஸி ரக பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும் போது உராய்வு ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறின. இதனால் அடுத்தடுத்து இருந்த அறைகளுக்கும் தீ பரவி பட்டாசுகள் வெடித்து சிதறின.
இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 கட்டடங்கள் இடிந்து தரை மட்டமாயின. மேலும் 13 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்த விருதுநகர் மற்றும் சிவகாசி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
காயமடைந்த நபர்களும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து எம். ரெட்டியபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
ஒரே மாதத்தில் 3வது சம்பவம்
விருதுநகர் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் நடந்துள்ள மூன்றாவது பட்டாசு ஆலை விபத்து இது. கடந்த 12-ம் தேதி அச்சங்குளத்தில் பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து அதே வாரத்தில் சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் ஓர் ஆலையில் விபத்து நடந்தது.
இந்நிலையில், சிவகாசி காளையார்குறிச்சி பட்டாசு ஆலையில் இன்று மாலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. பேன்ஸி ரக பட்டாசு செய்யும் அறையில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியதால் விபத்து பகுதி தீயணைப்பு வீரர்கள் நெருங்கமுடியாத அளவுக்கு உள்ளது. 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 14 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவருக்கு 80 சதவீதத்துக்கும் மேல் காயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 12-ம் தேதி சாத்தூர் அச்சங்குளம் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 23 பேர் பலியாகினர். அந்த விபத்து ஏற்படுத்திய சோகம் விலகுவதற்குள் மற்றுமொரு விபத்து நடந்துள்ளது.
விபத்து நடந்த இடத்தில் மாவட்ட எஸ்.பி. மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பட்டாசு ஆலைக்கு உரிமம் இருப்பதாகத் தெரிவித்துள்ள எஸ்.பி., ஆலை உரிமம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறதா, ஆலையில் விதிமீறல் ஏதும் உள்ளதா போன்ற விசாரணை நடத்தினர்.
நீதிமன்றம் உத்தரவு
முன்னதாக வியாழக்கிழமை பிற்பகல், தமிழகத்தில் பட்டாசு தொழிலை முறைப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
9 - 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி - தமிழக முதல்வர் அறிவிப்பு

பட மூலாதாரம், @EPSTAMILNADU TWITTER PAGE
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 59லிருந்து 60ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், பள்ளிக்கூடங்களை முழுமையாக நடத்த முடியாத சூழலில் 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட்டிற்கான கூட்டத் தொடர் தற்போது நடந்து வருகிறது. அதில் கேள்வி நேரம் முடிவடைந்த பிறகு, 110 விதியின் கீழ் அறிக்கை ஒன்றை முதலமைச்சர் வாசித்தார். அதில் இரண்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
அதில் ஒரு அறிவிப்பின்படி, அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 59லிருந்து 60ஆக உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் அறிவித்தார். "இந்த உத்தரவு, அரசு ஊழியர்கள், அரசு நிறுவன ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், ஆணையங்கள், சங்கங்கள் ஆகியவற்றுக்குப் பொருந்தும். தற்போது அரசுப் பணியில் உள்ள அனைவருக்கும் பொருந்தும். இந்த ஆண்டு மே 31ல் ஓய்வு பெறுபவர்களுக்கும் இந்த விதி பொருந்தும்," என முதலமைச்சர் கூறியிருக்கிறார்.
மேலும், 9,10,11ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் இன்று தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். "2020 - 21 கல்வியாண்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக பள்ளிகள் மூடப்பட்டு, கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டதையடுத்து கடந்த ஜனவரி 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கப்பட்டன. பல்வேறு கல்வியாளர்கள், பெற்றோர் ஆகியோரது கருத்துகளை மனதில் கொண்டு பொதுத் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது" என முதலமைச்சர் கூறியுள்ளார்.
கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3வது வாரம் முதல் மாநிலம் முழுவதும் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்னன. இதற்குப் பிறகு ஆன்லைன் வழியிலும் கல்வித் தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டன.
கொரோனா தொற்று சற்று குறைந்த பிறகு, ஜனவரி மாதம் 19ந் தேதி முதல் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் துவங்கப்பட்டன.
அதன் பிறகு பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பு வெளியானது. ஆகவே, 10, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கட்டாயம் நடக்குமென எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு வரும் மே 3ஆம் தேதியிலிருந்து துவங்குமென அறிவிக்கப்பட்டது. ஆனால், பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுத் தேதி அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில்தான் இந்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டிருக்கிறார்.
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது தமிழ்நாட்டில் 58ஆக இருந்துவந்தது. கடந்த ஆண்டு மே மாதம் இதனை 59ஆக உயர்த்துவதாக முதலமைச்சர் அறிவித்தார். தற்போது இந்த வரம்பு மேலும் ஓராண்டு உயர்த்தப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சசிகலாவின் இலக்கு மார்ச் மாதம்... தவறினால் அடுத்து என்ன நடக்கும்?
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: தலைமையேற்கப் போவது சசிகலாவா, தினகரனா?
- செய்திகளுக்கு கூகுள் – ஃபேஸ்புக் பணம் செலுத்தும் சட்டம்: இந்தியாவிலும் ஏற்படுமா?
- BBC Indian Sportswoman of the Year 2020: மார்ச் 8இல் வெற்றியாளர் அறிவிப்பு
- பைடன் அரசில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நீரா டாண்டன் மற்றும் விவேக் மூர்த்தியின் நியமனத்தில் சிக்கல் - காரணம் என்ன?
- மீண்டும் டிராக்டர் பேரணிக்கு அழைப்பு விடுக்கும் ராகேஷ் திகைத்: என்ன சொல்கிறது அரசு?
- தினகரனை முதலமைச்சராக்க அ.ம.மு.க. தீர்மானம்; சசிகலாவின் நிலைப்பாடு என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:





















