You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோயம்புத்தூரில் தடுப்பூசியால் குழந்தைகள் உயிரிழந்தனரா? - விசாரிக்க குழு அமைப்பு
கோயம்புத்தூரில் அரசு துணை சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட இரு குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை நகரில் உள்ள மசக்காளிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் துணை சுகாதார நிலையத்தில் கடந்த 17ம் தேதி, பிரசாந்த் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் தங்களது மூன்று மாத குழந்தைக்கு பெண்டவேலன்ட் தடுப்பூசி போட்டுக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.
அடுத்த சில மணி நேரங்களில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அப்போது, சுகாதார நிலையத்திலிருந்து வாங்கி வந்த சொட்டு மருந்தையும் பச்சிளங்குழந்தைக்கு கொடுத்துள்ளனர். பின்னர், வெகுநேரமாகியும் தூங்கிய நிலையில் இருந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தை இறந்ததாக தெரிவிக்கப்பட்டது, பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுகாதார நிலையத்தில் போடப்பட்ட தடுப்பூசியால் தான் தங்களது குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர்கள் சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
"குழந்தைக்கு சளி, காய்ச்சல் இருந்ததால் மசக்காளிபாளையம் சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றோம். அங்கு பணிபுரிந்த செவிலியர்கள், 'இரண்டரை மாதத்தில் போடவேண்டிய தடுப்பூசி குழந்தைக்கு போட்டீர்களா?' என கேட்டார்கள். இல்லை, என்றதும் அவர்கள் அதற்கான தடுப்பூசியை குழந்தைக்கு போட்டனர். பின்னர், நாங்கள் வீடு திரும்பியதும் குழந்தை தாய்ப்பால் குடிக்க மறுத்தது. நீண்ட நேரம் அழுது கொண்டே இருந்தது. இதனால், சுகாதார நிலையத்தில் வழங்கிய சொட்டு மருந்தை கொடுத்தேன். இதனையடுத்து, குழந்தை தூங்கத் துவங்கியது, நான் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தேன்."
"வெகுநேரமாகியும் குழந்தை தூங்கிக் கொண்டே இருந்ததால், அருகிலுள்ள உப்பிலிபாளையம் சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றேன். அங்கு அவர்கள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச் செல்ல கூறினர். அங்கு செல்கையில் குழந்தை இறந்து விட்டதாக கூறினர்" என உயிரிழந்த குழந்தையின் பெற்றோர்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பச்சிளங்குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில், நிமோனியா காய்ச்சல் காரணமாக நுரையீரல் பாதிப்படைந்து உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்ட, சுமார் இரண்டரை வயது மதிக்கத்தக்க மற்றொரு குழந்தையும் அதேநாளில் உயிரிழந்ததாக தெரியவருகிறது.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பேசுகையில், "தடுப்பூசிக்கும் குழந்தைகள் உயிரிழப்பிற்கும் எவ்வித சம்பந்தமில்லை" என மறுத்துள்ளனர்.
கோவையில் தடுப்பூசி போடப்பட்ட இரு குழந்தைகள் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளரும் தனது பேட்டியில் உறுதி செய்துள்ளார்.
சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், "கோவையில், டிப்தீரியா மற்றும் கக்குவான் இருமலுக்கான பெண்டவேலன்ட் தடுப்பூசி போட்டதால் இரு குழந்தைகள் உயிரிழந்ததாக வெளிவந்துள்ள தகவல் தவறானது. அந்த சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்ட மற்ற குழந்தைகள் நலமாக உள்ளனர். உயிரிழப்பு குறித்து ஆய்வு செய்ய மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் விசாரணைக் குழுக்கள் நியமித்துள்ளோம்" என தெரிவித்தார்.
தடுப்பூசி போடப்பட்ட நாளில் இரு குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தையடுத்து, மசக்காளிபாளையம் மற்றும் அப்பகுதியின் அருகே உள்ள மற்ற சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: