"எஸ்சி பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை நீக்குங்கள்"

கிருஷ்ணசாமி
பிரசுரிக்கப்பட்டது

(இன்றைய நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகளில் சிலவற்றை இங்கே சுருக்கமாக வழங்குகிறோம்.)

மதுரையில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பொதுப்பெயராக அறிவிக்கும் அரசாணையை வெளியிட வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சியின் சார்பில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு அக்கட்சியின் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி பேசும்போது, தேவேந்திர குல வேளாளரை பட்டியலினத்தில் இருந்து வெளியேற்ற அரசாணை வெளியிடாமல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியிருப்பது ஏற்புடையது அல்ல என்று கூறினார்.

புதிய தமிழகம் கட்சி, எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் தனித்து நின்று வெற்றி பெறும் என்று கூறிய அவர், தனித்தொகுதிகளில் வெற்றிபெறும் சட்டமன்ற மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவேந்திர குல சமூகத்தினருக்கு பிரச்னை என்றால் வர மாட்டார்கள். ஆனால் பதவி ருசிக்காக அவர்களது கட்சிகளுக்கு அடிமைகளாக இருந்து வருகின்றனர் என்று சாடினார்.

அரசின் நலத்திட்டங்கள் அனைவருக்கும் வழங்கப்படும் நிலையில் தாழ்ந்த சாதி என கூறி ஒரு பிரிவினரை பிரிப்பது ஏன்? என்று இந்த ஆர்ப்பாட்டத்தின்போது டாக்டர். கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார்.

கிருஷ்ணசாமி

தமிழகத்தில் எந்த பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் வரலாற்று உண்மையை கூறுவதில்லை என்றும் எங்களின் கோரிக்கை நிறைவேற எதையும் இழக்கத் தயார் என்று அவர் பேசினார்.

பட்டியலினத்தில் இருந்து தேவேந்திர குல வேளாளர் வெளியேற்றப்படுவதால் யாருடைய இட ஒதுக்கீட்டிற்கும் இடையூறு இருக்காது என்றும் அந்த சமூகத்துக்கு 6 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்பது தான் தங்களின் கோரிக்கை என்றும் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கூட்டத்தை பார்த்த பிறகாவது, தேவேநதிர குல வேளாளர் தொடர்பான அரசாணையை வெளியிடுவது பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என்று நம்புவதாக கிருஷ்ணசாமி கூறினார்.

தேவேந்திர குல வேளாளர் உள்ளிட்ட 7 உட்பிரிவினை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என பொதுப்பெயர் மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுவது, அரை கிணற்றை தாண்டுவது போன்ற செயல் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி மத்திய அரசுக்கு பரிந்துரையை அனுப்பும்வரை அவரை சந்திக்கப்போதில்லை என்று அவர் தெரிவித்தார்.

புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த தாய்மார்கள் 200ரூபாய்க்காக அனைத்து கட்சிகளின் கொடிகளையும் ஏந்தி செல்லும் நிலை உள்ளது. அதனை மாற்ற வேண்டும், தேவேந்திர குல வேளாளர் என்றாலே தமிழ் தேசியமும், கம்யூனிசமும் சேர்ந்தது தான் என குறிப்பிட்ட அவர், இந்த விஷயத்தில் சமரசத்துக்கு வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்தார்.

Banner

மதுரை ஜல்லிக்கட்டு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

ஜல்லிக்கட்டு

பட மூலாதாரம், மு.நியாஸ் அகமது

மதுரை மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அரசானையை தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்டுள்ளதுஅதில், 2021ஆம் ஆண்டு ஜனவரி 14 ல் அவனியாபுரம், 15ல் பாலமேடு, 16 ல் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த போட்டிகள், நிபந்தனைகளுடன் நடத்தப்படும் என்றும் அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தென் மாவட்ட இளைஞர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் ஜல்லிக்கட்டு, வீர விளையாட்டாக பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை காண பல்வேறு நாடுகளிலிருந்து பார்வையாளர்கள் வந்தனர். அப்போது வெளிநாட்டினர் கண்டுகளிக்க தனி மாடம் அமைக்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் சார்பாக ஒரு காரும், துணை முதல்வர் சார்பாக ஒரு காரும் வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 700 காளைகளும், 923 வீரர்களும் பங்கேற்றனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பிற்காக 1500க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியமர்த்தப்பட்டனர். வாடிவாசலுக்கு அனுப்பப்படும் காளைகளை பரிசோதனை செய்யவும் அடிபடும் மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கவும் 40 பேர் கொண்ட கால்நடை மருத்துவ குழு ஒன்று பணியமர்த்தப்பட்டது.

ஆனால், இந்த கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக சமூக இடைவெளி, முறையான பரிசோதனை செய்யப்பட்டு நிபந்தனைகளுடன் வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Banner

புதுச்சேரி வந்தது மத்திய துணை ராணுவப்படை - துணைநிலை ஆளுநருக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் எதிரொலி

புதுச்சேரி

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 8) முதல் மாநில வளர்ச்சிக்கு தடையாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இருப்பதாகக் கூறி அவரை கண்டித்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜகவினர் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இல்லத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் பதற்றமான சூழல் அங்கு நிலவுகிறது. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் பூர்வா கர்க், ஆளுநர் மாளிகை, சட்டமன்ற வளாகம், முதல்வர் இல்லம் மற்றும் பிற பகுதிகளில் 500 மீட்டர் சுற்று வட்டார பகுதிகளுக்குள் போராட்டம் நடத்த தடை விதித்தார்.

இத்தகைய சூழலில் பாதுகாப்பு கருதி துணை ராணுவப் படையினரை புதுச்சேரியில் பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபடுத்தியிருக்கிறது. இதையொட்டி புதன்கிழமை மாலையில் மத்திய ரிசர்வ் காவல் படை, அதிவிரைவு அதிரடிப்படையினர் புதுச்சேரிக்கு வந்துள்ளனர். அவர்கள் துணைநிலை ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை வளாகம் மற்றும் முதலமைச்சர் இல்லம் இருக்கும் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :