You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விவசாயிகள் போராட்டம்: செல்ஃபோன் டவர்கள் சேதம்; கோரிக்கை விடுக்கும் பஞ்சாப் முதல்வர்
இன்று (28 டிசம்பர் 2020, திங்கட்கிழமை) சில முக்கிய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணையதளங்களிள் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து 1,400 செல்போன் கோபுரங்களை சேதப்படுத்திய பஞ்சாப் விவசாயிகள்
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் முற்றுகையில் ஈடுபட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், தங்கள் போராட்டத்தை 1 மாதத்துக்கு மேலாக தொடர்ந்து வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல், கடுமையான குளிர் போன்ற சவால்களையும் மீறி இந்த போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இதுவரை 1,400 செல்போன் கோபுரங்களை பஞ்சாப் விவசாயிகள் சேதப்படுத்தி இருக்கிறார்கள் என தினத்தந்தியில் செய்தி வெளியாகி இருக்கிறது.
பஞ்சாப்பில் தொழிலதிபர்களான அதானி, அம்பானி போன்றவர்களின் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குச் சொந்தமான செல்போன் கோபுரங்களை விவசாயிகள் சேதப்படுத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களால் பெருநிறுவனங்களுக்கே லாபம் என குற்றம் சாட்டி வரும் விவசாயிகள், தங்கள் கோபத்தை அம்பானி, அதானி போன்ற பெரும் முதலாளிகளின் மீது காட்டுவதாக பஞ்சாப்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினமும், நேற்றுமாக மாநிலத்தில் ஏறக்குறைய 176 செல்போன் கோபுரங்களை அவர்கள் சூறையாடி சேதப்படுத்தி உள்ளனர். அங்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளில் இருந்த ஊழியர்களையும் அவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இந்த 176 கோபுரங்களையும் சேர்த்து இதுவரை 1,411 செல்போன் கோபுரங்கள் சேதப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இதனால் தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு பெருமளவில் பொருட்சேதம் ஏற்பட்டு உள்ளது. மேலும் மாநிலத்தில் ஜியோ போன்ற செல்போன் சேவைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளன.
விவசாயிகள் இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட வேண்டாம் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கடந்த 25-ந்தேதி கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அவரது வேண்டுகோளையும் ஏற்காமல் விவசாயிகள் தொடர்ந்து வன்முறையில் இறங்கி வருகிறார்கள் என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இருவேறு மதங்களைச் சேர்ந்த தம்பதியினரை மீண்டும் இணைத்த அலகாபாத் உயர்நீதிமன்றம்
ஒரு பெண் மேஜராகிவிட்டால், அவருடைய வாழ்கையை, அவர் விருப்பப்படித் தீர்மானிக்கும் உரிமை அவருக்கு இருக்கிறது. அவர் தன் கணவரோடு எந்த வித தடையுமின்றி வாழலாம் என அலகாபாத் உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்திருப்பதாக தி இந்துவில் செய்தி வெளியாகி உள்ளது.
கடந்த டிசம்பர் 7-ம் தேதி, உத்தரப் பிரதேச மாநிலம் இடாவைச் சேர்ந்த முதன்மை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம், பெண் ஒருவரை குழந்தைகள் நலக் குழுவுக்கும் அதன் பின் அவருடைய பெற்றோர்களிடமும் அனுப்பி வைத்தது.
அந்த பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக அவரை குழந்தைகள் நலக் குழுவிடம் அனுப்பி இருப்பதாக, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் ரிட் மனுவைத் தாக்கல் செய்தார் அந்த பெண்ணின் கணவர்.
இந்த வழக்கு விசாரணையில் அந்த பெண்ணிடம் பேசியது அலஹாபாத் உயர் நீதிமன்றம். தான் 1999-ம் ஆண்டு பிறந்தவர் என்றும், தான் ஒரு மேஜர் என்பதையும் நிரூபித்தார் அவர்.
ஒரு பெண் மேஜராகிவிட்டால், தன் வாழ்கையைத் தன் விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளும் உரிமை இருக்கிறது. அதோடு அந்த பெண், தன் கணவருடன் வாழ விரும்புவதாகவும் கூறியிருக்கிறார். அவர் தன் விருப்பபடி எந்த வித தடையுமின்றி வாழலாம் என உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பர் 18-ம் தேதி வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பதாக தி இந்து செய்தியில் கூறியிருக்கிறது.
அதோடு, ஷிக்காவின் விருப்பத்துக்கு மாறாக, குழந்தைகள் நலக் குழுவுக்கு அனுப்பிய இடா முதன்மை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தையும் விமர்சித்திருக்கிறது அலகாபாத் உயர்நீதிமன்றம். அந்த பெண்ணை கடத்திவிட்டதாகவும், கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய முயற்சிப்பதாகவும் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்திருப்பதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஓட்டுநா் உரிமத்தைப் புதுப்பிக்கும் காலக்கெடு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு
ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான காலக் கெடுவை 2021-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகி உள்ளது.
கொரோனா தொற்று பரவல், பொது முடக்கம் மற்றும் அவற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக ஏற்கெனவே இதற்கான கால அவகாசம் மூன்று முறை நீட்டிக்கப்பட்டு, டிசம்பா் 31-ஆம் தேதி வரை அனுமதிக்கப்பட்டிருந்தது. இப்போது, மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:
கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்தோடு, மோட்டார் வாகனங்களின் உரிமம், ஓட்டுநா் உரிமம், வாகன பதிவு ஆவணங்களைப் புதுப்பிப்பதற்கான காலக் கெடு 2021-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
இந்த காலக்கெடு நீட்டிப்பு என்பது 2020 பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 2021 மார்ச் 31-ஆம் தேதி வரை காலாவதியாகும் மோட்டார் வாகன ஆவணங்கள் அனைத்துக்கும் பொருந்தும்.
எனவே, இந்த தேதிகளில் காலாவதியான வாகன ஆவணங்களை 2021-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை செல்லத் தகுந்த ஆவணங்களாக அதிகாரிகள் கருத்தில்கொள்ள வேண்டும். வாகன ஓட்டிகளும், குடிமக்களும் சமூக இடைவெளியைப் பின்பற்றவும், கொரோனா பரவலைத் தடுக்கவும் இது உதவும்.
எனவே, அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இந்த அறிவிக்கையை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்