நரேந்திர மோதி உரை : "புதிய வேளாண் சட்டங்கள் பற்றி குழம்பாதீர்கள்" - விவசாயிகள் போராட்டம் பற்றி பேசிய பிரதமர் மோதி

பட மூலாதாரம், PIB
"விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் பற்றிய வதந்திகளை பரப்பி ஏழை விவசாயிகளைக் குழப்ப வேண்டாம்," என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களான ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகியவற்றின் எல்லைகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் வெள்ளிக்கிழமை 30ஆம் நாளாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், விவசாயிகள் விரும்பும் இடத்தில், விரும்பும் நேரத்தில் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று இந்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் தரப்பில் இருந்து விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில்தான் ஆறு மாநில விவசாயிகள் மத்தியில் காணொளி வாயிலாக உரையாற்றினார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.
உழவர் உதவித் தொகை திட்டத்தின் கீழ் சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது தலா ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
இதையொட்டி இந்த ஆண்டுக்கான அடுத்த தவணை நிதியுதவி வழங்குவதை பிரதமர் மோதி இன்று காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய நரேந்திர மோதி விவசாயிகளின் நலன்களுக்காக அரசு கொண்டு வந்த சட்டங்கள் பற்றி உண்மைக்கு மாறான தகவல்களை எதிர்கட்சிகள் பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோதி ஆற்றிய உரையில் இருந்து 20 முக்கிய குறிப்புகளைப் பார்க்கலாம்.
1) பண்ணை விவசாயம் தொடர்பாக குழப்பத்தை விளைவிக்கப் பார்க்கிறார்கள்.
2) விவசாயிகளின் நலன்களை பற்றி அவர்கள் மேற்கு வங்கத்தில் வாய் திறப்பதில்லை. ஆனால், டெல்லிக்கு வந்து பேசுகிறார்கள்.
3) கேரளாவில் சந்தை குழுக்கள் கிடையாது. அங்கு போராட்டங்களை நடத்தலாமே. சந்தை குழுக்களை தொடங்கலாமே.
4) எதிர்கட்சிகள் இரட்டை வேடம் போடக்கூடாது.
5) பொய்யான வதந்திகளை நிறுத்துங்கள், ஏழை விவசாயிகளை திசைதிருப்பாதீர்கள்.

பட மூலாதாரம், Getty Images
6) நான் விவசாயிகளுக்கு இதை தெரிவிக்கவில்லை, அவர்களின் பெயரால் அரசியல் செய்பவர்களிடம் பேசுகிறேன்.
7) விவசாயிகளை நாங்கள் வஞ்சித்து விட்டதாக இன்னொரு முறை கூறாதீர்கள்.
8) அப்பாவி விவசாயிகளின் வாழ்வுடன் விளையாடாதீர்கள்.
9) ஆட்சி அதிகாரத்தில் பல ஆண்டுகளுக்கு இருந்தவர்களால், அவர்களின் பதவிக்காலத்தில் தேவையான வளர்ச்சியை வழங்க முடியவில்லை.
10) சிறிய நிலம் மற்றும் வளங்களை கொண்ட விவசாயிகள், அதிகம் அவதிப்பட்டு வருகிறார்கள்.
11) ஏழை விவசாயிகள், தாங்கள் விளைவித்த பொருட்களை விற்க கடுமையாக உழைக்கிறார்கள்.
12) இந்தியாவில் வாழும் விவசாயிகளின் எண்ணிக்கை சிறிய அளவு கிடையாது.
13) இந்த நாட்டில் ஆட்சியில் இருந்த கட்சிகள், தங்களின் நலன்களுக்காக விவசாயிகளை கைவிட்டு விட்டன.
14) ஏழை விவசாயிகள், மேலும் ஏழைகளாகி வருகிறார்கள்.
15) வேளாண் நிலங்கள் அபகரிக்கப்படும் என வதந்தி பரப்பி வருகிறார்கள்.
16) வேளாண் சட்டங்கள் மீதான உங்களுடைய கண்ணோட்டம் காலப்போக்கில் மாறும்.
17) இந்த விஷயத்தில் அரசு ஒரு முயற்சியை தொடங்கியுள்ளது. அதில் உண்மையை உணர்ந்த விவசாயிகள் பங்களிப்பை வழங்குகிறார்கள்.
18) முன்பு சந்தை குழுவுக்கு சரியான விலை கிடைக்காவிட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். ஆனால், புதிய சட்டங்கள் எங்கு வேண்டுமானாலும் விவசாயிகள் தங்களுடைய பொருட்களை விற்க வசதி செய்கிறது.
19) பழைய சட்டங்களின்படி விற்பனை ஒப்பந்தங்கள் மீறப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். ஆனால், புதிய சட்டங்களில் அத்தகைய நடவடிக்கை நீக்கப்பட்டிருக்கிறது.
20) கொள்முதல் செய்யும் நிறுவனங்கள், அதிக லாபம் அடைந்தால், விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் எல்லா ஆபத்துகளுமே அந்த நிறுவனத்தையோ தனி நபரையோ சார்ந்தது. விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது.

பட மூலாதாரம், PIB
நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட ஆம் ஆத்மி எம்.பி.க்கள்
முன்னதாக வெள்ளிக்கிழமை காலையில், இந்திய முன்னாள் பிரதமர் மறைந்த அடல் பிஹாரி வாஜ்பேயியின் பிறந்தநாளையொட்டி, நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் உள்ள அவரது உருவபடத்துக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க எம்.பி.க்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், பிரதமர் மோதி அரங்குக்குள் வந்து வாஜ்பேயியின் படத்துக்கு மலரஞ்சலி செலுத்திய வேளையில், ஆம் ஆத்மி கட்சியின் எம்..பிக்கள் பாக்வந்த் மான், சஞ்சய் சிங் ஆகியோர், விவசாய விரோத வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுங்கள் என்று வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர். இதனால், அங்கு பரபரபப்பு நிலவியது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
அந்த அரங்கில் பிரதமர் மோதி வந்து வெளியே செல்லும்வரை ஆம் ஆத்மி கட்சி எம்.பிக்கள் கோஷமிட்டபடி இருந்தனர். மலரஞ்சலி நிகழ்ச்சிக்குப் பிறகு அரங்கில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆதிர் ரஞ்சன் செளத்ரி, முலாயம் சிங் யாதவ் ஆகியோரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
ஆனாலும், ஆம் ஆத்மி எம்.பிக்கள் பக்கம் திரும்பிப் பார்க்காமல் தவிர்த்த பிரதமர் மோதி, மற்ற எம்.பி.க்களிடம் நலம் விசாரித்து விட்டு அரங்கை விட்டு புறப்பட்டுச் சென்றார்.
பிற செய்திகள்
- கிறிஸ்துமஸ்: இயேசு கிறிஸ்துவின் உண்மையில் எப்படி இருப்பார்?
- இஸ்லாமியர்களின் பார்வையில் இயேசு கிறிஸ்து -அரிய தகவல்கள்
- ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி - எங்கே? என்ன பிரச்சனை?
- தொ.பரமசிவன் உடலுக்கு அரசு மரியாதை வழங்க கோரிக்கை
- இந்திய விவசாயிகள் தொடர்ந்து ஏழைகளாக இருப்பது ஏன்?
- கொரோனா சிகிச்சையில் இனப் பாகுபாடு குற்றம்சாட்டிய அமெரிக்க பெண் மருத்துவர் பலி
- புதுச்சேரி புத்தாண்டு கொண்டாட்டம்: ஆதரிக்கும் நாராயணசாமி, எதிர்க்கும் கிரண் பேடி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












