கொரோனா தடுப்பூசி பணி இந்தியாவில் ஜனவரியில் தொடங்க வாய்ப்பு - யாருக்கு முன்னுரிமை?

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி வரும் ஜனவரி மாதம் தொடங்கப்படலாம் என்று அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.
அடுத்த சில வாரங்களுக்குள், சில கொரோனா தடுப்பூசி மருந்துகளை அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்த இந்திய மருந்து நெறிமுறையாளர்கள் அனுமதி வழங்கலாம் என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் கூறினர்.
இரண்டு மருந்து நிறுவனங்கள் ஏற்கெனவே அவசர பயன்பாட்டுக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். இன்னும் ஆறு மருந்து நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்புகள், பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைகளில் இருக்கின்றன.
தடுப்பூசி திட்டத்தின் கீழ், அடுத்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்துக்குள், இந்தியாவில் 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு சென்றடைய இலக்கு நிர்ணயித்து இருக்கிறது அரசு.
இந்தியாவில் சுமாராக ஒரு கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 1.44 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள்.
கொரோனா பரவல் குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பூசியைக் கொண்டு வரும் திட்டம் ஒரு பக்கம் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
பரிசீலனையில் உள்ள மருந்துகள் எவை?
பிரிட்டனைச் சேர்ந்த மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராசெனீகா உடன் இணைந்து, சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா தயாரிக்கும் கோவிஷீல்ட், ஐ.சி.எம்.ஆர் அமைப்புடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவேக்சின் ஆகிய இரண்டு மருந்துகளும் ஏற்கெனவே அவசர பயன்பாட்டுக்கு விண்ணப்பித்து விட்டார்கள்.
சைகோவ்-டி (ZyCov - Di) என்கிற மருந்தை, ஆமதாபாதை சேர்ந்த ஜைடஸ் கேடில்லா மேம்படுத்தி வருகிறது.
இந்தியாவின் முதல் தடுப்பூசி நிறுவனமான, ஹைதராபாதைச் சேர்ந்த பயோலாஜிக்கல் இ என்கிற நிறுவனம், எம்.ஐ.டி உடன் இணைந்து ஒரு தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது.
"ஹெச்ஜிசிஓ 19" என்கிற மருந்து தான் இந்தியாவிலேயே முதல் எம்ஆர்என்ஏ கொரோனா தடுப்பு மருந்து. இந்த மருந்து புணேவைச் சேர்ந்த ஜினோவா என்கிற நிறுவனம், அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இருக்கும் ஹெச்டிடி பயோடெக் என்ற நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி இருக்கிறது.
பாரத் பயோடெக் நிறுவனம், நாசி துவாரம் வழியாகச் செலுத்தும் தடுப்பு மருந்தை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது.
டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் மற்றும் ரஷ்யாவில் இருக்கும் கமலேயா நேஷனல் சென்டர் உடன் இணைந்து "ஸ்பூட்நிக் V" மருந்தை மேம்படுத்தி இருக்கிறது.

பட மூலாதாரம், Reuters
அமெரிக்காவின் "நோவாவேக்ஸ்" மற்றும் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா இணைந்து இரண்டாவது கொரோனா தடுப்பு மருந்தைக் மேம்படுத்தி வருகிறார்கள்.
தற்போது, இந்த கொரோனா தடுப்பு மருந்துகள் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்த பல கட்ட பரிசோதனைகளில் இருக்கின்றன.
இந்த எட்டு கொரோனா தடுப்பு மருந்துகளில், நான்கு மருந்துகள் இந்தியாவிலேயே மேம்படுத்தப்பட்டவை என அந்த அதிகாரிகள் கூறினர்.
உலகின் பல்வேறு மருந்து நிறுவனங்களிடம் இருந்து, இந்தியா பல மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்குவதற்கு முன்பதிவு செய்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை இந்த அதிகாரிகள் மறுக்கிறார்கள். ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் கொரோனா தடுப்பு மருந்துகளே போதுமானதாக இருப்பதாக அந்த அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்தியாவின் தேவைகளை அவர்களிடம் தெரியப்படுத்தவும், நிறுவனங்களின் உற்பத்தித் திறனை அறிந்து கொள்ளவும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கொரோனா தடுப்பு மருந்து நிறுவனங்களுடன் அரசு தொடர்பில் இருக்கிறது என்கிறார்கள் அந்த அரசு அதிகாரிகள்.
சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா (உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்து உற்பத்தியாளர்), பாரத் பயோடெக் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் ஒரு மாதத்துக்கு 65 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை உருவாக்கும் திறன் கொண்டது எனக் குறிப்பிடுகிறார்கள் அந்த அதிகாரிகள்.
தடுப்பு மருந்து திட்டம் எப்படி செயல்படுத்தப்படும்?
அடுத்த ஆண்டின் ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதத்துக்குள் சுமாராக 30 கோடி இந்தியர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என அந்த அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள்.
முதலில், இந்தியாவில் இருக்கும் ஒரு கோடி சுகாதார ஊழியர்களிடம் இருந்து இந்த திட்டம் தொடங்கும். அதன் பின் காவலர்கள், ராணுவ வீரர்கள், நகராட்சி ஊழியர்கள் போன்ற முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும்.
அதன் பிறகு, 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என்கிறார்கள் அதிகாரிகள்.
உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்தியா நடத்தி கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும், நான்கு கோடி பிறந்த குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு, 12 நோய்களுக்கு எதிராக தடுப்பூசி கொடுக்கப்படுகிறது. தடுப்பு மருந்துகளை சேமித்து வைப்பது மற்றும் அது யாருக்கு எங்கு சென்று சேர்கிறது என பின் தொடரும் மின்னணு முறை இந்தியாவில் வலுவாக கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.
100 கோடி மக்களுக்கு கொரோன தடுப்பூசியா?
இந்தியாவில் இருக்கும் 2.23 லட்சம் செவிலியர்களில் 1.54 லட்சம் செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களை, கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மருத்துவ உதவியாளர்கள் தொடர்பான பட்டப்படிப்புகளில், இறுதியாண்டில் இருக்கும் மாணவ மாணவிகளுக்கும் உதவி செய்ய அழைப்பு விடுக்கப்படும் என்கிறார்கள் அந்த அரசு அதிகாரிகள்.
இந்தியாவில் சுமாராக 29,000 குளிர்சாதன வசதி கொண்ட சேமிப்புக் கிடங்குகள் இருக்கின்றன. இந்த கிடங்குகளில் கொரோனா தடுப்பு மருந்துகள் சேமித்து வைக்கப்படும். கிட்டத்தட்ட எல்லா கொரோனா தடுப்பு மருந்துகளும் 2 - 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தான் விநியோகிக்க வேண்டி இருக்கிறது.
-80 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பொருட்களை கொண்டு செல்லும் அளவுக்கு, ஹரியானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என பல விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆராய்ச்சி மையங்களில் ஏற்கனவே இந்த வசதிகள் இருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இந்தியா, கொரோனா தடுப்பு மருந்துகளால் ஏற்படும் எதிர்வினைகளை எப்படி கண்காணிக்கப் போகிறது என்பது குறித்து ஒருவித கவலை நிலவுகிறது.
சமீபத்தில் கூட, மருத்துவ பரிசோதனையில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்திக் கொண்டவரின் உடல்நிலை மோசமடைந்ததால், அந்த நோயாளி, சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா மீது வழக்கு தொடுத்தார். இது சர்ச்சையைக் கிளப்பியது.
நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும், இது போன்ற எதிர்வினைகளைக் கருத்தில் கொண்டு தீர்க்கப்பட வேண்டும். ஒரு நிலையான செயல்பாட்டு வழிமுறை கொண்டு வரப்படும் என அந்த அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள்.
பிற செய்திகள்
- தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் கதை என்ன?
- விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக திமுக, கூட்டணிக் கட்சிகள் உண்ணாவிரதம் - காட்சிகள்
- அமெரிக்காவில் சைபர் தாக்குதல்: ஆபத்தில் முக்கிய அரசுத் துறைகள், முகமைகள்
- எச்.ராஜா நேர்காணல்: "தேர்தலுக்கு பிறகு பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும்"
- பாகிஸ்தானில் ரசாயன முறை ஆண்மை நீக்க சட்டம்: பாலியல் குற்றங்களை குறைக்குமா?
- நித்தியானந்தாவின் புதிய தகவல்: இங்குதான் இருக்கிறதா கைலாசா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








