இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கூகுளை எதிர்ப்பது ஏன்?

இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கூகுளை எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சப்த ரிஷி தத்தா
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது

கூகுள் பிளே ஸ்டோர் விதிகளில் சமீபத்திய மாற்றங்கள் தொடர்பாக இந்தியாவின் மிகப் பெரிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் கூகுள் இடையே ஒரு மோதல் ஏற்பட்டுள்ளது. இது இந்தியாவின் இணையத் துறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.

கூகுளின் புதிய விதிகளின்படி, செயலிகளை உருவாக்கும் App Developers, செயலி மூலமான விற்பனையை அந்நிறுவனத்தின் சொந்த பில்லிங் மூலமாகவே செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களிடையே இது மிகுந்த மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள், கூகுள் நிறுவனம் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

30 சதவீத கமிஷனைத் தான் பெறவிருப்பதாக கூகுள் கூறிவருவது குறித்தும் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கவலை கொண்டுள்ளன என்று சில செய்திகளும் வருகின்றன.

'நிர்ணயிக்கப்பட்ட இந்தக் கட்டணம் மிக அதிகம்' என்று கூறும் இந்த இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், கூகுள் பிளே ஸ்டோரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து ஒரு மாற்று வழியைக் குறித்தும் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கூகுளை எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம், AaronP/Bauer-Griffin

நிறுவனங்களுக்கிடையேயான நம்பிக்கையிழப்புச் சட்ட முறைபடுத்தும் ஆணையமான Anti trust regulator-ன் அண்மைக் கருத்து ஒன்று, இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஒரு உற்சாகத்தை அளித்துள்ளது. நவம்பர் மாதத்தில் அவ்வாணையம், 'இந்தியச் சந்தையில் தங்கள் அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கூகுள் மீது விசாரணை பாயும்' என்று தெரிவித்திருந்தது.

இருப்பினும், கூகுள் நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டுகளை ஏற்கவில்லை. முன்னணி இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் தங்கள் யோசனைகளைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாக அந்நிறுவனம் கூறுகிறது. இதற்காக, நிறுவனம் சில அமர்வுகளை ஏற்பாடு செய்வது குறித்தும் குறிப்பிட்டுள்ளது.

மாற்று ஆப்-ஸ்டோரை உருவாக்குவது குறித்த தெளிவான கண்ணோட்டம் தற்சமயம் இல்லையென்றாலும், அதிக அளவு நிறுவனங்கள் அதில் ஆர்வம் காட்டினால், அதைத் தீவிரமாகக் கருத்தில் கொள்ள இந்திய அரசு முனைகிறது.

ஆனால் மாற்று ஆப்-ஸ்டோரை உருவாக்குவது எளிதல்ல என்றும், அதில் அரசாங்கமும் ஓர் அங்கமானால், அது இந்திய நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் இருதரப்பினருக்கும் பிரச்சனையை அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

தேசியவாதமா? சந்தர்ப்பவாதமா?

இந்தியாவில் சிறிய போட்டியாளர்களின் கரங்களை முடக்கியதாக, கூகுள் மீது நீண்ட காலமாகவே குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து கூகுளும் மறுத்தே வருகிறது.

ஆனால் ஆப் ஸ்டோர் விதிகளை மாற்றுவதன் மூலம் கூகுள் இந்திய நிறுவனங்களை முற்றிலும் செயலிழக்கச் செய்துவிட்டதாக இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இப்போது வெளிப்படையாகவே கூறுகின்றன.

இந்தியாவில் விற்கப்படும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்குகின்றன. ஆப்பிள் நிறுவனமும் இதே போன்ற விதிகளைப் பின்பற்றத்தான் செய்கிறது, ஆனால் கூகுளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் அதன் பங்கு மிகக் குறைவு.

இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கூகுளை எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம், Anadolu Agency

கூகுளின் புதிய கொள்கையை எதிர்த்து சுமார் 150 நிறுவனங்கள் கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்தியாவின் மிகவும் பிரபலமான Paytm, ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு சேவை மேக் மை ட்ரிப் மற்றும் ஆன்லைன் மேட்ச்மேக்கிங் சேவை பாரத் மேட்ரிமோனி ஆகியவை இந்தக் கூட்டணியில் உள்ளன.

உலகளவிலும், மென்பொருள் உருவாக்கும் நிறுவனங்கள், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களால் ஒருங்கிணைக்கப்பட்ட உயர் கமிஷனுக்கு எதிராகவே குரல் கொடுக்கின்றன.

செப்டம்பரில், மியூசிக் ஸ்ட்ரீமிங் செயலியான ஸ்பாடிஃபை, கேமிங் நிறுவனமான எபிக் கேம்ஸ் மற்றும் பிற நிறுவனங்கள் ஆப்பிள் மற்றும் கூகிளால் மாற்றியமைக்கப்பட்ட ஆப் ஸ்டோர் விதிகளுக்கு எதிராகக் குரல் எழுப்ப ஒரு இலாப நோக்கற்ற கூட்டணியைத் தொடங்கின.

பாரத் மேட்ரிமோனி நிறுவனர் முருகவேல் ஜானகிராமன், "கூகுள், இந்திய இணைய சுற்றுச்சூழலை, முழுவதுமாகத் தன்னகப்படுத்தி வைத்துள்ளது. இப்போது நாம் அனைவரும் கூகுளின் தயவில் இருக்கிறோம்" என்று கூறினார்.

கூகுளின் வலுவான விமர்சகர் விஜய் சேகர் சர்மாவின் கட்டணப் பரிவர்த்தனைச் செயலி நிறுவனமான Paytm கூகுள்-பே நிறுவனத்திடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது.

சூதாட்டம் குறித்த தனது விதிகளை மீறியதற்காக கூகுள் செப்டம்பர் மாதத்தில் Paytm ஐ அதன் ஆப் ஸ்டோரிலிருந்து தற்காலிகமாக நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

'தி எகனாமிக் டைம்ஸ்' செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் அவர், "ஒரு அமெரிக்க அல்லது வெளிநாட்டு நிறுவனம் ஒரு இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் விதியைக் கட்டுப்படுத்தக்கூடாது" என்று கூறினார்.

இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கூகுளை எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

ஃபிட்னஸ் செயலி, gokey-யின் நிறுவனர் விஷால் கோண்டலும் தனது ட்வீட் ஒன்றில் கூகுளை பிரிட்டிஷ் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பிட்டு, 'மாற்றம் வருகிறது' என்று குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும், சிலர் இதை ஒரு பெரிய விஷயத்தின் சிறிய பகுதியாகவே பார்க்கிறார்கள்.

"இது வெறும் வர்த்தகம் தான்" என்று தொழில்நுட்பக் கொள்கையில் நிபுணத்துவம் பெற்ற செய்தி வலைத்தளமான மீடியாநாமாவின் வர்ணனையாளரும் ஆசிரியருமான நிகில் பஹ்வா கூறுகிறார்.

கூகுள் தனது அதிகாரகத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாக இந்திய நிறுவனங்கள் உணர்ந்தால், அதற்கு அவர்கள் பதிலளிக்க முடியும், ஆனால் அவர்களின் தேசியவாதம் என்ற வாதத்தில் சந்தர்ப்பவாதம் தான் இருக்கிறது." என்று அவர் கூறினார்.

மாற்று குறித்த சிந்தனை

இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கூகுளை எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

இருப்பினும், இந்திய நிறுவனங்களின் இந்த வாதத்தில் ஒன்றும் ஆச்சரியமில்லை. ஏனென்றால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, உள்ளூர் நிறுவனங்களை வெளிநாட்டு நிறுவனங்களின் மீதான சார்புநிலையைக் குறைக்க வலியுறுத்தி வருகிறார். சீனாவுடனான எல்லைப் பிரச்சினைக்குப் பின்னர், பிரதமர் மோதி இந்த விஷயத்தை அதிகம் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடி 264 பில்லியன் டாலர் நிவாரண நிதியையும் அறிவித்துள்ளார்.

அக்டோபரில் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடனான சந்திப்பில், ஷர்மா மற்றும் இந்திய ஸ்டார்-அப் நிறுவனங்களின் குழுவின் பிற உறுப்பினர்கள் கூகுளின் ஆதிக்கத்தைக் குறைக்க மாற்று செயலிக் கிடங்கை (App Store) உருவாக்க அழைப்பு விடுத்தனர்.

எவ்வாறாயினும், அரசாங்க ஆதரவுடன் ஆப் ஸ்டோர் என்ற யோசனை பாதுகாப்புவாதத்தை எதிரொலிக்கிறது, அதாவது, உலகளாவிய சந்தையில், இந்திய நிறுவனங்களைப் போட்டிக்கு உட்படுத்தப்போவதில்லை என்ற கருத்தைப் பிரதிபலிக்கிறது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பொதுக் கொள்கை நிபுணர் பிரணய் கோட்ஸ்தானே, "இது வெளிநாட்டுச் செயலிகளுக்குத் தடைகளை உருவாக்குவதன் மூலம் இந்திய நுகர்வோரின் விருப்பத் தேர்வைக் கட்டுப்படுத்தும்" என்றார்.

"இது உள்நாட்டு ஏகபோக நிலைமைகளையும் உருவாக்க வாய்ப்புள்ளது" என்று பெங்களூரைத் தளமாகக் கொண்ட 'த தக்ஷஷீலா இன்ஸ்டிடியூட்' ஆராய்ச்சித் துறைத் தலைவரான கோட்ஸ்தானே கூறினார்.

தரவுப் பாதுகாப்பு குறித்த கேள்வி

ஒரு ஆப் ஸ்டோரை இயக்குவதற்குத் தரவுப் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான தேவை. கூகுள் அதன் பயனர்களின் தரவைப் பாதுகாக்க கடந்த ஆண்டுகளில் மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளது, அதே நேரத்தில் தரவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் சிறப்புச் சட்டங்கள் எதுவும் இந்திய அரசிடம் இல்லை.

பயனர் தரவு யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கும், அது எப்படிப் பயன்படுத்தப்படும் என்ற கேள்வியும் உள்ளது.

இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கூகுளை எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

"பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இந்திய அரசிடம் எந்தவொரு பயனுள்ள தீர்வும் இல்லை. அரசாங்கத்தால் நடத்தப்படும் ஒரு ஆப் ஸ்டோர் அதன் பயனர்களின் தனிப்பட்ட தரவை அரசாங்கத்திற்கு எளிதாக வழங்க முடியும். மேலும் இந்தத் தரவை அரசாங்கம் பயன்படுத்தலாம் இதை தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் பயன்படுத்தலாம்.

இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் முகுல் ரோஹத்கி 2015 ஆம் ஆண்டில் தனி நபர் தரவுரிமை, அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளின் கீழ் வராது என்று கூறினார். இந்தக் கருத்தை உச்சநீதிமன்றம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முற்றிலுமாக நிராகரித்தது.

எங்கள் தரவுகள் குறித்த அரசின் மீதான எங்கள் நம்பிக்கைக்கு, எங்களுக்கு எந்தக் காரணமும் இல்லை. எங்களுக்குத் தரவுப் பாதுகாப்புச் சட்டம் தேவை என்று கோருகிறார் கோட்ஸ்தானே.

டிஜிட்டல் இந்தியாவின் மீது கூகுளின் பிடி

கூகுள் ஏற்கனவே இந்தியாவில் ஏராளமான விசாரணைகளை எதிர்கொண்டுள்ளது, இந்த மாதத்தில் அமெரிக்க அரசாங்கமும் போட்டி இன்றி எடுக்கப்பட்ட முடிவுகளுக்காக, கூகுள் மீது வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

ஆயினும்கூட, இந்திய அரசாங்கமோ அல்லது உள் நாட்டு ஸ்டார்ட்- அப் நிறுவனங்களோ, கூகிளை விட்டு வெளியேறுவது எளிதல்ல. காரணம், கூகுள், இந்த நாட்டின் டிஜிட்டல் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, அதன் வரம்பைத் தொடர்ந்து விரிவாக்கியும் வருகிறது.

அடுத்த ஏழு ஆண்டுகளில் பத்து பில்லியன் டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்வதாக ஜூலை மாதம், கூகுள் உறுதியளித்துள்ளது. இது பிரதமர் நரேந்திர மோதியின் கனவுத் திட்டமான, 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்திற்கு வலு சேர்க்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: