சேலம் 8 வழிச்சாலை வழக்கில் இன்று தீர்ப்பு: நீங்கள் அறிய வேண்டிய 10 முக்கிய தகவல்கள்

நெடுஞ்சாலைத்துறை

பட மூலாதாரம், HIGHWAYS DEPT

பிரசுரிக்கப்பட்டது

சேலம் - சென்னை எட்டு பசுமை வழிச்சாலை அமைக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 8) தீர்ப்பளிக்கவுள்ளது.

அந்த வழக்கு தொடர்பான முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

1. இந்திய அரசின் பாரத்மாலா பரியோஜ்னா என்ற சாலை போக்குவரத்து திட்டத்தின்கீழ் 34,800 கி.மீ தூரத்துக்கு ரூ. 5.35 லட்சம் கோடி மதிப்பில் சாலை போக்குவரத்து திட்டத்தை தொடங்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது. இதில் 2,921 கி.மீ தூரத்துக்கான நெடுஞ்சாலை கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.

2. சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தை எளிமைப்படுத்தவும் பயண நேரத்தில் இரண்டரை மணி நேரம் குறைக்கும் நோக்குடனும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக மத்திய அரசு கூறுகிறது.

3. இதன் ஒரு அங்கமாக, சேலம் - சென்னை இடையிலான 277.3 கிலோ மீட்டர் தூரத்துக்கான எட்டு வழிச்சாலையை ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நிறைவேற்ற இந்திய நெடுஞ்சாலைத்துறையும் தமிழக அரசும் திட்டமிட்டுள்ளன.

4. சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் வழியாக சாலை அமைப்பது திட்டத்தின் நோக்கம்.

5. இதற்காக 1,900 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு ஆணை வெளியிட்டது. இந்த திட்டத்தால் பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பறிக்கப்படும், காடுகள், மலைகள் அழிக்கப்படும் என சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

6. இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், விவசாயிகள், அன்புமணி ராமதாஸ், வழக்குரைஞர் சூர்யபிரகாசம், பி.வி. கிருஷ்ணமூர்த்தி, எஸ்.யுவராஜ், ஆர். செளந்தர்ராஜன் உள்ளிட்டோர் சார்பில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தன.

தீர்ப்பு

பட மூலாதாரம், SUPREME COURT OF INDIA

7. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. அதில், சென்னை - சேலம் இடையிலான எட்டு வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வார காலத்துக்குள் திரும்ப ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

8. திட்டம் தொடர்பான ஆலோசனை அறிக்கை ரத்து செய்யப்பட வேண்டும், உத்தேச திட்டத்தால் வனப்பகுதிகள், நிலப்பகுதிகள், நீர் நிலைகள், கானுயிர்கள் மற்றும் தாவரங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆழமாக ஆய்வு செய்து அறிக்கை தயாரித்த பிறகே திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவில் கருத்து கூறியிருந்தது.

9. இந்த உத்தரவை எதிர்த்து இந்திய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மத்திய அரசு விடுத்த வேண்டுகோளை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏற்கவில்லை.

10. கடைசியாக கடந்த அக்போடர் மாதம் நடந்த விசாரணையின்போது, தற்போதைய நிலையில் திட்டத்துக்காக சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்றும் முதலில் மாநில அரசு நிலத்தை கையகப்படுத்த வேண்டும். அதன் பிறகே சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து சுற்றுச்சூழலுக்கு அனுமதி கோரப்படும் என சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார். ஆனால் அதற்கு எதிர் மனுதாரர்கள் ஒட்டுமொத்தமாக ஆட்சேபம் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கை தொடக்கத்தில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு காணொளி மூலம் விசாரித்தது. இதில் அருண் மிஸ்ரா கடந்த செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அவருக்குப் பிறகு நீதிபதிகள் கான்வில்கர், பி.ஆர். கவாய், கிருஷ்ண முராரி அடங்கிய அமர்வு தேதி குறிப்பிடாமல் கடந்த அக்டோபர் மாதம் ஒத்திவைத்த இந்த வழக்கின் தீர்ப்பு, செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: