You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரிபப்ளிக் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீதான வழக்கு: குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த மகாராஷ்டிர காவல்துறை
இந்தியாவின் முக்கிய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணையப் பக்கங்களில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை
ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் இருவர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் வெள்ளிக்கிழமை அன்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்டதாக மகாராஷ்டிர மாநில காவல்துறை தெரிவித்துள்ளது என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.
உள்ளரங்க வடிவமைப்பாளர் அன்வே நாயக் மற்றும் அவரது தாயார் குமுது ஆகியோரைத் தற்கொலைக்கு தூண்டியதாக அர்னாப் கோஸ்வாமி, ஃபெரோஸ் ஷேக் மற்றும் நித்திஷ் சர்தா ஆகிய மூவர் மீதும் 2018ஆம் ஆண்டு மகாராஷ்டிர காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அலிபாகில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் 65 பேரின் பெயர்கள் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ளன என்று அரசு தரப்பு வழக்கறிஞர் பிரதீப் கராத். தெரிவித்துள்ளார் என்கிறது அந்தச் செய்தி.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் படக்கூடாது என்று அர்னாப் கோஸ்வாமி பாம்பே உயர் நீதிமன்றத்தை வியாழனன்று அணுகி இருந்தார். ஆனால் அவரது மனு இன்னும் விசாரிக்கப்படவில்லை.
குற்றம்சாட்டப்பட்டுள்ள அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட மூவரும் நவம்பர் 4ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு நவம்பர் 11ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது.
தமிழகத்தில் 2 கோடி தடுப்பூசிகள்
தமிழகத்தின் 2,600 இடங்களில் 2 கோடி தடுப்பூசிகளைப் பாதுகாப்பாக இருப்பு வைப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்கிறது தினமணி செய்தி.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சுகாதார மையங்கள், மாநில மருத்துவப் பணிகள் கழகம் என தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 2,600 இடங்களில் தடுப்பூசிகளைப் பாதுகாப்பாக இருப்பு வைப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்று மாநில பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.
அங்கு மொத்தமாக 2 கோடி தடுப்பூசிகளைத் சேமிக்கலாம். இத்தகைய நடவடிக்கைகளின் வாயிலாக மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் தங்கு தடையின்றி தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என்றாா் அவா்.
டெல்லி விவசாயிகள் போராட்டம் - 'காசு வாங்காமல் வாதிடத் தயார்'
விவசாயிகளுக்காக காசு வாங்காமல் உச்ச நீதிமன்றத்தில் போராடத் தயார் என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் துஷ்யந்த் தவே கூறியுள்ளார் என்கிறது தினத்தந்தி செய்தி.
இந்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் விவசாயிகள் சார்பில் டெல்லி சலோ (டெல்லி நோக்கி பேரணியாக செல்லுதல்) போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, அரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த நவம்பர் 26ஆம் தேதி பேரணியாக திரண்டனர். தொடர்ந்து போராட்டம் நீடித்து வருகிறது என்கிறது தினத்தந்தி.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்