உதயநிதி திருக்குவளையில் கைது: அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் என குற்றச்சாட்டு - திமுக சாலை மறியல்

பிரசுரிக்கப்பட்டது

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் அனுமதி இன்றி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

உதயநிதி ஸ்டாலின் திருக்குவளையில் கைதானதை அடுத்து நீடாமங்கலம் - மன்னார்குடி சாலையில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து உதயநிதி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற திமுகவின் தேர்தல் பிரசாரத்தை திருக்குவளையில் தொடங்கிய சில மணிநேரத்தில், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். கொரோனா காலத்தில், தொண்டர்கள் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்கு அனுமதி பெறப்படவில்லை எனக் கூறி காவல்துறையினர் உதயநிதியை கைது செய்ததாக கூறப்பட்டது.

மறைந்த முதல்வர் மு.கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளையில் அவரது இல்லத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய சமயத்தில் உதயநிதி கைதாகியுள்ளார். 100 நாட்கள் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக முன்னதாக உதயநிதி அறிவித்த நிலையில், முதல் நாளே கைதாகியுள்ளார்.

கைதான உதயநிதி ஸ்டாலின் ஊடகத்தினரிடம் பேசியபோது, ''திமுகவின் பிரசாரத்தை முடக்க அரசு முயற்சி செய்கிறது; எத்தனை தடைகள் வந்தாலும் மக்களை சந்திப்போம். காவல்துறையினரின் கெடுபிடிகள் இருந்தாலும் மக்களை சந்தித்தே தீருவேன்,'' என தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது ஜனநாயக விரோத செயல் என கூறி திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனியார் மருத்துவக் கல்லூரி கட்டணம்: நீதிமன்றம் வேதனை

தனியார் மருத்துவக் கல்லூரிகள் விதிக்கும் மிகுதியான கட்டணத்தால் அரசுப் பள்ளியில் படித்து அங்கு சேரும் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வேதனை தெரிவித்துள்ளது.

நெல்லையைச் சேர்ந்த கிரஹாம்பெல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்தப் பிரச்சனை தொடர்பாக ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில்,

"மருத்துவ கல்வி கட்டண நிர்ணய குழு, தனியார் மருத்துவக் கல்லூரிக்கான கல்வி கட்டணங்களை குறைக்காமல், சென்ற ஆண்டின் கட்டணத்தையே நிர்ணயித்துள்ளதுடன், சில வகை மருத்துவ கல்வி கட்டணங்களை பல மடங்கு உயர்த்தியும் நிர்ணயித்துள்ளது. தமிழக மாணவர்களில் 40% மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்கள், நீட் தேர்வினால் சென்ற ஆண்டு அவர்களில் 6 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.

இந்த வருடம் தமிழக அரசு 7.5% மருத்துவ கல்லூரி இடங்களை அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கியுள்ளது. ஆனால் அரசுப் பள்ளி மாணவர்கள் பலருக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ இடம் கிடைத்துள்ளது. அதிகப்படியான கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் இடம் கிடைத்தும், படிப்பை பாதியில் கைவிடும் சூழ்நிலை உருவாகும்.

எனவே ஏழை அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பை தொடரும் விதமாக, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் தற்போதைய கல்விக் கட்டண நிர்ணயத்தை ரத்து செய்தும், குறைவாக நிர்ணயிக்கவும் உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.

"பல வலிகளுக்குப் பிறகு... "

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, மூத்த வழக்கறிஞர் ஒருவர் தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்த அரசுப்பள்ளி மாணவரின் கட்டணத்தை ஏற்றுள்ளார். அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்கள், பல வலிகளுக்குப் பிறகு, மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், கட்டணம் செலுத்த இயலாமல், பாதியிலேயே படிப்பை கைவிடுவது வலி மிகுந்தது. அரசு நல்ல நோக்கத்துடன் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. அவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க மூத்த வழக்கறிஞர்கள், பிரபலமானவர்கள் ஏழை மாணவர் ஒருவரை தத்தெடுத்து, அவர்களின் கட்டணத்தை ஏற்க முன்வர வேண்டும் என கருத்துத் தெரிவித்தனர்.

மேலும் இது குறித்து, சுயநிதி கல்லூரிகளின் கட்டண நிர்ணயக்குழு, சுகாதாரத்துறை முதன்மை செயலர், மருத்துவக்கல்வி இயக்குநர், செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: