சசிகலா விடுதலை: "ரூ.10 கோடி அபராத தொகை செலுத்தியதால் ஜனவரியில் வெளியே வரலாம்"
(இன்று (19 நவம்பர் 2020, வியாழக்கிழமை) இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

பட மூலாதாரம், AFP
சசிகலா தரப்பில், 10 கோடி ரூபாய் அபராதத் தொகையைச் செலுத்தியதன் மூலம் அவரை சிறையில் இருந்து விடுதலை பெறச் செய்யும் நடைமுறயை அவரது அணியினர் தொடங்கியிருப்பதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
சசிகலா தரப்பினர் மற்றும் வழக்கறிஞர்கள், சம்பந்தப்பட்ட பெங்களூரு நகர சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில், இரண்டு டிமாண்ட் டிராஃப்ட்களைச் செலுத்தி இருப்பதாக கூறுகிறது, அந்த நாளிதழ்.
அடுத்த ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி அவர் விடுதலை ஆக திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஒருவேளை பணத்தைச் செலுத்தப்படாதிருந்தால் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதிவரை சசிகலாவின் சிறை தண்டனை நீடிக்கலாம் என்றும் முன்பு தகவல் உரிமைச் சட்டம் மூலம் சிறை நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்ட பதிலில் தெரிய வந்தது.
இதே வேளை, கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா விடுதலை விவகாரத்தால் கட்சித்தலைமை தொடர்பாக தற்போது அதிமுக கொண்டுள்ள நிலைப்பாட்டில் எந்த தாக்கமும் ஏற்படாது என்று தெரிவித்தார்.
ஆனால், சசிகலாவின் விடுதலை மூலம் தமிழக அரசியலில் தாக்கம் இருக்கும் என்று அவரது உறவினர் டி.டி.வி. தினகரன் நடத்தி வரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செய்தித்தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி கூறினார். தனது அரசியல் உத்தி குறித்து சசிகலாவே வெளிப்படுத்துவார் என்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க சட்டபூர்வ நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

பட மூலாதாரம், HINDU TAMIL
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதிக்க சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விரைவில் சட்ட வரைவு தயாரிக்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசின் வழக்கறிஞர் தெரிவித்தாக இந்து தமிழ் திசை இணையதள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதிக்கக் கோரி மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.முத்துக்குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் ஏ.கண்ணன், பாஸ்கர் ஆகியோர் வாதிட்டனர்.
'ஆன்லைன் ரம்மி விளையாட்டால் உயிர் பலிகள் அதிகரித்து வருகின்றன. பிரபலமானவர்கள் ஆன்லைன் சூதாட்டத்துக்கு விளம்பரம் செய்கின்றனர். தமிழகத்தில் சினிமா நடிகர்களைப் பின்பற்றுவது அதிக அளவில் உள்ளது. எனவே, விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதிக்கவும், அதற்கான சட்டத்தை நிறைவேற்றவும் எவ்வளவு காலம் தேவைப்படும்? சட்டம் நிறைவேற்றப்படுமா? விதிகள் வகுக்கப்படுமா? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 24-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளதாக இந்து தமிழ் திசை இணையதள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபைசர் தடுப்பூசியில் தீவிரமான பக்கவிளைவுகள் இல்லை'

பட மூலாதாரம், DINAMANI
ஃபைசர் மற்றும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியில் 95 சதவிகிதம் பயன்திறன் இருப்பதாகத் தினமணியில் செய்தி வெளியாகி உள்ளது.
ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் இடைக்கால முடிவுகளின் 2-ம் கட்ட முடிவை வெளியிட்டுள்ளன. 2 முறை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசியில் 95 சதவிகிதம் பயன்திறன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி வயது மூத்தவர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகாமல் இருப்பதையும் பாதுகாப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறது அந்த நாளிதழ் செய்தி.
மேலும் தீவிரமான பக்கவிளைவுகள் எதுவும் தென்படவில்லை என்று தெரிவித்துள்ள நிறுவனம், பெரும்பாலும் சோர்வாக இருப்பதாக மட்டுமே புகார் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. தன்னார்வலர்களில் 4 சதவிகிதத்தினருக்கு மட்டுமே இந்த பாதிப்பு இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், அவசரப் பயன்பாட்டுக்கான அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் விரைவில் ஒப்புதல் கோரவுள்ளன என்கிறது தினமணி.
"தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டில் இடம்பெறும் கேள்விகள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன"

பட மூலாதாரம், THE HINDU
ஆர்டிஐ மூலம், சென்செக்ஸ் 2021 எப்போது தொடங்கப்படும் என்பது குறித்தும், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு குறித்தும் சில கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. அதற்கு பதிலளித்து இருக்கும் இந்திய மக்கள் தொகை அலுவலக தலைமை பதிவாளர் (Registrar General of India), தேசிய மக்கள் தொகை பதிவேடு கேள்விகள் இறுதி செயப்பட்டு வருகின்றன என விடையளித்து இருக்கிறார் என்கிறது தி இந்து நாளிதழ்,
அதோடு, சென்செக்ஸ் 2021 எப்போது தொடங்கப்படும் என்பதற்கான விவரங்கள் தங்களிடம் இல்லை எனக் குறிப்பிட்டு இருக்கிறார் எனச் சொல்லி இருக்கிறது இந்து.
தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டின் சமீபத்திய தகவல்கள், மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகியவை ஏற்பல் முதல் செப்டம்பர்வரை ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் முதலாவதாக மேகாலயா, அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவு, புது டெல்லி முனிசிபல் கவுன்சில் பகுதியில் ஏர்பல் 1ஆம் தேதி அத்திட்டம் தொடங்கும் என்றும் தி இந்து நாளிதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- வட கொரியாவுக்கு சுற்றுலா செல்ல விருப்பமா? இதற்கு நீங்கள் தயாரா? மாறுபட்ட பயண அனுபவம்
- பிச்சை எடுத்தாலும், கொடுத்தாலும் தண்டனை - இலங்கை போலீஸ்
- க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் காலமானார் - தமிழுக்கு அவரது பங்களிப்பு என்ன?
- ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற மறுக்கும் டிரம்ப்
- மருத்துவ தர வரிசைப் பட்டியல்: சாதித்து காட்டிய அரசு பள்ளி மாணவர்கள்
- பிகாரிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ பற்றி தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
















