குஷ்பு பாஜகவில் சேர்ந்தபின் காங்கிரஸ் மீது விமர்சனம்: "வெளியில் வந்த பிறகு நடிகை என்பது கேவலமான சிந்தனை"

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

காங்கிரசை விட்டு வெளியேறிய பிறகு, தன்னை நடிகை எனக் குறிப்பிடுவது மிகக் கேவலமான சிந்தனை என்றும் காங்கிரஸ் கட்சிக்குள் பேசுவதற்குக்கூட சுதந்திரம் இல்லையென்றும் குஷ்பு தெரிவித்திருக்கிறார்.

டெல்லியில் திங்கட்கிழமையன்று நடந்த ஒரு நிகழ்வில் நடிகை குஷ்பு உள்ளிட்டவர்கள் பாரதீய ஜனதாக் கட்சியில் இணைந்தனர்.

டெல்லியிலிருந்து குஷ்பு இன்று சென்னை திரும்பினார். பாரதீய ஜனதாக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவருக்கு வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

நீங்கள் உங்களை பெரியாரிஸ்ட் எனச் சொன்னீர்களே என செய்தியாளர்கள் கேட்டபோது, "பெரியார் காங்கிரஸ் கட்சியைக்கூடத்தான் எதிர்த்துள்ளார். நான் அந்தக் கட்சியில் இருக்கும்போது யாரும் அந்தக் கேள்வியைக் கேட்கவில்லையே என்று குறிப்பிட்ட குஷ்பு, "நான் இப்போதும் பெரியாரிஸ்ட்தான். அவர் பெண்கள் சம உரிமையைப் பேசினார். பெண்களுக்கு எதிரான கொடுமைகள், தலித்துகளுக்கு எதிரான கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். அதை நான் ஆதரித்தேன். பா.ஜ.கவிலும் பெண்களுக்கும் தலித்களுக்கும் நல்லதுதான் செய்கிறார்கள்," என்று தெரிவித்தார்.

பெரியாருக்கும் பா.ஜ.கவுக்கும் முரண்பாடு இருக்கிறதே, நீங்கள் எப்படி இக்கட்சியில் சேர்ந்தீர்கள் எனக் கேட்டபோது, "பெரியார் ஓட்டு அரசியலில் இருந்தவரில்லை. அப்படிப் பார்த்தால் பெரியாரைப் பேசுபவர்கள் ஓட்டு அரசியலில் இருந்தபடி அதைப் பேசக்கூடாது" என்று குறிப்பிட்டார்.

பிறகு காங்கிரஸ் அவர் மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளித்தார். "காங்கிரசைப் பொறுத்தவரை என்னை எந்தக் கூட்டத்திற்கும் கூப்பிட்டதில்லை; பேப்பரைப் பார்த்தவுடன்தான் எனக்குத் தெரியவரும். அக்டோபர் 5ஆம் தேதி ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டேன். டெல்லியில் இருந்து கேட்டுக்கொண்டார்கள் என்பதால் அதில் கலந்துகொண்டேன். இருக்கும் இடத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த விசுவாசத்தைக்காட்டிவிட்டுதான் வெளியில்வந்தேன்" என்று தெரிவித்தார்.

கூட்டத்திற்குக் கூப்பிட்டால் ஷூட்டிங்கில் இருப்பதாக பதில் சொன்னதாகக் குற்றம்சாட்டப்படுகிறதே என்று கேட்டபோது, "அண்ணாத்தே படத்தின் ஷூட்டிங் போன ஆண்டுதான் இருந்தது. அதுவும் 20 நாட்கள்தான் எனக்கு ஷூட்டிங்கே. அதையும் ஐந்தைந்து நாட்களாக பிரித்து நடித்தேன். இருந்தது. ஆக ஒரு மாதத்தில் ஐந்து நாட்களைத் தவிர மீதமிருந்த 25 நாட்களில் என்னைக் கூட்டத்திற்கு அழைத்திருக்கலாமே.." என்று பதிலளித்தார்.

மேலும், நிறைய டிவி விவாதங்களுக்கு வராததற்குக் காரணம், எதையும் எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கக்கூடாது என்பதால்தான் என்றும் இன்றைக்கு காங்கிரஸ் எதிர்க்கும் திட்டங்கள் பலவற்றை ஆரம்பித்தது அந்தக் கட்சிதான் என்றும் குஷ்பு குற்றம்சாட்டினார்.

தேர்தலில் போட்டியிடுவீர்களா எனக் கேள்வி எழுப்பியபோது, "பா.ஜ.கவில் எனக்கு முன்பாக பல தலைவர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்குத்தான் கட்சியைப் பற்றி அதிகம் தெரியும். மூத்த தலைவர்கள் அது குறித்து முடிவெடுப்பார்கள்" என்று பதிலளித்தார்.

தன் கணவரின் வலியுறுத்தலின் பேரில் தான் பா.ஜ.கவில் சேர்ந்ததாகச் சொல்வது மிகக் கேவலமான சிந்தனை என்று குறிப்பிட்ட குஷ்பு, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இருந்தபோது தன்னை நன்றாக நடத்தியதாகத் தெரிவித்தார்.

"ஈவிகேஎஸ் இளங்கோவன் இருக்கும்போது எல்லா நிகழ்விலும் என்னைப் பார்த்திருப்பீர்கள். கூட்டங்களில் நான் பேசிவிட்டுப் போய்விட்டால் கூட்டம் கலைந்துவிடும் என்பதால், நீங்கள் கடைசியில் பேசுங்கள் என்பார். அவரிடம் ஈகோ கிடையாது. காங்கிரஸ் கட்சிக்காக நாடு முழுவதும் பிரசாரம் செய்தபோது, நான் ஒரு நடிகை என்பது தெரியாதா.. ஒரு பெண் புத்திசாலியாக இருக்கக்கூடாது, திறமையாக இருக்கக்கூடாது. அப்படியே மேலேறி வந்தாலும் முட்டாள் மாதிரி நடந்துகொள்ள வேண்டும். நானாவது ஒரு நடிகை எனச் சொல்லிவிட்டு நடிக்கிறேன். நீங்கள் தலைவர் என்று சொல்லிக்கொண்டு நடிக்கிறீர்களே..?" என்று கூறிய குஷ்பு காங்கிரஸ் கட்சி மீது தொடர் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து ஹேமந்த் பிஸ்வாஸ், அஜய்குமார், ஜோதிராதித்ய சிந்தியா, பிரியங்கா சதுர்வேதி, சஞ்சய் ஜா போன்றவர்கள் சென்றுவிட்டார்கள் என்றும் 23 பேர் தலைமைக்கு கடிதம் எழுதியதால் புறக்கணிக்கப்பட்டார்கள் என்றும் கூறிய குஷ்பு, அந்தக் கட்சிக்குள் நினைத்ததைப் பேசமுடியவில்லையென்றால், எப்படி மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்றார்.

கடந்தவாரம் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு பா.ஜ.கவுக்கு எதிராகப் பேசினீர்களே எனக் கேட்டபோது, "ஒரு இடத்தில் இருக்கும்போது கட்சிக்கு விசுவாசம் காட்ட வேண்டும். அதைச் செய்தேன். அப்போது மனசாட்சி இல்லாமல்தான் பேசினேன்" என்று தெரிவித்தார்.

அதற்கு முன்பாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, "ஆறு வருடங்களாக அந்தக் கட்சியில் இருந்துவிட்டு, என்னுடைய நேரம், உழைப்பு ஆகியவற்றைக் கொடுத்த பிறகு அந்தக் கட்சியில் இருந்து வெளியில் வந்திருக்கிறேன். சிந்திக்கும் மூளை வளர்ச்சி இல்லாத கட்சியாக கங்கிரஸ் இருந்திருக்கிறது. தி.மு.கவில் இருந்து வெளியில் வரும்போது நான் குற்றச்சாட்டுகளை வைக்கவில்லை. காங்கிரசிலிருந்து வெளியில் வந்த பிறகும் குற்றச்சாட்டுகளை வைக்கவில்லை. ஆனால், என்னைப் பற்றி குற்றச்சாட்டுகளைச் சொல்லும்போது நான் பதிலடி கொடுத்தாகவேண்டும்" எனத் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: