பிரசாந்த் பூஷணுக்கு தண்டனை மரபு மீறலா? முன்னாள் நீதிபதி சந்துருவின் பார்வை

முன்னாள் நீதிபதி சந்துரு
படக்குறிப்பு, முன்னாள் நீதிபதி சந்துரு
பிரசுரிக்கப்பட்டது

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வழக்கில் உச்சநீதிமன்றம் அதன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தியது சரியல்ல என்று சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் "குற்றவாளி" என்று தீர்ப்பளிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு, ரூ.1 அபராதம் விதித்ததோடு, அபராதத்தை செலுத்தவில்லை என்றால் மூன்று மாதங்களுக்கு சிறை அல்லது மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராக அவர் செயல்படமுடியாது என கூறியது, முன்காலத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு நேர் எதிரான தீர்ப்பாக அமைந்துவிட்டது என முன்னாள் நீதிபதி சந்துரு கூறியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம், இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, ஒரு உயர்தர மோட்டார் சைக்கிளில் இருப்பது போன்ற படம் மற்றும் நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இதுவரை இருந்த நான்கு பேரின் பங்களிப்பு குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பிரசாந்த் பூஷண் தமது டிவிட்டர் பக்கத்தில் கருத்துகளைப் பதிவு செய்திருந்தார்.

அதற்கு விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு பதில் அளித்த பிரசாந்த் பூஷன், தமது டிவிட்டர் தகவல்கள் நியாயமானவை என்று கூறி, அதை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதக்கூடாது என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கில் அவர் குற்றவாளி என அறிவித்த உச்ச நீதிமன்றம், தண்டனையாக அவர் ரூ.1 அபராதம் செலுத்தவேண்டும், செலுத்த தவறினால் மூன்று மாத காலம் சிறை அல்லது வழக்கறிஞராக மூன்று ஆண்டுகள் அவர் பணியாற்ற முடியாது என அறிவித்தது.

இந்த விவகாரத்தில், உச்சநீதிமன்றம் அதன் சிறப்பு அதிகாரத்தின்படி இந்த தண்டனையை அளித்துள்ளதாக கூறியது தவறு என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு.

பிபிசி தமிழிடம் பேசிய முன்னாள் நீதிபதி சந்துரு, உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு முந்தைய காலங்களில் அளிக்கப்ட்ட தீர்ப்புக்கு எதிரான தீர்ப்பாக அமைந்தது எப்படி என்பதை விளக்கினார்.

''பிரசாந்த் பூஷணுக்கு நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் அபராதம் விதித்துவிட்டார்கள். நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்படி (1971) அதிகபட்சமாக ரூ.2000 அபராதமாக விதிக்கலாம். அபராதம் கட்ட தவிறினால் சிறை தண்டனை அளிக்கலாம் என்பதோடு முடிந்துவிட்டது.

அதோடு நிறுத்தாமல் உச்சநீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்றத்துக்குள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தண்டனையை அளிக்கிறோம் என்றார்கள்.

அதாவது, பிரசாந்த் பூஷண் அபராதம் செலுத்தவில்லை என்றால் மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்ற முடியாது என கூறியிருக்கிறார்கள்.

வழக்கறிஞர் தொழில் நடத்துவது குறித்து பார் கவுன்சில் மட்டுமே இறுதி முடிவு எடுக்க முடியும். ஆனால் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்துகிறோம் என்பது உச்சநீதிமன்றம் முன்காலங்களில் அளித்துள்ள தீர்ப்புகளுக்கு எதிராக அமைந்துவிட்டது,''என்கிறார் சந்துரு.

பார் கவுன்சில் முடிவு செய்யவேண்டிய விவகாரத்தில், உச்சநீதிமன்றம் இறுதி முடிவு எடுப்பது சரியானது அல்ல என்கிறார் சந்துரு.

''ஒரு வழக்கறிஞர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் அதை முதலில் மாநில பார் கவுன்சில்தான் முடிவு செய்யவேண்டும்.

பிரசாந்த் பூஷண்

பட மூலாதாரம், பிரசாந்த் பூஷண்

மேல்முறையீடு செய்தால், இந்திய பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்கும். அதையும் மீறி வரும் முறையீட்டை மட்டுமே உச்சநீதிமன்றம் விசாரிக்கமுடியும்.

1990களில் இந்திய பார் கவுன்சிலின் முன்னாள் தலைவராக இருந்த வி சி மிஸ்ரா தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், வழக்கறிஞர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பார் கவுன்சிலுக்குதான் உள்ளது என தீர்ப்பளித்தது.

சிறப்பு அதிகாரம் இருந்தாலும், நாடாளுமன்றம் அளித்துள்ள சட்டத்தின்படி தீர்ப்பு வழங்குவதை விடுத்து, சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்த உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. அதனால், ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது பார் கவுன்சிலின் அதிகாரத்திற்கு உட்பட்டது என தெரிவித்திருந்தது,''என்கிறார்.

ஆனால் பிரஷாந்த் பூஷண் வழக்கில், நேரடியாக உச்சநீதிமன்றம் வழக்கறிஞர் தொழில் நடத்துவதில் இருந்து அவரை மூன்று ஆண்டுகள் விலக்கி வைக்கமுடியும் என கூறுவது சரியல்ல என்கிறார் சந்துரு.

மேலும்,பொது தளத்தில் பிரஷாந்த் பூஷணுக்கு ஆதரவான மனநிலை இருந்ததால், உச்சநீதிமன்றம் ஒரு ரூபாய் அபராதத்தோடு நிறுத்திவிட்டது என்கிறார் சந்திரு.

பொது மக்கள் கொடுத்த அழுத்தம் மற்றும் முன்னாள் நீதிபதிகள், மாணவர்கள் என பலரும் வெளியிட்ட விமர்சனம் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை முடிவுக்கு கொண்டவர காரணமாக அமைந்தது என்கிறார் அவர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றில் கேரளாவின் முன்னாள் முதல்வர் இஎம்எஸ் நம்பூதிரிபாத்துக்கு உச்சநீதிமன்றம் ரூ.50ஐ அபராதமாக விதித்ததை நினைவு கூர்ந்தார். ''கேரளா உயர்நீதிமன்றம் அப்போதைய கேரள முதல்வர் இஎம்எஸ் நம்பூதிரிபாத்துக்கு ரூ.1,000 அபராதம் விதித்தது. ஆனால், உச்சநீதிமன்றம் அந்த அபராத தொகையை ஒரு கம்யூனிஸ்ட் முதல்வரால் செலுத்த முடியாது எனக்கூறி ரூ.50ஆக குறைத்தது.

உச்சநீதிமன்றம் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தவில்லை. அப்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சனம் செய்து பலரும் கட்டுரைகள் எழுதினார்கள்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சனம் செய்ததற்காக யாருக்கும் தண்டனை அளிக்கவில்லை. அதேபோல, பிரஷாந்த் பூஷண் பதவிட்ட ட்விட்டர் கருத்தை லட்சக்கணக்கானவர்கள் தங்களது பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். பிரசாந் பூஷணை தண்டிப்பது போல் அவர்களை தண்டிக்க முடியாது.

அதனால், அவருக்கு அபராதம் மட்டும் விதித்துள்ளார்கள். இஎம்எஸ் நம்பூதிரிபாத் வழக்கில் அபாரதத்தோடு உச்சநீதிமன்றம் வழக்கை முடித்தது. பிரசாந்த் பூஷண் வழக்கில், நீதிமன்ற அவமதிப்புக்கு தண்டனை கொடுத்ததோடு நிறுத்தாமல், சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தண்டனை அளிக்கிறோம் என கூறியது சரியல்ல,''என்கிறார் சந்துரு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: