You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து இந்தியாவில் எப்போது கிடைக்கும்?
இந்தியாவின் முக்கிய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தி இந்து - கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து இந்திய சந்தைகளுக்கு வர இன்னும் குறைந்தது 12 மாத காலம் ஆகும் என்று இந்திய அரசு அதிகாரிகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்றக் குழுவிடம் வெள்ளியன்று தெரிவித்துள்ளனர் என்று தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டறிவதற்கான சாத்தியம் நிறைந்த காலவரையறை அடுத்த ஆண்டின் சில காலத்திலேயே இருக்க முடியும் என்றும் அவர்கள் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையிலான இந்த நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளனர் என்கிறது அந்த செய்தி.
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் பரிசோதனைகள் வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு அப்போது முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சமீபத்தில் ஆய்வு நிறுவனங்களுக்கு கடிதமொன்றை எழுதி இருந்தது. ஆனால் அடுத்தநாளே அதில் இருந்து பின் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
"எல்லாம் சரியாக நடந்தால் தடுப்புமருந்து கிடைக்க இன்னும் 12 மாத காலம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்," என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார் என்கிறது அந்த செய்தி.
மனிதர்களின் உடலில் செலுத்தி பரிசோதனை செய்வதற்காக, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் (Covaxin), சைடஸ் கேடில்லா நிறுவனத்தின் சைக்கோவ்-டி (ZyCov - D) உள்ளிட்ட ஐந்து நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் அலுவலகம் அனுமதி அளித்துள்ளது.
தினத்தந்தி - எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க நிறுவனம் கௌரவம்
குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு, தாய் சேய் நலம் மற்றும் சுற்றுச்சூழலில் சிறந்த சேவை செய்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டி 'பால் ஹாரீஸ் ஃபெல்லோ" என்ற கௌரவப் பட்டத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்று வழங்கி பாராட்டி உள்ளது என்கிறது தினத்தந்தி செய்தி.
அமெரிக்கா நாட்டின் சிகாகோ நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு 'தி ரோட்டரி ஃபவுண்டேஷன் ஆஃப் ரோட்டரி இண்டர்நேஷனல்' என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பு, குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு, தாய் சேய் நலம், சுற்றுச்சூழல், உலக சமாதானம் போன்ற துறைகளில் சிறப்பான முறையில் சேவையாற்றுபவர்களை 'பால் ஹாரீஸ் ஃபெல்லோ" என்று அழைத்து கௌரவப்படுத்தி வருகிறது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இதுபோன்ற சேவையை பாராட்டி அவரை 'பால் ஹாரீஸ் ஃபெல்லோ" என்று கௌரப்படுத்தி உள்ளது என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்து தமிழ் திசை - தமிழக அரசு ஊழியர்களுக்கு மதிப்பூதியம் ரத்து
தமிழக அரசு ஊழியர்களுக்கு சிறப்பான பணிக்காக வழங்கப்படும் மதிப்பூதியம் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
தற்போது கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள நிதிச்சுமையை கருத்தில் கொண்டு செலவின குறைப்பு அடிப்படையில், இவர்ளுக்கான மதிப்பூதியம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், மதிப்பூதியம் வழங்கப்படாது.
மதிப்பூதியத் தொகை ஏற்கெனவே செலுத்தப்பட்டிருப்பின் அதை திரும்ப பெற அவசியம் இல்லை என்று தமிழக நிதித் துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஓய்வூதியர்கள் உயிர்வாழ்வதை காட்ட நேரிலோ அல்லது உயிர்வாழ் சான்றிதழையோ அளிக்க தேவையில்லை என்றும் நிதித் துறை தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :