தமிழக நெசவாளர் துயரம்: பட்டு சேலைகள் தேக்கம், ஆர்டர் இல்லை, கட்டட வேலைக்கு செல்லும் நிலை

    • எழுதியவர், மு.ஹரிஹரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

கொரோனா நோய்த்தொற்று பரவலும், அதனை கட்டுப்படுத்துவதற்காக அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்ட பொது முடக்கமும் நெசவுத்தொழிலாளர்களை கடுமையாக பாதித்துள்ளது. பாரம்பரியமாக நெசவுத் தொழில் செய்துவந்த பலரது வீடுகளில் உள்ள தறி இயந்திரங்கள் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக அசைவின்றி கிடக்கின்றன.

25 வருடங்களுக்கும் மேலாக கைத்தறி நெசவு செய்துவந்த குமார், ஜூன் மாதம் முதல் கட்டட வேலைக்கு சென்று வருகிறார்.

"கோவை மாவட்டத்தின், பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள பெரிய நெகமம் பகுதியில் பல தலைமுறைகளாக கைத்தறி நெசவுத் தொழில் செய்து வருகிறோம். எனது மனைவியும், நானும் காலை 5 மணிக்கு தறியில் அமர்ந்தால், இரவு 11 மணி வரை தறி ஓட்டுவோம். ஒரு சேலையை தறியில் நெய்து முடிப்பதற்கு 2 அல்லது 3 நாட்கள் ஆகிவிடும். ஒரு சேலைக்கு 800 ரூபாய் கிடைக்கும். வார விடுமுறை, பண்டிகை விடுமுறை என்றெல்லாம் கிடையது. வருடம் முழுவதும் தறி ஓடிக்கொண்டேதான் இருக்கும். அதன் சத்தம் தான் எங்களின் உயிர் துடிப்பு. கொரோனா நோய்த்தொற்று காரணமாக தறி ஓட்டுவதை நிறுத்தி 100 நாட்களாகிவிட்டது. வாழ்வாதாரத்திற்கு வேறுவழி இல்லாததால் கட்டடப் பணிக்கு தினக்கூலியாக சென்று வருகிறேன். எனக்கு முந்தைய தலைமுறையினர் கூட இப்படி ஒரு நெருக்கடியான சூழலை சந்தித்திருக்கமாட்டார்கள்" என்கிறார் இவர்.

"கைத்தறி நெசவு செய்துவந்த எனது மனைவி காட்டு வேலைக்கு செல்கிறார். கல்லூரி முதலாமாண்டு படிக்கும் மகனும், 11ஆம் வகுப்பு படிக்கும் மகளும் வீட்டில் இருக்கின்றனர். முன்பை விட செலவுகளும் அதிகமாகியுள்ளன. அரசு தரும் ரூ.2000 நிதி உதவியும், ரேஷன் அரிசியும் சில வாரங்களுக்கு தான் உதவின. அதனால், கிடைக்கும் வேலையை செய்து உயிர் வாழ வேண்டிய நிலையில் உள்ளோம். எனது ஊரில் நெசவுத்தொழில் செய்துவந்தவர்கள் அனைவரும் தினக்கூலிகளாக மாறிவிட்டனர். கொரோனா நோய்த் தொற்றும், பொதுமுடக்கமும் நெசவுத்தொழிலை முற்றிலுமாக முடக்கிவிட்டன. எங்கள் வீடுகளில் தறிச் சத்தம் கேட்காமல் இருப்பது, மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறது" என வேதனையுடன் தெரிவிக்கிறார் நெசவாளர் குமார்.

தமிழகத்தின் கோவை, ஈரோடு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி சேலைகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படும்.

நெசவாளர்களின் நிலை குறித்து பிபிசியிடம் விவரித்த கோவை மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்கத்தைச் சேர்ந்த இ.எல்.ராஜகோபாலன், "கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள நெசவாளர்கள் உற்பத்தி செய்வதை அரசு வாங்கிக்கொள்கிறது. ஆனால், தனியாருக்கு தறி ஓட்டும் நெசவாளர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. காரணம், அவர்களது உற்பத்திக்கான பணமும் கிடைக்கவில்லை, அடுத்தடுத்த ஆர்டர்களும் வரவில்லை. போக்குவரத்து முடக்கத்தால் குஜராத் மாநிலத்தின் சூரத்தில் இருந்து வரும் மூலப்பொருட்களான ஜரிகை, நூல் மற்றும் பெங்களூரில் இருந்து வரும் பட்டும் கிடைக்கவில்லை. இதனால், பட்டு சேலை மற்றும் ஜவுளி வியாபாரிகளும் கடும் நெருக்கடியில் உள்ளனர்" என்கிறார் இவர்.

"நெசவாளர்களுக்காக அரசு அறிவித்த 2000 ரூபாய் நிதி உதவி 50 சதவிகிதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அமைப்புசாரா நெசவாளர்கள் உட்பட அனைத்து நெசவுத் தொழிலாளர்களுக்கும் உடனடியாக நிதி உதவி வழங்கப்பட வேண்டும். மேலும், கடந்த 9 மாதங்களாக மூத்த நெசவாளர்களுக்கான ஓய்வூதிய தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு வழங்கும் 1,000 ரூபாய் ஓய்வூதியத் தொகையை நம்பி பலர் உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கேட்டாலும் பதிலளிப்பதில்லை. இதனால் தான் தமிழகத்தில் நெசவாளர்களின் எண்ணிக்கையும் சரிந்து வருகிறது. கொரோனா பொதுமுடக்கம் மேலும் நிலையை மோசமாக்கிவிட்டது. எனவே, விவசாயத்தைப் போலவே நெசவுத்தொழிலுக்கும் முக்கியத்துவம் அளித்து, நெசவாளர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்கி, நிதி உதவி அளித்து காப்பாற்ற வேண்டும்" என கோரிக்கை வைக்கிறார் ராஜகோபாலன்.

கோவை மாவட்டத்தில் உள்ள சிறுமுகை மற்றும் அன்னூர் பகுதிகளிலும், ஈரோடு மாவட்டத்தின் கோபிச்செட்டிப்பாளையத்திலும் கைத்தறி நெசவு அப்பகுதி மக்களின் பிரதானத் தொழிலாக உள்ளது.

பொதுமுடக்கம் காரணமாக போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், சிறுமுகையில் மட்டுமே சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான சேலைகள் தேங்கி இருப்பதாக கூறுகிறார் நெசவாளர் டி.ஆர்.ராமசாமி.

"கைத்தறி சேலை உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களை, நெசவாளர்களுக்கு முதலாளிகள் வழங்கிவிடுவர். அதனைப் பயன்படுத்தி உரிய நேரத்திற்குள் சேலையை நெய்து முடித்து ஒப்படைக்க வேண்டும். அதிக ஈரப்பதம் அல்லது கடும் வெப்பம் இருந்தாலும் நெசவு செய்ய முடியாது. மிதமான சூழல் இருந்தால் மட்டுமே சேலை நெய்ய முடியும். ஒரு சேலையை உருவாக்க, குறைந்தது 3 நபர்கள் வேலை செய்வார்கள். கடினமான டிசைன்கள் இருந்தால் ஒரு சேலைக்கு மட்டுமே அதிக நாட்கள் தேவைப்படும்.

உன்னிப்பாக கவனித்து சேலை நெய்வதால் நெசவுத்தொழிலாலர்களுக்கு விரைவில், பார்வை குறைபாடு ஏற்படும், முதுகு தண்டில் பாதிப்பு ஏற்படும், கால் மற்றும் மூட்டுகளில் வலி இருக்கும். இவ்வாறு, ஏராளமான நெசவாளர்களின் கடின உழைப்பினால் உருவான சேலைகள் உலக அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளன. ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக போக்குவரத்து முடங்கியிருப்பதால் உற்பத்தி செய்த சேலை மற்றும் ஆடை ரகங்கள் அனைத்தும் நெசவாளர்களிடம் தேங்கியுள்ளது.

எங்களுக்கு ஆர்டர் கொடுத்த முதலாளிகளுக்கே வியாபாரம் இல்லாததால் அடுத்த சில மாதங்களுக்கு வேறு ஏதாவது வேலைபார்த்து பிழைத்துக்கொள்ளுங்கள் என கூறிவிட்டனர். இதனால், 20 கோடி ரூபாய் அளவிற்கு சிறுமுகையில் கைத்தறி சேலைகள் தேங்கியுள்ளன" என்கிறார் நெசவாளர் ராமசாமி.

நெசவாளர்களிடம் தேங்கியுள்ள சேலைகளை அரசே வாங்கிக்கொண்டு உதவ வேண்டும் என கோரிக்கை வைக்கிறார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நெசவாளரும், தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான இ.முத்துக்குமார்.

"காஞ்சிபுரம் மாவட்டத்தில் 32 ஆயிரம் தறிகள் உள்ளன. இதில் 72 ஆயிரம் நெசவுத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 5 பட்டுக் கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 6 ஆயிரம் நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். பொதுமுடக்கத்தால் தற்போது 90 கோடி ரூபாய் அளவிற்கு காஞ்சிபுரம் பட்டு சேலைகள் நெசவாளர்களிடம் தேக்கமடைந்துள்ளன."

"மேலும், வங்கியில் பெற்ற கடன், அதற்கான வட்டி, வேலையின்மை, உற்பத்தி செய்த சேலைக்காண பணம் வராத காரணத்தினால் நெசவாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்த சூழ்நிலையை சரி செய்ய அரசு ஒவ்வொரு நெசவாளருக்கும் மாதம் 7,500 ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால் 2000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது.

கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நெசவுத் தொழிலாளர்களை காப்பாற்ற, தேங்கியுள்ள சேலைகளை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் கடனில் சிக்கியதால் 1989 மற்றும் 1995ஆம் ஆண்டுகளில் நெசவாளர்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அப்போது அன்றைய அரசாங்கங்கள் நெசவாளர்களிடம் தேங்கியிருந்த சேலைகளை வாங்கிக் கொண்டன. அந்த நடவடிக்கையால் நெசவுத்தொழில் மீண்டும் புத்துயிர் பெற்றது. அதேபோன்று, இப்போதும் நடவடிக்கை எடுத்து, நோய்த் தொற்று மற்றும் பொருளாதார பாதிப்பில் சிக்கித் தவிக்கும் நெசவாளர்களை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும்" என வேண்டுகிறார் முத்துக்குமார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: