சாத்தான்குளம்: பெயரளவிலான நடவடிக்கைகள் எதற்கும் உதவாது - கமல் ஹாசன் அறிக்கை

பிரசுரிக்கப்பட்டது

சாத்தான்குளம் விவகாரத்தில் பெயரளவிலான நடவடிக்கைகள் எதற்கும் உதவாது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்கள் கமல் ஹாசன் கூறி உள்ளார்.

சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாத்தான்குளத்தில் நிகழ்ந்திருக்கும் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகிய இருவரின் மரணமும், அதனை சுற்றி நிகழ்ந்திருக்கும் மனித உரிமை மீறல்களும், சட்ட மீறல்களும் நம்மில் எவருக்கு வேண்டுமானாலும் நிகழக்கூடும் என்ற அச்சத்தை நம்மிடையே விதைத்திருக்கிறது,” என குறிப்பிட்டுள்ளார்.

“ரத்தம் சொட்ட சொட்ட ஒருவரை கொல்வது கொலைபாதாகக் குற்றம். அதை செய்தவர் எவராயிருந்தாலும் அந்த தவறுக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்கின்ற குரல்களுக்கு இடையில் இரண்டு காவல் உதவியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும் போது, அரசு இந்த விஷயத்தில் துளிக்கூட உண்மைத்தன்மையைக் கண்டறிய முயலவில்லை என்பது தெளிவாக தெரிகிறது,” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

``நான் தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன், இரண்டு காவல் உதவியாளர்கள் நினைத்தால் இரண்டு கைதிகளை, காவல் நிலையத்திலிருந்து, சிறைச்சாலைக்கு மாற்றிவிட முடியுமா? அவ்வாறு செய்ய எத்தனை துறைகள் அவர்களுக்கு உதவி இருக்க வேண்டும்? எத்தனை பேர் உடனிருந்திருக்க வேண்டும்? அந்த உண்மைகளை ஆராயாமல் பெயரளவில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் எதற்கும் உதவாத ஒன்று என உங்களுக்கு புரியவில்லையா? அல்லது இது போதும் என்று அரசு நினைக்கிறதா?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

’’இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவியும், நிவாரணமும் தேவைதான். ஆனால், அதை மட்டும் அவசரமாக அறிவித்துவிட்டு இந்த கொலைகளை முதல்வர் கடந்து விடக் கூடாது. நிதி உதவியைவிட இரண்டு உயிர்களுக்கு நீதி தேவை’’ என குறிப்பிட்டுள்ளார் கமல் ஹாசன்.

ஸ்டெர்லைட் விவகாரம்

’’தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரசின் அடக்குமுறையை செயல்படுத்தும் கரமாக காவல்துறை செயல்பட்டு 13 உயிர்களை குடித்தது. அதற்கு எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசு அலட்சியம் காட்டி மனித உயிர்களின் மதிப்பையும், உரிமையும் காற்றில் பறக்கவிட்டது. இப்போது அதே காவல்துறையின் கரங்கள் இரண்டு உயிரை குடித்துவிட்டு வந்து நிற்கிறது.’’

’’அரசு தன் விசுவாசமாக கரத்தை காக்கும் செயலை செய்யப் போகிறதா? அல்லது சரியானதைச் செய்யப் போகிறதா’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: