சியா கக்கார்: 16 வயதே ஆன டிக்டாக் பிரபலம் தற்கொலை
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

பட மூலாதாரம், Twitter
இந்து தமிழ் திசை: டிக்டாக் பிரபலம் சியா கக்கர் தற்கொலை
டிக் டாக்கில் பிரபலமாக இருந்த சியா கக்கார் என்கிற இளம்பெண், புதுடெல்லியில் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
"தனது நடனத்தின் மூலம் டிக்டாக் பிரபலமானவர் டெல்லியைச் சேர்ந்த சியா கக்கர். இவரை டிக்டாக்கில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். இன்ஸ்டாகிராமில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.
இவரது மரணம் குறித்துப் பகிர்ந்துள்ள புகைப்படக் கலைஞர் விரல் பாயானி, "இனிமையான டிக்டாக் கலைஞர் சியா கக்கர் தற்கொலை செய்து கொண்டார் என்ற வருத்தமான செய்தி கிடைத்தது. அதைப் பதிவிடும் முன், அவரது மேலாளர் அர்ஜுன் சரீனிடம் பேசினேன். அவர், முந்தைய இரவு ஒரு பாடல் தொடர்பாகப் பேசியதாகவும், நல்ல மனநிலையில் அவர் பேசியதாகவும் கூறினார். சியா ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது அவருக்கும் தெரியவில்லை. இந்தப் பாதையை சியா தேர்ந்தெடுத்தது உண்மையில் வருத்தமே. உங்களுக்கு மன அழுத்தம் இருந்தால் தயவுசெய்து இப்படிச் செய்யாதீர்கள்" என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
டிக்டாக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், யூடியூப் உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் சியா இயங்கி வந்தார். சமூக வலைதளத்தில் சியாவைப் பின்தொடர்ந்து வரும் பல ரசிகர்கள் அவரது தற்கொலை குறித்து அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் 14-ம் தேதி அன்று, இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டது நினைவுகூரத்தக்கது. சுஷாந்தின் மரணத்துக்கு அவரது மன அழுத்தமே காரணம் என்று கூறப்படுகிறது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி: "விண்வெளி ராக்கெட் தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி"

பட மூலாதாரம், Getty Images
விண்வெளி ராக்கெட் தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் அறிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
"இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களில் தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்படுகிறது. வணிக ரீதியில் ராக்கெட் உருவாக்குதல், செயற்கைகோள்களை நிறுவுதல், வணிக ரீதியில் செயற்கைகோள்களை ஏவும் சேவையை வழங்க அனுமதி அளித்தல் போன்றவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்படும். இஸ்ரோவின் கோள்களை ஆராய்ச்சி செய்யும் விண்கல திட்டத்திலும் தனியார் துறை பங்கேற்க முடியும்.
தனியார் துறையை அனுமதிப்பதால், இஸ்ரோவின் பணிகள் குறையாது. விண்வெளி நவீன ஆராய்ச்சி, கோள்கள் ஆய்வு, மனிதர்களை விண்ணுக்கும் அனுப்பும் திட்டம் போன்ற பணிகளில் இஸ்ரோ ஈடுபடும்.
விண்வெளியில் தொழில்நுட்பம், சட்ட பாதுகப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவித்தல், நோக்கங்களை கண்காணித்தலுக்காக தனி அமைப்பு உருவாக்கப்படும்" என்று அவர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி: "இந்தியாவில் ஆகஸ்ட் 12 வரை அனைத்து ரயில்களும் ரத்து"

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், விரைவு ரயில்கள், புறநகர் ரயில்கள் என அனைத்து விதமான பயணிகள் ரயில் சேவையும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என இந்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
ஜூலை 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து பயணச்சீட்டுகளும் ரத்து செய்யப்படுகின்றன. எனவே முன்பதிவு செய்த அனைத்து பயணிகளின் கட்டணமும் திரும்பி அளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் ராஜ்தானி ரயில்கள் செல்லும் வழித்தடத்தில் மே 12ம் தேதி முதல் 12 நகரங்களுக்கு இயக்கப்பட்டு வரும் ரயில்களும், ஜூன் 1ம் தேதி முதல் 100 நகரங்களுக்கு தினசரி இயக்கப்பட்டு வரும் ரயில்களும் தொடர்ந்து இயக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:





















