You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கீழடி அகழாய்வு: தோண்ட தோண்ட ஆச்சரியம் - தொழிற்கூட அமைப்பு கண்டுபிடிப்பு
இன்றைய நாளேடுகளில் வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
இந்து தமிழ் திசை: கீழடி அகழாய்வு: தோண்ட தோண்ட ஆச்சரியம் - தொழிற்கூட அமைப்பு கண்டுபிடிப்பு
கீழடி அகழாய்வில் தொழிற்கூட அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக கூறுகிறது இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி.
திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பிப்ரவரி 19-ம் தேதி 6-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது. மார்ச் இறுதியில் கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட அகழாய்வுப் பணி மீண்டும் மே 20-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இதில் மணலூரில் நடந்த அகழாய்வில் சுடு மண்ணாலான உலை, கீழடியில் விலங்கின் எலும்பு, தண்ணீர் செல்வதற்கான வடிகால் அமைப்பு, கொந்தகை யில் முதுமக்கள் தாழிக்குள் மனித எலும்பு, 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய குழந்தையின் முழு உருவ எலும்புக்கூடு, அகரத்தில் நடந்த அகழாய்வில் மண்பானைகள், 17-ம் நூற்றாண்டு தங்க நாணயம் என பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில், கீழடியில் 13 அடி நீள தொழிற்கூட அமைப்பு தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அதன் அருகே நெருப்பு மூலம் இரும்பு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பொருட்கள் தயாரித்ததற்கு அடையாளமாக கருப்பு நிற சாம்பல் துகள்கள் இருந்தன.
கீழடி, அக்காலத்தில் தொழில் நகரமாக இருந்ததற்கான ஆதாரங்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன.
-இவ்வாறாக அந்நாளிதழ் விவரிக்கிறது.
தினத்தந்தி: சென்னையில் வெட்டுக்கிளிகள்
சென்னை திருவொற்றியூர் பகுதியில் வெட்டுக்கிளிகள் அதிகளவில் காணப்படுவதாக கூறுகிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
சென்னை திருவொற்றியூர் ஜோதி நகர் மணலி விரைவு சாலை சந்திப்பில் உள்ள காலி இடம் மற்றும் மழைநீர் கால்வாயை ஒட்டி ஏராளமான எருக்கஞ்செடிகள் உள்ளன. கடந்த 2 நாட்களாக இந்த செடிகளில் உள்ள இலைகள் அனைத்திலும் வழக்கத்தைவிட வித்தியாசமான நிறம் மற்றும் உருவத்தில் பெரிய அளவிலான வெட்டுக்கிளிகள் அமர்ந்து செடியில் இருந்த அனைத்து இலைகளையும் தின்று விடுகின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள எருக்கஞ்செடிகள் அனைத்தும் இலை மற்றும் பூ இல்லாமல் காட்சி அளிக்கின்றன. அருகில் உள்ள மற்ற செடிகளையும் இந்த வெட்டுக்கிளிகள் தின்கின்றன.
கொரோனா தடுப்பு பணிக்காக நேற்று அப்பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்க வந்த ஊழியர்கள், கிருமி நாசினி தெளித்தும் வெட்டுக்கிளிகள் சாகவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த பகுதியில் உள்ள வீடுகளில் அதிகளவில் பூச்செடிகள், தோட்டங்கள் இருப்பதால் அப்பகுதி மக்கள் வெட்டுக்கிளியால் தங்கள் வீட்டில் இருக்கும் செடி, மரங்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். திருவொற்றியூர் பகுதியை அடுத்து உள்ள பொன்னேரி, மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்கள் இருப்பதால் அவற்றுக்கும் இந்த வெட்டுக்கிளிகளால் பாதிப்பு ஏற்படுமோ என அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
தினமணி: சென்னையில் பரவலாக மழை
சென்னையின் பல்வேறு பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
தமிழகத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாள்கள், பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யவும், தலைநகா் சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னையில் மழை பரவலாக பெய்தது. சென்னையின் முக்கியப் பகுதிகளான வடபழனி, ஆலந்தூா், போரூா், திருநின்றவூா், பூவிருந்தவல்லி, ஆவடி, பட்டாபிராம், செம்பரம்பாக்கம், அம்பத்தூா் பகுதிகளிலும் சற்று பலத்த மழை பெய்தது. ராயப்பேட்டை, கொளத்தூா், ஆதம்பாக்கம், சோழிங்கநல்லூா், அனகாபுத்தூா், உள்ளிட்ட சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் காற்றுடன் நல்ல மழை பெய்தது. பொது முடக்கத்தால் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் சென்னை மக்கள் மழையை ரசித்தபடி குளிரை அனுபவித்தனா். நீண்ட நாள்களுக்குப் பிறகு கனமழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
என்கிறது தினமணி செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: