அர்னாப் கோஸ்வாமி மீது காங்கிரஸ் வழக்கு: நடவடிக்கை எடுக்க மூன்று வாரம் தடை

பட மூலாதாரம், Alamy
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவதூறாகப் பேசியதாக பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி மீது பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்யக்கோரி அர்னாப் கோஸ்வாமி தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது.
இதில் அர்னாப் மீது நடவடிக்கை எடுக்க மூன்று வார காலம் இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், அர்னாப் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அர்னாப் கோஸ்வாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்தனர்.
அர்னாப் மீது முதல் தகவல் அறிக்கை பதிவானது ஏன்?
மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் இந்து துறவிகள் இருவர் கும்பல் கொலை செய்யப்பட்டது தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், இந்த கும்பல் கொலையை கண்டித்து ஏன் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்னும் கருத்து தெரிவிக்காமல் மௌனம் காக்கிறார் என்று கேள்வியெழுப்பினார் அர்னாப்.
சோனியா காந்தி பற்றி தனிப்பட்ட கருத்துகள் சிலவற்றையும் அர்னாப் அந்த நிகழ்ச்சியில் பேசினார்.
இதன்பின் சோனியா காந்தியை அவதூறாக பேசியதாக பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினரால் புகார்கள் அளிக்கப்பட்டன.
அர்னாப் கோஸ்வாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, 12 காவல்துறையினர் இருந்த இடத்திலேயே கும்பல் கொலை நடந்ததாகவும் அதை தனது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அர்னாப் கோஸ்வாமி வெளிப்படுத்தியதாகவும், அந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அவர் கேள்வி எழுப்பியதாகவும் கூறினார்.

பட மூலாதாரம், @Incindia
இதன் காரணமாக மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப், தெலங்கானா, ஜம்மு காஷ்மீர், சத்தீஸ்கர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து புகார்களும் ஒரே மாதிரியான வகையில் உள்ளன என்றும் முகுல் ரோஹத்கி கூறினார்.
தனது தரப்பு மனுதாரர் அர்னாப் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இரண்டு நாட்களுக்கு முன்பு மும்பையில் நள்ளிரவு 12.15 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரால் தாக்கப்பட்டதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்,
எனவே நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கைகள் மற்றும் ஏப்ரல் 21ஆம் தேதி அவர் நடத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடர்பாக இனிமேல் தொடுக்கப்பட வாய்ப்புள்ள வழக்குகள் ஆகியவற்றிலிருந்து தனது மனுதாரருக்கு சட்டபூர்வமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அர்னாப் கோஸ்வாமி நிகழ்ச்சியில் அவதூறாக எதுவும் பேசப்படவில்லை என்று கூறிய முகுல் ரோஹத்கி, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை இன்று உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டதற்கு நன்றியும் தெரிவித்தார்.
'இப்போது ஏன் ரத்து செய்ய வேண்டும்?' - கபில் சிபல்
மகாராஷ்டிர அரசு சார்பில் ஆஜரான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல், அந்த நிகழ்ச்சியில் அர்னாப், சோனியா காந்திக்கு எதிராக அவதூறாகப் பேசியவை என்று குற்றம் சாட்டப்படும் வாசகங்களை வாசித்துக் காட்டினார்.
அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், மத வன்முறையை உண்டாக்கும் வகையிலான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாகவும், ஏற்கெனவே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தால் அவை விசாரிக்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டார்.

பட மூலாதாரம், facebook
"வெவ்வேறு பகுதிகளில் பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் ஒரே வழக்காக வேண்டுமானால் விசாரிக்கலாம். ஆனால் இப்போது ஏன் அவற்றை ரத்து செய்ய வேண்டும்," என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
சத்தீஸ்கர் மாநில அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விவேக் தான்கா, அர்னாப் கோஸ்வாமி இம்மாதிரியான கருத்துகளை தெரிவிப்பதில் இருந்து கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தில் கூறினார்.
அதற்கு பதிலளித்த நீதிபதி சந்திரசூட் "ஊடகங்கள் மீது எவ்விதமான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கும் தாம் எதிரானவன்," என்று கூறினார்.
இடைக்கால உத்தரவு
இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ள உச்ச நீதிமன்றம், மனுதாரர் அர்னாப் கோஸ்வாமிக்கு மூன்று வார கால இடைக்கால சட்ட பாதுகாப்பு வழங்குவதாகவும், இந்த மூன்று வார காலத்தில் அவர் மீது எவ்விதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
அடுத்த மூன்று வார காலத்தில் அர்னாப் கோஸ்வாமி முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அர்னாப் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதையடுத்து இந்த மூன்று வார காலத்தில் அவர் மீது மேற்கொண்டு எந்த முதல் தகவல் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட கூடாது என்றும், அர்னாப் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
























