You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ் தாக்கம்: வருமானமின்றி தவிக்கும் சிறு வியாபாரிகள்
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தினக்கூலி வேலையில் உள்ளோர் மற்றும் தள்ளுவண்டி கடைகள் நடத்துவோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலா தளங்கள் மற்றும் கடைத்தெருக்களில் பொது மக்களின் நடமாட்டம் இல்லாததால், சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
பெசன்ட் நகர் பகுதியில் தள்ளுவண்டியில் குளிர்பானம் விற்கும் சரோஜா(50) கொரோனா தாக்கம் எப்போது குறையும் என எதிர்பார்த்தபடி இருக்கிறார். ''வரும் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் பொதுமக்கள் வெளியில் வரக்கூடாது என அறிவித்திருக்கிறார்கள். ஆனால் இப்போதே மக்கள் நடமாட்டம் குறைந்துவிட்டது. கடற்கரை பக்கத்தில் குளிர்பானம் விற்கிறேன். நான் சிறுவயதில் இருந்து இங்கு தள்ளுவண்டி கடை நடத்துகிறேன்.
இதுபோன்ற ஒரு கஷ்டமான காலம் வந்ததில்லை. கொரோனா எப்போது குறையும், மீண்டும் இயல்புநிலைக்கு எப்போது நாம் திரும்புபோம் என காத்திருக்கிறேன். வெயில் காலத்தில் ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ.1,000 வரை வருமானம் இருக்கும். வெயில் வந்துவிட்டது. ஆனால் வருமானம் கிடைக்காமல் அவதிப்படுகிறோம்,'' என்கிறார் சரோஜா.
கொரோனா தாக்குதலை தவிர்க்க தூய்மையாக இருக்கவேண்டும் என்றும் வெளி இடங்களில் அதிக நேரம் இருக்கக்கூடாது என்பது சரோஜாவுக்கு தெரிந்திருக்கிறது. ''பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பது சரிதான். ஆனால், சிறிய வருமானம் கிடைத்தால்தான் அடுத்துவரும் நாட்களுக்கு நானும் என் சகோதரியும் வாழமுடியும்,'' என வருத்தத்துடன் பேசுகிறார் சரோஜா.
பேப்பர் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து பணம் ஈட்டும் ராஜாராம்(55) அடுத்தவராம் அன்றாட செலவுகளுக்கு என்ன செய்வது என யோசிப்பதாக கூறுகிறார். ''எல்லா கடைகளையும் மூடுகிறார்கள். பேப்பர் வாங்கும் கடைகளை மூடுவதாக சொல்லியிருக்கிறார்கள். மார்ச் மாதம் கடைசி இரண்டு வாரமும் கஷ்டமான வாரமாக அமைந்துவிட்டது. எங்களை போன்ற தினக்கூலி ஈட்டும் உழைப்பாளர்கள் மிகவும் சிரமத்தில் இருக்கிறோம்,'' என்கிறார்.
''யாரிடமும் சம்பளம் வாங்காமல், எங்கள் உழைப்பை நம்பி நாங்கள் வாழ்கிறோம். மாத சம்பளம் வாங்குபவர்களைவிட எங்களைப் போன்றவர்களுக்குதான் அதிக இழப்பு. எங்களைப் போன்ற சிறுதொழில் செய்பவர்களுக்கு இழப்பீடு கொடுக்கவேண்டும்,'' என்கிறார் ராஜாராம்.
தமிழக குறுந்தொழில் சங்கத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் பொருளாதார மந்தநிலையை கொரோனா மேலும் நீட்டிப்பதாகக் கருதுகிறார். ''ஏற்கனவே, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி போன்றவற்றால் நாங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளோம். கொரோனா மேலும் சிறுவியாபாரிகளின் வாழ்வாதாரத்தை நிலைகுலையவைத்துவிட்டது. இந்த வைரஸ் தாக்கம் எப்போது குறையும் என தெரியவில்லை.
மக்களின் நடமாட்டம் அதிகரித்தால்தான், சிறுவியாபாரிகளுக்கு தினக்கூலி கிடைக்கும். சென்னை நகரத்தில் மட்டும், சுமார் ஒரு லட்சம் பேர் சிறு வியாபாரிகளாக இருக்கிறார்கள். இவர்களின் வேலையிழப்பு மேலும் நாட்டின் பொருளாதாரத்தில் சிக்கலை ஏற்படுத்தும்,'' என்கிறார் ஜெயபிரகாஷ். பொருளாதார இழப்பு குறித்து விவாதிக்க அடுத்த வாரம் அரசு அதிகாரிகளை சந்திக்கும் கூட்டங்களும் ரத்தாகிவிட்டன என்கிறார் ஜெயப்பிரகாஷ்.
பிற செய்திகள்:
- ‘’எனது மகளின் புகைப்படத்தை அணைத்து இன்று உனக்கு நீதி கிடைத்துவிட்டது என்றேன்’’
- "பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” - முதல்வர் கமல்நாத் ராஜிநாமா அறிவிப்பு
- நரேந்திர மோதி அறிவிப்பு: 22-ம் தேதி இந்தியாவில் மக்கள் ஊரடங்கு
- நிர்பயா வழக்கு: நால்வரும் தூக்கிலிடப்பட்டனர் - மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்ட உடல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்