ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்: கல்வியும், செல்வமும் ஆணவத்தை கொண்டு வருகிறது

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினமணி: "வசதியான குடும்பங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகம்: மோகன் பாகவத்"
படித்த, வசதியான குடும்பங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து விட்டதாக ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் கவலை தெரிவித்தாா்.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் மற்றும் அவா்களது குடும்ப உறுப்பினா்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
'இப்போதெல்லாம் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. மக்கள் அற்பத்தனமான பிரச்னைகளுக்கெல்லாம் போராடுகிறாா்கள். படித்த மற்றும் வசதியான குடும்பங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து விட்டன. ஏனென்றால் கல்வியும், செல்வமும் பெருகும்போது அவா்களிடம் ஆணவம் வருகிறது. இதன் விளைவாக குடும்பங்கள் வீழ்ச்சியடைகின்றன.

பட மூலாதாரம், Getty Images
ஆா்எஸ்எஸ் தொண்டா்கள், தங்கள் குடும்ப உறுப்பினா்களிடம் சங்கத்தில் தங்களின் செயல்பாடுகளை விளக்கிச் சொல்ல வேண்டும் என்று நாங்கள் எதிா்பாா்க்கிறோம். களப்பணி ஆற்றுபவா்களை விட குடும்பப் பெண்களின் பணி மிகவும் சிரமமானது.
இந்து சமூகம் நல்லொழுக்கமும், ஒழுங்குமுறையும் கொண்டதாக இருக்க வேண்டும். சமூகம் என்று சொல்லும்போது அது ஆண்களை மட்டும் குறிப்பதல்ல; ஒரு சமூகம் என்பது உணா்வின் காரணமாக அதன் அடையாளத்தைப் பெறுவதாகும்.
நான் ஒரு ஹிந்து; எல்லா மதங்களுடனும் தொடா்புடைய மரியாதைக்குரிய இடங்களை நான் மதிக்கிறேன். ஆனால் எனக்குப் புனிதமான இடம் குறித்து நான் உறுதியாக இருக்கிறேன். எனது பண்பாட்டின் அடையாளத்தை எனது குடும்பத்தினரிடமிருந்து பெற்றுள்ளேன்.
குடும்பம் இல்லாமல் சமூகம் இல்லை. சமுதாயத்தின் பாதியைக் கொண்ட பெண்கள் அதிக அறிவொளி பெற்றவா்களாக மாற வேண்டும்.
இந்தியாவுக்கு ஹிந்து சமுதாயத்தைத் தவிர வேறு வழியில்லை. ஹிந்து சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் ஒரு குடும்பமாக நடந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை' என்றாா் பாகவத்.

இந்து தமிழ் திசை: "கொரோனா - 45 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை"

பட மூலாதாரம், Getty Images
கோவிட்-19 வைரஸ் (கொரோனா) பாதிப்புள்ள சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 45,180 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 2,181 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட் - 19 வைரஸ், சீனாவைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை 68 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயின் தீவிரத்தால் 1,600-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் இருந்து கேரளா வந்த 3 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவில் கோவிட் - 19 வைரஸ் பரவி இருப்பதால் மத்திய, மாநில அரசுங்கள் விமான நிலையங்களில் தடுப்பு நடவடிக்கை களை தீவிரப்படுத்தியது. தமிழகம் உட்பட நாடுமுழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் குழுவினர் வைரஸ் பாதிப்புள்ள சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து வருகின்றனர்.
இதன்படி தமிழகம் வந்த 45,180 பேருக்கு விமான நிலையங்களில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 2,181 பேர் 28 நாட்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்த 10 சீனர்கள் உட்பட 15-க்கும் மேற்பட்ட அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். 43 பேரின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில், யாருக்கும் வைரஸ் பாதிப்பு இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே ஜனவரி 17-ம் தேதிக்குப் பிறகு சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு டெல்லியில் இருந்து சென்றவர்கள், திரும்பி வந்தவர் களின் பட்டியல் எடுக்கப்பட்டது. அவர்கள் டெல்லிக்கு வரவழைக் கப்பட்டு அவர்களது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 17 பேருக்கு பாதிப்பு அறிகுறி இருப்பது தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.


தினத்தந்தி: "மோதியும், அமித்ஷாவும் வெல்ல முடியாதவர்கள் அல்ல" - சிவசேனை

பட மூலாதாரம், Getty Images
'மோதியும், அமித்ஷாவும் வெல்ல முடியாதவர்கள் அல்ல' என சிவசேனை தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜனதா வெல்ல முடியாத கட்சியாக தோன்றியது. ஆனால் டெல்லி சட்டசபை தேர்தலில் அந்த கட்சி ஒரு அட்டை வீடு போல சரிந்துவிட்டது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா ராமரைத்தான் கிட்டத்தட்ட முன்னிறுத்தியது. ஆனால் அனுமனை வழிபடும் கெஜ்ரிவால் டெல்லியில் ராம ராஜ்யத்தை கொண்டு வந்து உள்ளார். இங்கு அனுமனுக்கு பின்னால் ராமர் நின்றார்.
தங்களுக்கு வாக்களிக்காதவர்கள் துரோகிகள் என பாரதீய ஜனதா தலைவர்கள் கூறினார்கள். எனவே ஒட்டுமொத்த டெல்லியும் அந்த முத்திரையை பெறப்போகிறதா?
மோடியும், அமித்ஷாவும் வெல்ல முடியாதவர்கள் அல்ல என்பதையே டெல்லி சட்டசபை தேர்தல் முடிவு காட்டுகிறது. எந்த நாடும் மதம் இல்லாமல் இல்லை. ஆனால் மதம் என்பது தேசபக்தி என்று அர்த்தம் அல்ல.
அரசியல் ஆதாயத்துக்காக மத பிரச்சினைகள் தூண்டப்பட்டன. ஆனால் அதை வாக்காளர்கள் எடுத்துக் கொள்ளவில்லை. மோடியும், அமித்ஷாவும் மட்டுமே தேர்தலில் வெற்றிபெற முடியும் என்ற கட்டுக்கதையை மக்கள் கடந்து செல்ல வேண்டும்.
பிரதமர் மோடிக்கும், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையிலான பொதுவான அம்சம் இருவரும் சுயநலவாதிகள் என்பது தான். ஆனால் மோடிக்கு பெரும் ஆணவமும் உள்ளது.
கெஜ்ரிவால் ஒருமுறை முழு நாட்டையும் கைப்பற்ற விரும்புவதாக கூறினார். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் அவர் தனது வரம்பை உணர்ந்து கொண்டு டெல்லியில் தனது கட்சியை கட்டமைத்துக் கொண்டார். 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் நாட்டில் ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என பாரதீய ஜனதா உறுதி அளித்து இருந்தது. ஆனால் 15 ரூபாய் கூட செலுத்தப்படவில்லை.
இவ்வாறு அதில் அவர் கூறப்பட்டு உள்ளது

டைம்ஸ் ஆஃப் இந்தியா : ஐபிஎல் அட்டவணை வெளியீடு - சிஎஸ்கே அணி மோதும் போட்டிகள்

பட மூலாதாரம், Getty Images
2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது குறித்த செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுள்ளது.
மார்ச் மாதம் 29-ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மும்பையில் நடக்கிறது.
இந்த ஐபிஎல் தொடரின் இறுதி [போட்டி மும்பையில் வரும் மே 24ஆம் தேதி நடக்கிறது.
இந்த தொடரில் சிஎஸ்கே மோதும் போட்டிகள்
மார்ச் 29, 2020 - சிஎஸ்கே - மும்பை (மும்பை)
ஏப்ரல் 2, 2020 - சிஎஸ்கே - ராஜஸ்தான்
ஏப்ரல் 6, 2020 - சிஎஸ்கே- கொல்கத்தா (கொல்கத்தா)
ஏப்ரல் 11, 2020 - சிஎஸ்கே -பஞ்சாப்
ஏப்ரல் 13, 2020- சிஎஸ்கே-டெல்லி (டெல்லி)
ஏப்ரல் 17, 2020 - சிஎஸ்கே- பஞ்சாப் (பஞ்சாப்)
ஏப்ரல் 19, 2020 - சிஎஸ்கே- ஹைதராபாத்
ஏப்ரல் 24, 2020 - சிஎஸ்கே- மும்பை
ஏப்ரல் 27, 2020- சிஎஸ்கே- பெங்களூரு
ஏப்ரல் 30 - சிஎஸ்கே - ஹைதராபாத் (ஹைதராபாத்)
மே 4, 2020 - சிஎஸ்கே - ராஜஸ்தான் (ராஜஸ்தான்)
மே 7, 2020 - சிஎஸ்கே கொல்கத்தா
மே 10, 2020 - சிஎஸ்கே - டெல்லி
மே 14, 2020 - சிஎஸ்கே -பெங்களூரு (பெங்களூரு)
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:




























