உலக நாடகங்களை கிராமத்தில் ஒலிக்கவைத்த 'நீனாசம்' கலைக்குழு

    • எழுதியவர், சாய் சுதா
    • பதவி, பிபிசி தமிழுக்காக, பெங்களூரு
  • பிரசுரிக்கப்பட்டது

கிரேக்க நாட்டு அரசர் தீஸ்யூஸ் - அமேசான் நாட்டு ராணி ஹிப்போலிட்டா ஆகிய இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கிறது . திருமண ஏற்பாடு கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தீஸ்யூசின் அரண்மனையே விழாக் கோலம் பூண்டிருந்தது.

ஷேக்ஸ்பியரின் "ஏ மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம்" என்ற நாடகத்தின் காட்சி ஒன்றின் ஒத்திகை, ஷேக்ஸ்பியரின் சொந்த ஊரிலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல் தூரத்தில் உள்ள " ஹேக்கோடு" என்ற கிராமத்தில் உள்ள நீலகண்டேஸ்வரா நாட்டிய சேவா சங்கம் (நீனாசம்) என்ற கலாச்சார மையத்தில் நடந்து கொண்டிருந்தது. இந்த கிராமம் கர்நாடக மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையே உள்ளது. பன்முகத்தன்மையும், இயற்கை வளத்திற்கும் பெயர் பெற்ற இந்த பகுதியில் கலை, நாடகம் செழிப்பாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

ஹேக்கோட்டிலும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் வசிப்பவர்கள் மிகவும் எளிமையாக, சர்வதேச நாடக மேதை ஷேக்ஸ்பியர், திரையுலக முன்னோடி அகிரா குரசோவா போன்றவர்களை பற்றியும், கன்னட நாடக மேதைகளான கிரீஷ் கர்னாட், பி.வி. கரந்த் மற்றும் பலரின் படைப்புகளை பற்றியும் பேசி வருகிறார்கள். இங்கு படித்த சிலர் மட்டும் கலை ஆர்வம் கொண்டு இல்லை. விவசாயிகள், கட்டட தொழிலாளிகள், தினக்கூலிகள், ஆசிரியர்கள், வாகன ஓட்டிகள் என்று பல தரப்பட்ட மக்களும் நீனாசம் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

இந்த கிராமத்தை சேர்தவர்களுக்கு நீனாசம் கலைக் கூடம் மட்டுமல்ல, ஒத்த கருத்து உடையவர்களோடு நாடகங்களைப் பார்க்கும் அவர்கள், பருவநிலை மாற்றம், அன்றாட வாழ்க்கை சிக்கல் என்று நாடகத்தோடு வாழ்க்கை குறித்தும் தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்கிறார்கள்.

நீனாசம் எப்போது தொடங்கப்பட்டது?

1949-ம் ஆண்டு புகழ் பெற்ற கன்னட எழுத்தாளர் கே.வி. சுப்பண்ணா என்பவரால் நீனாசம் நிறுவப்பட்டது. தனது கல்லூரிப் படிப்பை மைசூர் பல்கலைக்கழகத்தில் முடித்த பிறகு தன் சொந்த ஊரான ஹேக்கோடிற்கு இவர் திரும்பியது வழக்கத்துக்கு மாறானது. நிலையான வேலையைத் தேடி பலரும் நகரத்திற்கு இடம் பெயர்ந்த காலகட்டத்தில், இவர் கிராமத்திற்கு திரும்பினார். நகர்ப்புற கல்வியால் கிடைத்த புதிய கண்ணோட்டங்கள், பிற கலாசாரங்களை ரசிக்கும் திறன் போன்றவற்றை தனது கிராம மக்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என அவர் ஆசைப்பட்டார்.

ஆரம்பத்தில் நாடகம் மற்றும் இலக்கியப் பட்டறைகளை நடத்துவது, நாடக நூல்களை வெளியிடுவது போன்ற பணிகளில் நீனாசம் ஈடுபட்டது. இதனால் அருகில் உள்ள கலை ஆர்வலர்கள் நீனாசத்திற்கு வரத்தொடங்கினர். நாளடைவில் நீனாசத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. பின்னர் நீனாசத்தில் முழுமையான திரையரங்கம் கட்டப்பட்டது. நீனாசம் நாடகக் குழு கர்நாடகாவின் பல ஊர்களில் நாடகங்களை நடந்தியது.

பின்னர் நீனாசத்தில் திரைப்பட சமூகம் ஒன்றை ஆரம்பித்தார்கள். இதில் சர்வதேச திரைப்படங்களை மக்களுக்கு திரையிட்டனர். ஆனால் இந்த கிராமத்தில் வாழ்பவர்களுக்கு கன்னட மொழி ஒன்றே தெரியும். எனவே படத்தின் வசனங்களை சுப்பண்ணா கன்னடத்தில் மொழி பெயர்ப்பு செய்து மக்களிடையே கொடுத்த பின் படங்கள் திரையிடப்பட்டன.

அவரது முயற்சியால்தான் இன்று இந்த ஊரில் உள்ளவர்கள் பெரும் ஆர்வத்துடன் அபுர் சன்சார். ரஷோமான், செவன் சாமுராய் போன்ற படைப்புகளைப் பற்றி பேசுகிறார்கள் என்று தற்போதய நீனாசம் தலைவர் ஸ்ரீதர் பட் கூறுகிறார்.

இம்மாதம் 'கல்ச்சுரல் கோர்ஸ்' என்ற பெயரில் ஐந்து நாள் நிகழ்ச்சி ஒன்றை நீனாசத்தில் நடத்தினர். இந்த நிகழ்ச்சியை கடந்த 19 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள். இந்நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் இருந்து பல கலைஞர்கள் பங்கேற்றனர். நீனாசம் தரப்பில் ஷேக்ஸ்பியரின் "ஏ மிட்சம்மர்ஸ் நைட்ஸ் ட்ரீம்" நாடகத்தை நடத்தினர். இந்த நாடகத்தை அருகில் உள்ள கிராமத்தை சேர்த்த இக்பால் இயக்கியுள்ளார். இவர் நீனாசம் குழுவில் சுமார் 8 ஆண்டுகள் நாடக மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார். உள்ளூர் மக்களை கொண்டு இந்த நாடகத்தை இயக்கியுள்ளார்.

சமுதாயத்தின் பல பிரிவுகளை சேர்ந்த விவசாயிகள், கூலி தொழிலாளிகள், கட்டிடத்தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள், குழந்தைகள் என 35 நபர்கள் கடந்த 45 நாட்கள் தினமும் அவர்களது வேலை முடிந்ததும், மாலை நேரங்களில் மூன்று மணி நேரம் பயிற்சி எடுத்துக் கொண்டு நாடகத்தில் நடித்துள்ளனர். இவர்கள் நடிப்பை முறைப்படி கற்றுக் கொள்ளவில்லை. ஆனால் நாடகத்தின்பால் உள்ள ஈடுபாடுதான் அனைவரும் ஒருங்கிணைந்து நடிப்பதற்கு காரணம் என்கிறார் இக்ஃபால்.

தற்போது பெங்களூரில் வழக்குரைஞராக பணிபுரிந்து கொண்டு இருக்கும் சித்தார்த் பட் ஹெஜிகோடில் இருந்து நான்கு கி.மீ தூரத்தில் உள்ள புரப்பய்மனை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். கலை மீது இந்த கிராமத்தில் வாழ்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஈடுபாடே நீனாசம் அமைப்பின் பங்களிப்பு என்று அவர் கூறுகிறார். இவர் சிறுவனாக இருந்த காலத்தில் நீனாசம் குழுவில் டிக்கெட் விற்பனையில் தன்னார்வலராக இருந்தார். தொடக்கத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து, பின் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார். இன்றும் சொந்த கிராமத்திற்கு வரும் போதெல்லாம் நீனாசம் அமைப்புக்கு தவறாமல் சென்று வருவது அவரது வழக்கம்.

அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த கிருதி என்பவர் சித்தார்த் பட் போலவே பெரும்பாலான நாட்களை சிறுவயதில் நீனாசம் குழுவில்தான் கழித்தார். அவருக்குத் தெரிந்ததெல்லாம், சர்வதேச திரைப்படங்களும், நாடகங்களும்தான். சிறு வயதில் அவருக்கு கிடைத்த அனுபவம், பிற கலாசாரங்களை ரசிக்கவும், ஒப்புக்கொள்ளும் மனப்பான்மையையும் ஏற்படுத்தியது. கன்னட மொழி வழிப் பாடத் திட்டத்தில் படித்திருந்தாலும், கிராமத்தில் வளர்ந்திருந்தாலும் நகரத்திற்கு சென்றவுடன் தாழ்வு மனப்பான்மை ஏதும் ஏற்படவில்லை. காரணம் நீனாசத்தில் கிடைத்த அனுபவம்தான். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்துவிட்டு தன் பிரெஞ்சு கணவருடன் தற்போது இந்த கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கிருதி.

நீனாசம் ஒரு கூட்டுறவு அமைப்பு. கிராமத்து மக்களால் மட்டுமே நடத்தப்படும் அமைப்பு. 70 ஆண்டுகளாக இதுபோன்ற அமைப்பை நடத்துவது எளிதல்ல என்கிறார் தற்போதைய இயக்குநரும், கே. வி. சுப்பண்ணாவின் மகனுமான அக்ஷ்ரா. நீனாசம் எந்த கொள்கை கோட்பாடுகளுக்கும் எதிரியல்ல. எல்லா கருத்துகளையும் வெளிப்படைத் தன்மையுடன் ஏற்றுக்கொள்ளும். ஆரம்பத்தில் பெண்கள் நாடகங்களில் நடிப்பதற்கு எதிர்ப்பு இருந்து வந்தது. எனவே குழந்தைகளை நாடகத்தில் நடிக்கும்படி ஊக்குவித்தோம். சிறுவர், சிறுமியருக்கு தகுதிக்கு ஏற்ப வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர்கள் பெரியவர்கள் ஆன பின்பு பாலியல் பாகுபாடு தானாக மறைந்தது. நீனாசம் சமுதாயத்தின் ஒரு கண்ணாடி. எப்படி இந்த சமுதாயம் வளர்ந்து கொண்டு இருக்கிறதோ அதே போன்று நீனாசம் அமைப்பும் வளர்ந்து கொண்டே இருக்கும் என்று அக்ஷ்ரா நம்புகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :