சௌரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக வாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
The Hindu: கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக வாய்ப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராவதற்கு வாய்ப்பு உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது தி ஹிண்டு ஆங்கில நாளிதழ். பல நாளிதழ்களும் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளன.
பிரிஜேஷ் பட்டேல், சௌரவ் கங்குலி ஆகிய இருவரது பெயர்களையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் இரண்டு வெவ்வேறு பிரிவினர் ஆதரிக்கின்றனர் என்றும், கங்குலிக்கு முன்னாள் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் ஆதரவு தெரிவிப்பதாகவும், பிரிஜேஷுக்கு பிசிசிஐ-யின் இன்னொரு முன்னாள் தலைவர் என்.சீனிவாசன் ஆதரவு தெரிவிப்பதாகவும் தி ஹிண்டு செய்தி கூறுகிறது.
ஆனால், சௌரவ் கங்குலி பிசிசிஐ தலைவர் பொறுப்புக்கும், பிரிஜேஷ் தாக்கூர் ஐ.பி.எல். தலைவர் பொறுப்புக்கும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறும் வாட்சாப் தகவல்கள் பறிமாறிக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி மேலும் கூறுகிறது.
இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா புதிய பிசிசிஐ செயலாளர் ஆகிறார் என்றும், அனுராக் தாக்கூரின் தம்பி அருண்சிங் துமால் புதிய பிசிசிஐ பொருளாளர் ஆகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியிருப்பதாக அந்த செய்தி மேலும் கூறுகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்: மோதி - ஷி ஜின்பிங் சந்திப்பால் பிடிபட்ட கால்நடை உரிமையாளர்களுக்கு அபாரதம்

பட மூலாதாரம், LAURENE BECQUART/AFP/Getty Images
மாமல்லபுரத்தில் நடைபெற்ற சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் இந்தியப் பிரதமர் மோதி ஆகியோரின் சந்திப்புக்கு பலத்த பாதுகாப்பு கொடுத்த காவல்துறையின் பணி நிறைவடைந்துள்ளது.
ஆனால் வருவாய் துறை மற்றும் கால்நடை வளர்ப்புத் துறையின் பணிகள் இன்னும் நிறைவுபெறவில்லை என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.
அவர்கள் இந்த சந்திப்பிற்காக பிடித்து செல்லப்பட்ட கால்நடைகளை பாதுகாத்து வருகின்றனர். கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை ஆகியவற்றில் அக்டோபர் 7 முதல் 10 வரை ஆகிய தேதிகளில் 58 மாடுகள், 90 நாய்கள், மற்றும் 40 குரங்குகள் என மொத்தம் 188 விலங்குகள் பிடிக்கப்பட்டு தற்காலிக பாதுகாப்பு இட்த்தில் வைக்கப்பட்டன.
அதில் பிடிபட்ட 58 மாடுகளில் 46 மாடுகளின் உரிமையாளர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. உணவுக்காக 250 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
மீதமுள்ள 12 மாடுகளும் 90 நாய்களும் தற்காலிக காப்பகத்தில்தான் உள்ளன என செங்கல்பட்டின் வருவாய் கோட்ட அலுவலர் என்.செல்வம் தெரிவித்தார் என்கிறது அச்செய்தி.
மேலும், தெருவில் இருந்த நாய்கள், அரசுசாரா அமைப்புகளின் உதவியுடன் பிடிக்கப்பட்டன என்றும், ஒரு வாரத்தில் அவை வெளியே விடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்று விவரிக்கிறது அச்செய்தி.

அடுத்து வரும் செய்தியும் மாமல்லபுரத்தில் நடைபெற்ற மோதி - ஷி ஜின்பிங் சந்திப்பு தொடர்பான செய்தியே.
தினத்தந்தி: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

பட மூலாதாரம், Getty Images
மோடி-ஜின்பிங் சந்திப்பை தொடர்ந்து, மாமல்லபுரத்தில் அனைத்து புராதன சின்னங்களையும் கண்டுகளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதையடுத்து நேற்று ஒரே நாளில் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்கிறது தினத்தந்தி செய்தி.
காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு 2 நாட்கள் நடந்தது. இதனையொட்டி மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் அழகுபடுத்தப்பட்டன. மேலும் மாமல்லபுரமே மின்னொளியில் ஜொலித்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக புராதன சின்னங்களை பொதுமக்கள் காண தடை விதிக்கப்பட்டிருந்தது.
இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு நிறைவடைந்ததையடுத்து புராதன சின்னங்களை பொதுமக்கள் கண்டுகளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று காலை 9 மணி முதல் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
அதிக அளவில் வாகனங்கள் வந்ததால் மாமல்லபுரம் கடற்கரை சாலை, கிழக்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி, டி.கே.எம். சாலை, கோவளம் சாலை உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று ஒரே நாளில் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்தனர். என்று விவரிக்கிறது அச்செய்தி.

இந்து தமிழ்திசை: ஆசிரியரின் கொடைப்பண்பு
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் முதியோர் இல்லம் கட்டுவதற்கு ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கியுள்ளார் கோவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் என்று இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.
கோவையை அடுத்த அரிசி பாளையத்தைச் சேர்ந்தவர் ஆசிரி யர் ஆர்.ஆறுமுகம். இவர் டவுன் ஹால் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் வீராசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி தனபாக்கியம். செவிலியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு சொந்தமான நிலத்தை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு முதியோர் இல்லம் கட்டுவதற்கு தான மாக வழங்கியுள்ளனர்.
"பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நடத்திய நிகழ்ச்சி யொன்றில் கலந்து கொண்டபோது, அவர்கள் போதிய இடவசதியின்றியும், அடிப்படை வசதிகளுமின்றியும் சிரமப்பட்டு வருவதை அறிந்தேன். இது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. அவர்க ளுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
அரிசிபாளையம் பகுதியில் எங்களுக்கு சொந்தமாக 2 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 32 சென்ட் நிலத்தை தானமாகக் கொடுப்பது என மனைவியுடன் ஆலோசித்து தீர் மானித்து, இதன்படி தேசிய பார்வையற்றோர் இணையம் அமைப்புக்கு தான பத்திரமாக எழுதி கொடுத்தேன். தற்போது நாங்கள் மனநிறைவுடன் உள்ளோம்" என்றார் ஆசிரியர் ஆர்.ஆறுமுகம். என்று மேலும் விவரிக்கிறது அச்செய்தி.

தினமணி: கீழடியின் 6ஆம் கட்டப் பணி

பட மூலாதாரம், ASI
கீழடியில் நடைபெற்று வந்த 5ஆம் கட்ட அகழாய்வுப் பணி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது. 6ம் கட்ட அகழாய்வுப் பணி அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கவுள்ளது என்கிறது தினமணிசெய்தி.
கீழடியில் கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன. இதன்மூலம் பழமையான நகர நாகரிகம் கீழடியில் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து மத்திய தொல்லியல் துறை 2 மற்றும் 3ஆம் கட்ட அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து 5ஆம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 13ஆம் தேதி தொடங்கியது. இந்த அகழாய்வு தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவனாந்தம் தலைமையில் நடைபெற்றது. இதுவரை முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதி ஆகியோரது நிலங்களில் 52 குழிகள் தோண்டப்பட்டு, மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறை கிணறுகள், இரும்பு பொருள்கள், செப்புக் காசுகள் போன்ற பல பொருட்கள் கிடைத்துள்ளன என்கிறது அச்செய்தி.

பிற செய்திகள்:
- ’ எலும்பு நொறுங்கும்’ ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஷி ஜின்பிங் எச்சரிக்கை
- வெள்ளத்தில் மூழ்கும் புல்லட் ரயில்கள் - ஜப்பானை புரட்டிப்போட்ட ஹகிபிஸ் புயல்
- பிளாஸ்டிக்கை தின்னும் பாக்டீரியாக்கள்: கண்டுபிடித்த ஷிவ் நாடார் பல்கலைக்கழகம்
- கடலில் திசை மாறி 20 நாள்கள் தத்தளித்த இலங்கை மீனவர்கள்: பசி தீர்த்த ஆமை ரத்தம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
























