காஷ்மீரில் இரண்டு மாவட்டங்களில் மொபைல் சேவைக்கு அனுமதி - ஆளுநர் சத்யபால் மாலிக்

பட மூலாதாரம், Getty Images
ஜம்மு காஷ்மீரில் துண்டிக்கப்பட்டுள்ள மொபைல் சேவையை குப்வாரா, ஹண்டவாரா மாவட்டங்களில் மட்டும் மீண்டும் அனுமதிப்பதாக ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.
மற்ற மாவட்டங்களிலும் மொபைல் சேவை விரைவில் மீண்டும் அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய சத்யபால் மாலிக் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறும்போது,
"ஒவ்வொரு காஷ்மீரியும் தங்களுக்கு மிக முக்கியமானவர் என்று கூறிய அவர், ஒரு காஷ்மீரியின் உயிர் பறிபோவதையும் தாங்கள் விரும்பவில்லை என்று தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமை நீக்கப்பட்டதில் இருந்து இதுவரை பொதுமக்கள் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவித்த அவர், வன்செயல்களில் ஈடுபட்ட சிலர் மட்டும் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்தார். அதுவும் இடுப்புக்கு கீழே ஏற்பட்ட காயங்கள்தான்" என்று அவர் குறிப்பிட்டார்.
சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின்னர் பொதுமக்கள் உயிரிழப்பைத் தடுக்க கட்டுப்பாடுகள் அவசியமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஜம்மு காஷ்மீர் மக்களின் அடையாளமும், பண்பாடும் பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
50 ஆயிரம் வேலைகள்
ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளை இன்று அறிவிப்பதாகக் கூறிய அவர், முழு ஈடுபாட்டோடு இதில் பங்கேற்குமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். 2 முதல் 3 மாதங்களில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"செல்பேசிகளையும், இணையத்தையும் நாம் பயன்படுத்துவது குறைவு. பயங்கரவாதிகளும், பாகிஸ்தானிகளும் ஆட்களைத் திரட்டவும், கருத்துக்களை பரப்பவும் இவற்றை அதிகம் பயன்படுத்துகின்றனர். இது நமக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஒருவித ஆயுதம். எனவே இவற்றை நிறுத்திவைத்துள்ளோம். இந்த சேவைகள் படிப்படியாக மீண்டும் அளிக்கப்படும்" என்றும் குறிப்பிட்டார் சத்யபால் மாலிக்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்ப்























