ஒடிசாவில் பொதுப்பணித்துறை அதிகாரியை தோப்புக்கரணம் போட வைத்த எம்எல்ஏ கைது - என்ன நடந்தது?

சரோஜ் குமார் மெஹர்

பட மூலாதாரம், Facebook

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ்: 'பொதுப்பணித்துறை அதிகாரியை தோப்புக்கரணம் போட வைத்த எம்எல்ஏ கைது'

ஒடிசாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பட்னாகர் தொகுதியில் இருந்து பிஜேடி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சரோஜ் குமார் மெஹர். சமீபத்தில் இவர் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் ஜெயகாந்த சபரை தோப்புக்கரணம் போடவைத்தார்.

அத்துடன் பொது இடத்திலேயே அவரை கன்னத்தில் அறையுமாறு மூத்த பொறியாளரை எம்எல்ஏ கேட்டுக் கொண்டார். இது தொடர்பான வீடியோ வெளியானது. இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விசாரணை நடத்துமாறு பொலாங்கிர் மாவட்ட ஆட்சியர் அரிந்தம் தகுவா துணை ஆட்சியருக்கு உத்தரவிட்டார். சாலை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த மெஹர், குறைவான தரத்தில் சாலை அமைத்ததற்காக சபரை தோப்புக்கரணம் போட வைத்தது விசாரணை அறிக்கையில் தெரியவந்தது. மேலும் பொறியாளரின் மனைவியும் போலீஸில் புகார் செய்திருந்தார். இதன் அடிப்படையில் எம்எல்ஏ சரோஜ் குமார் மெஹர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரை நேற்று கைது செய்தனர்.

இதனிடையே, தரக்குறைவாக சாலை போட்டதால் மக்கள் கோபமடைந்தனர். அதனால்தான் அப்படி நடந்துகொண்டேன் என கூறியுள்ள எம்எல்ஏ மெஹர், தனது செயலுக்கு மன்னிப்பு கோரி உள்ளார்.

Presentational grey line

தினமணி: 'வெளிநாடுகளில் இந்தியர்களின் கருப்புப் பணம் ரூ.34 லட்சம் கோடி'

'வெளிநாடுகளில் இந்தியர்களின் கருப்புப் பணம் ரூ.34 லட்சம் கோடி'

பட மூலாதாரம், Getty Images

வெளிநாடுகளில் கடந்த 1980 முதல் 2010-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருந்த கருப்புப் பணம் 216 பில்லியன் டாலர் (ரூ.14 லட்சம் கோடி) முதல் 490 பில்லியன் டாலர் (ரூ.34 லட்சம் கோடி) வரை இருக்கலாம் என்று நாடாளுமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

தேசிய பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் (என்சிஏஇஆர்), தேசிய நிதி மேலாண்மை நிறுவனம் (என்ஐஎஃப்எம்), தேசிய பொது நிதி மற்றம் கொள்கை நிறுவனம் (என்ஐபிஎஃப்பி) ஆகிய மூன்று அமைப்புகள் சேர்ந்து நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணம் குறித்த தங்கள் அறிக்கையை நிதி விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் மேற்கண்ட மூன்று அமைப்புகளும் அளித்தன. இவை ஒரே அறிக்கையாக தொகுக்கப்பட்டு மக்களவையில் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தியா மற்றும் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் தொடர்பான நிலை அறிக்கை என்ற தலைப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மனை - வீடு வணிகம், சுரங்கம், மருந்துப் பொருள் தயாரிப்பு, பான் மசாலா, குட்கா, புகையிலை, வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம், விவசாயப் பொருள்கள் ஊக வணிகம், திரைப்படத் துறை, தனியார் கல்வித் துறை ஆகியவற்றில் இருந்துதான் அதிக அளவில் கருப்புப் பணம் உருவாகியுள்ளது.என்சிஏஇஆர் அறிக்கையின்படி, கடந்த 1980 முதல் 2010-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பல்வேறு வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருந்த கருப்புப் பணம் 216 பில்லியன் டாலர் (ரூ.14 லட்சம் கோடி) முதல் 490 பில்லியன் டாலர் ரூ. 34 லட்சம் கோடி) வரை இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ஐஎஃப்எம் அறிக்கைப்படி 1990 முதல் 2008 வரை கருப்புப் பணமாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள பணத்தின் இப்போதைய மதிப்பு ரூ.9 லட்சத்து 41 ஆயிரத்து 837 கோடியாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. என்ஐபிஎஃப்பி அறிக்கையின்படி, 1997 முதல் 2009-ஆம் ஆண்டு வரை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 0.2 சதவீதம் முதல் 7.4 சதவீதம் வரை கருப்புப் பணமாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தேசிய பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் (என்சிஏஇஆர்), தேசிய நிதி மேலாண்மை நிறுவனம் (என்ஐஎஃப்எம்), தேசிய பொது நிதி மற்றும் கொள்கை அமைப்பு (என்ஐபிஎஃப்பி) ஆகிய மூன்று அமைப்புகளிடம் இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு மத்திய நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டது.

எனினும், இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் துல்லியமானது அல்ல. உள்நாடு, வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை துல்லியமாகக் கணக்கிடுவது என்பது மிகவும் சவாலான பணி என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த மூன்று அமைப்புகள் அளித்துள்ள விவரங்களைத் தொகுத்து, இதுதான் கருப்புப் பணம் தொடர்பான சரியான தகவல் என்று எதையும் கூறிவிட முடியாது என்று மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகரும் கூறியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த மார்ச் 28-ஆம் தேதி கடந்த மக்களவையில் இந்த அறிக்கையை தாக்கல் செய்தது. எனினும், தேர்தலுக்குப் பிறகு அமைந்த புதிய நாடாளுமன்றத்தின் மூலம்தான் அறிக்கையின் விவரங்கள் தெரியவந்துள்ளன. எனினும், உள்நாட்டில் உள்ள கருப்புப் பணத்தின் அளவு குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

உள்நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிக்கும் முக்கிய நடவடிக்கையாகவே கடந்த ஆட்சியில் பிரதமர் மோடி, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை அமல்படுத்தினார். எனினும், இதனால் உள்நாட்டில் கருப்புப் பணம் ஒழியவில்லை. பொதுமக்கள்தான் பல்வேறு துயரங்களைச் சந்தித்தனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் முடங்கியது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

Presentational grey line
Presentational grey line

தினத்தந்தி: 'காவிரி குறுக்கே மேகதாது அணை கூடாது'

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட ஆவணங்கள், வரைபடங்களை அனுப்பி கர்நாடகம் ஒப்புதல் கேட்டுள்ள நிலையில், அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி இருக்கிறார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

அந்நாளிதழ் பின் வருமாறு விவரிக்கிறது,

காவிரி ஆற்றின் குறுக்கே, தமிழக எல்லை அருகே உள்ள மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு கடந்த 2013-ம் ஆண்டு முடிவு செய்தது.

இதற்கான வரைவு திட்டத்தை தயாரித்த கர்நாடக அரசு, அதை மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்து அணை கட்டுவதற்கான அனுமதியை கோரியது. இதற்கு அப்போதைய முதல்- அமைச்சர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இத்திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டது.

இந்தநிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கையை கர்நாடக அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்து அணை கட்ட அனுமதி வழங்குமாறு கோரியது. அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து, விரிவான திட்ட அறிக்கை ஒன்றை தயாரித்து தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.

கர்நாடக அரசு அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது என்று கோரி, பிரதமர் மோதிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

"தமிழக அரசு தொடர்ந்து இந்த திட்டத்துக்கு தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை நிராகரித்து திருப்பி அனுப்ப வேண்டும். நடுவர் மன்ற தீர்ப்பு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு ஏற்ப, கர்நாடகத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட நிர்ணயிக்கப்பட்ட அணை இது அல்ல என்பதால், மேகதாது அணை திட்டம் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு ஏற்ற வகையில் இல்லை.

மேலும், தமிழ்நாடு மற்றும் மற்ற காவிரி வடிகால் மாநிலங்களின் முன் ஒப்புதலை கர்நாடகம் பெறவில்லை. காவிரி ஒரு பற்றாக்குறை வடிநிலை என்ற வகையில் மேல் பகுதியில் மேகதாது அல்லது வேறு எந்த திட்டத்தை நிறைவேற்றினாலும், கடைமடை மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு திருத்தி அமைத்த காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கேற்ப, உரிய பங்கு தண்ணீர் கிடைப்பதில் பெரும் பாதிப்பு ஏற்படும்." என்று அதில் குறிப்பிட்டுள்ளார் என்கிறது அந்நாளிதழ்.

Presentational grey line
admk d jayakumar

பட மூலாதாரம், இந்து தமிழ்

Presentational grey line

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'சென்னையில் பெண்களிடம் தொடர் செயின் பறிப்பு'

சென்னையில் ஞாயிற்றிக்கிழமை இரவு மற்றும் திங்கட்கிழமை காலை நான்கு வெவ்வேறு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

கோட்டூர்புரம் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (37). இவர், ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள், செல்வி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற சம்பவத்தில் செல்வி தாக்கப்பட்டார்.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் சுதாதேவி (57). இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரியும் இவர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள், சுதாதேவி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.இதுகுறித்து சுதாதேவி, ஜஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.இது போல மயிலாப்பூர் மற்றும் ராயப்பேட்டையிலும் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :