இலங்கை பொருளாதார நெருக்கடி: “அமைச்சு பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளமாட்டோம்” - கொந்தளிக்கும் எதிர்கட்சிகள்

- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்றத்திலுள்ள அனைத்து கட்சிகளிடமும் விடுத்த கோரிக்கையை தாங்கள் நிராகரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
பிபிசி தமிழிடம் பேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் இதனை தெரிவித்தார்.
மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதே முதலில் அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையே தவிர, அமைச்சு பதவிகளை வழங்குவது அல்லவெனவும் அவர் கூறுகின்றார்.
''அமைச்சு பொறுப்புக்களை ஏற்குமாறு ஜனாதிபதி அழைத்ததை முழுமையாக நான் நிராகரிக்கின்றேன். ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் எதிர்பார்க்கின்றதையே நாங்கள் செயற்படுத்த வேண்டும். மக்கள் நடைமுறையிலுள்ள பிரச்னைகளை தீர்த்து வைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள்.
கேஸ், மா, எரிபொருள், மின்வெட்டு இந்த பிரச்னை எல்லாம் தீர்த்து வைக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டும். இதை செய்துவிட்டு தான், பிறகு அரசியல் பேச வேண்டும். அதை செய்யாமல் அரசியல் பேச கூடிய காலம் இது இல்லை.
மக்கள் துயரப்படும் காலக் கட்டம் இது. மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு ஆதரவு கேட்டால், நாங்கள் ஆதரவு கொடுக்கலாம். எரிபொருள் பிரச்னையை தீர்ப்பதற்கு, அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பதற்கு, மின்வெட்டை இல்லாது செய்வதற்கு ஒத்துழைப்பு கேட்டால், கொடுக்கலாம்.
அந்த மாதிரியான திட்டங்களை கொண்டு வராமல், தங்கள் அரசியலை நிலைநாட்டிக் கொள்வதற்காக அமைச்சு பதவிகளை கொடுப்பதை இந்த சந்தர்ப்பத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது" என பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, இலங்கை நாடாளுமன்றம் நாளைய தினம் கூடவுள்ள நிலையில், கேள்வி கேட்பதற்கு கூட அமைச்சர்கள் இல்லாத ஒரு நாடாளுமன்றமாக நாளைய நாடாளுமன்றம் இருக்க போகின்றது என வடிவேல் சுரேஷ் கூறுகின்றார்.
சர்வதேச நாணய நிதியம் தொடர்பிலான விடயங்கள், நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் நாளை உள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
இது தொடர்பில் கேள்வி கேட்பதற்கு, புதிய நிதி அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்ட போதிலும், வழமைக்கு மாறான ஒரு அமர்வாக நாளைய அமர்வு இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
இலங்கை வரலாற்றில் என்றும் இல்லாதவாறான ஒரு நாடாளுமன்ற அமர்வு நாளை இடம்பெறவுள்ளது. நான்கு அமைச்சர்களுடனான நாடாளுமன்றமாக நாளை நாடாளுமன்றம் இருக்கும் என்கின்றார் வடிவேல் சுரேஷ்.
''இது அரசியலமைப்புக்கு எதிரான விடயம். இது நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒரு விடயம். மக்கள் இன்று தீர்ப்பு சொல்லும் அளவுக்கு வந்திருக்கின்றார்கள். மக்கள் தீர்ப்புக்கு போகனும். நேற்று பதவி விலகியவர்கள் இன்று மீண்டும் அதே பதவிக்கு வந்துள்ளார்கள். நீதி அமைச்சராக நேற்று இருந்த அலி சப்ரி மாத்திரமே, நிதி அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
இது ஒரு நகைச்சுவையாக உள்ளது. நகைச்சுவை நாடகம் என்பதே உண்மை. நாளை மாற்றம் வரும் என எதிர்பார்க்கின்றேன்" என வடிவேல் சுரேஷ் தெரிவிக்கின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதில் அமைச்சு பொறுப்புக்களை ஏற்குமாறு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடம் ஜனாதிபதி விடுத்த வேண்டுக்கோள் குறித்து, தாம் இதுவரை ஆராயவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதன் தெரிவிக்கின்றார்.

இந்த அழைப்பு குறித்து விரைவில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடல்களை நடத்தி தீர்மானமொன்றை எடுப்பார்கள் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு நேற்றைய தினம் ஊரடங்குக்கு மத்தியில் நடத்திய போராட்டத்திற்கு, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தாங்கள் எந்தவிதத்திலும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
கோட்டாபயவை வீட்டிற்கு செல்லுமாறு நாட்டு மக்கள் கூறிய வருகின்ற நிலையில், அவர்களுடன் இணைந்து அமைச்சு பொறுப்புக்களை ஏற்க தமது கட்சி ஒரு போதும் இணங்காது என அவர் கூறுகின்றார்.
அத்துடன், கோவிட் நிலைமைகளின் போதும், உர பிரச்னைகளின் போதும், தமது கட்சியிடம் கலந்துரையாட மறுப்பு தெரிவித்து, தானாக முடிவுகளை எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ, இன்று இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளதாக அவர் நினைவுப்படுத்தினார்.
இவ்வாறு செயற்படும் ஒருவருடன் இணைந்து, மக்கள் ஆணைக்கு எதிராக தமது கட்சி ஒருபோதும் செயற்படாது என மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்





























