இலங்கையில் சமூக ஊடக முடக்கத்தை விமர்சித்த நாமல் ராஜபக்ஷ - உடனடியாக தளர்த்திய அரசு

பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் முடக்கப்பட்டிருந்த சமூக ஊடக சேவைகளை பயனர்கள் அணுகுவதற்கான வசதியை அரசு மீண்டும் வழங்கியிருக்கிறது.
முன்னதாக, இலங்கையில் நடைபெறும் போராட்டங்கள் தொடர்பான தவறான தகவல்கள் மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதாகக் கூறி சமூக ஊடகங்களுக்கான அணுகுவதற்கு 36 மணி நேர கட்டுப்பாட்டை இலங்கை அரசு விதித்தது.
இது தொடர்பான ஊடரங்கு உத்தரவின்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எழுத்துபூர்வ அனுமதியின்றி எந்தவொரு பொது வீதி, பூங்கா, ரயில்கள், அல்லது கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவு சனிக்கிழமை மாலையில் அமல்படுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து நாட்டில் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டன. வாட்ஸ்அப் செயலியும் பல இடங்களில் செயலிழந்தது. இவை "தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று ஒரு செல்பேசி பயனர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை அரபு கால பாணி என்று சமூக ஊடக பயனர்கள் பரவலாக விமர்சித்தனர்.
இதில் முக்கியமானதாக இலங்கை அமைச்சரும் பிரதமரின் மகனுமான நாமல் ராஜபக்ச சமூக ஊடகங்களை முடக்கும் நடவடிக்கை விமர்சித்து வெளிப்படையாகவே தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டிருந்தார். இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான அவர், "முற்போக்கான முறையில் சிந்தியுங்கள்" என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், "சமூக ஊடகங்களை முடக்கும் நடவடிக்கையை நான் ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன். நான் இப்போது பயன்படுத்துவதைப் போலவே VPN வசதி இருந்தால் இதுபோன்ற கட்டுப்பாடுகளை அது முற்றிலும் பயனற்றதாக்குகிறது. அதிகாரிகள் இன்னும் முற்போக்காகச் சிந்தித்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்," என்று நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இந்த ட்விட்டர் சமூக ஊடகங்களில் பரவலான வரவேற்பைப் பெற்ற நிலையில், அது பகிரப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் சமூக ஊடக அணுகல் வசதியை இலங்கை தகவல் மற்றும் தொலைதொடர்புத்துறை மீண்டும் வழங்கியது.
முன்னதாக, சமூக ஊடக அணுகலுக்கான வசதி முடக்கப்பட்டதை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடுமையாக எதிர்த்தது. இது மக்களின் கருத்துச் சுதந்திரத்தின் "முக்கிய அம்சம்" என்றும், "பாரம்பரிய ஊடகங்களைப் போலவே முக்கியமானது" என்றும் கூறியது.
"பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கையின்" அடிப்படையில், சமூக ஊடக அணுகலைக் கட்டுப்படுத்துமாறு சேவை வழங்குநர்களைக் கோருவதற்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு (TRCSL) "அதிகாரம் இல்லை" என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கருத்துச் சுதந்திரத்தை "நசுக்கும் வகையில்" அரசாங்கத்தின் செயல்பாடு இருப்பதாக கடுமையாக சாடினார்கள்.
ஜனாதிபதி வீடு அருகே வன்முறை

பட மூலாதாரம், EPA
முன்னதாக, இலங்கை பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்தி வந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக, ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை போராட்டக்குழுவைச் சேர்ந்த சிலர் தீக்கிரையாக்கினர். நாட்டின் எந்த பகுதியிலும் புதிய போராட்டங்களை தடுக்கும் நோக்கில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து வீதிகளில் ராணுவம் நிலைநிறுத்தப்பட்டது. சந்தேக நபர்களை பிடியாணை இன்றி கைது செய்யும் அதிகாரம் ராணுவத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
தீவிரமாகும் வன்முறை

பட மூலாதாரம், NurPhoto/Getty Images
தீவு நாடான இலங்கை, தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சிக்கியுள்ளது. இந்த நெருக்கடி காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு தீவிரமானது. மின் உற்பத்தி நிலையங்களில் தயாரிப்புப் பணிகள் பாதிக்கப்பட்டு மக்கள் அன்றாடம் அரை நாள் அல்லது அதற்கு மேல் மின்வெட்டை எதிர்கொண்டு வருகிறார்கள்.
இத்துடன் அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துகளுக்கும் நாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டதால் பொதுமக்களின் கோபம், புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அவர்களின் போராட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொழும்பு இல்லத்திற்கு வெளியே வியாழக்கிழமை அமைதியான முறையில் தொடங்கியது, ஆனால், காவல்துறையினர் போராட்டக்குழுவினரை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் நடவடிக்கை எடுத்தனர்.
அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்குழுவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் காவல்துறையினரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் மேற்கோள் காட்டப்பட்ட ஒரு அதிகாரியின் கூற்றுப்படி, இந்த மோதல்களின் போது குறைந்தது இருபத்து நான்கு காவல்துறையினர் காயமடைந்தனர்.
இந்த போராட்டம் மறுநாளான வெள்ளிக்கிழமையும் தொடர்ந்தது. அப்போது 53 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர், மேலும் ஐந்து செய்தி புகைப்படக்காரர்கள் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
காவல்துறை மூலம் ஒடுக்குமுறை மேற்கொள்ளப்பட்டபோதும் மக்களின் போராட்டங்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது. தலைநகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி பதவி விலகக் கோரி பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு முழக்கமிட்டனர்.

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்




























