யுக்ரேனை கொரியா போல இரண்டாக உடைக்க நினைக்கும் ரஷ்யா: யுக்ரேன் உளவுத் துறை

யுக்ரேன்

பட மூலாதாரம், Reuters

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

கொரியாவைப் போல யுக்ரேனை இரண்டாகப் பிளக்க ரஷ்யா முயல்வதாக யுக்ரேன் நாட்டு ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.

யுக்ரேன் முழுவவதையும் கைப்பற்றும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், யுக்ரேனை இரண்டாக உடைத்து ஒன்றை ரஷ்ய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முயற்சி நடப்பதாக யுக்ரேன் ராணுவ உளவுத் துறையின் தலைவர் கைரைலோ புடனோவ் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

யுக்ரேனில் 'வட கொரியா, தென் கொரியா' போல ஒரு பிளவை உருவாக்க ரஷ்யா முயல்வதாகவும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய படையெடுப்பு பெரிய அளவில் தடுக்கப்பட்டுள்ள நிலையில், யுக்ரேனின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் மட்டும் புதின் கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரண்டு பகுதிகளையும் ரஷ்யாவால் இணைக்க முடியுமானால், கொரிய போருக்குப் பிறகு நிகழ்ந்ததைப் போல இந்தப் பகுதியையும் யுக்ரேனின் பிற பகுதிகளையும் பிரிக்கும் ஒரு கோட்டினை உருவாக்க புதின் முயல்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.

யுக்ரேன் கொரில்லா தாக்குதலில் ஈடுபடும்

வரைபடம்

விரைவில் ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதிகளில் யுக்ரேன் கொரில்லா தாக்குதலில் ஈடுபடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ரஷ்யா தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதில் உள்ள பிரச்சனையே கிழக்கு யுக்ரேனுக்கும் க்ரைமியாவுக்கும் இடையில் நில வழித்தடம் ஒன்றை உருவாக்கிப் பராமரிப்பதுதான். ரஷ்யாவுக்கு அதன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதில் தடையாக இருப்பது வெல்லமுடியாததாக இருக்கும் மேரியோபோல் நகரம்தான் என்று கூறியுள்ள புடனோவ், ஆனால், உள்ளூர் மக்களின் எதிர்ப்பு காரணமாக அப்படி ஒரு நாடு போன்ற ஒன்றை உருவாக்கிக் கொள்வது சாத்தியமற்றது என்றும் கூறுகிறார்.

ரஷ்யாவில் ஆட்சி மாற்றம் கொண்டுவரும் திட்டமில்லை - அமெரிக்கா

ரஷ்யாவிலோ வேறு எங்குமோ ஆட்சி மாற்றம் கொண்டுவர அமெரிக்காவுக்கு திட்டம் ஏதுமில்லை என்று தெரிவித்தார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்.

போலந்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய அதிபராக விளாதிமிர் புதின் தொடர அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்திருந்தார். அவரது உரையின் இறுதிப் பகுதியில் தயாரிப்பில்லாத பேச்சாக இந்தக் குறிப்பு இடம் பெற்றது.

இந்தப் பின்னணியில்தான் ஆன்டனி பிளிங்கனின் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.

யுக்ரேன் மீதான போரை தொடர்வதற்கு புதின் அனுமதிக்கப்படக்கூடாது என்பதைத்தான் பைடன் அப்படிக் குறிப்பிட்டதாக தனது இஸ்ரேல் பயணத்தின்போது தெரிவித்தார் பிளிங்கன்.

ஆனால், பைடனின் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய ரஷ்ய அதிபர் மாளிகையான கிரம்ளின், ரஷ்யாவின் தலைவரைத் தேர்ந்தெடுப்பது அதன் மக்கள்தான் என்று தெரிவித்திருந்தது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :