யுக்ரேன் போரில் ரஷ்ய ஜெனரல் பலி: லுவீவ் நகரில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடிப்பு

யுக்ரேன் மீதான தாக்குதலின்போது ரஷ்ய ஜெனரல் கொல்லப்பட்டார்

பட மூலாதாரம், Denis Nasik/Wikimediacommons

பிரசுரிக்கப்பட்டது

யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு 31-வது நாளாகத் தொடரக்கூடிய சூழலில் ரஷ்ய ஜெனரலான, லெப்டினென்ட் ஜெனரல் யாகோவ், யுக்ரேனின் தெற்கு நகரமான கெர்சனில் கொல்லப்பட்டதாக யுக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேற்கத்திய அதிகாரி ஒருவர், யுக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கியதில் இருந்து கொல்லப்பட்டுள்ள ஏழாவது ரஷ்ய ஜெனரல் இவர் என்றும் லெப்டினென்ட் ஜெனரல் வரிசையில் இரண்டாவது நபர் என்றும் கூறியுள்ளார்.

ரஷ்ய படை வீரர்களின் மன உறுதி மிகவும் குறைந்து வருவதால், ரஷ்யாவின் மூத்த அதிகாரிகள் அதிக அளவில் படையெடுப்பில் பங்கேற்கும் சூழல் உருவாகியுள்ளதாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையே, இன்றைய படையெடுப்பின்போது, யுக்ரேனிய துறைமுக நகரத்தில் இருந்து பொதுமக்களை எவ்வாறு வெளியேற்றுவது என்பது குறித்து யுக்ரேன் நாட்டிற்கான பிரெஞ்சு தூதருடன் பேசியதாக மேரியோபோல் மேயர் கூறினார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிபருடன் பிரான்ஸ் அதிபர் பேச்சுவார்த்தை

இது தொடர்பாக மேரியோபோல் நகரில் சிக்கியுள்ள 1,00,000 மக்களை வெளியேற்ற எவ்வாறு உதவுவது என்பது குறித்து ரஷ்யாவின் அதிபர் விளாதிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடுகளான கிரீஸ் மற்றும் துருக்கியும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. மேரியோபோல் நகர் மையத்தில் சண்டை நடந்து வருவதாக மேயர் வாடிம் பேயிச்சென்கோவும் தேசிய தொலைக்காட்சியில் கூறியுள்ளார்.

இந்நிலையில், ரஷ்ய படைகள், செர்னோபிளின் செயலிழந்த அணு மின் நிலையத்தில் பணியாற்றிய ஊழியர்கள் தங்கியிருக்கும் நகரமான ஸ்லாவுட்டிச் நகரை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக, ஸ்லாவுட்டிச் கவர்னர் ஒலெக்ஸாண்டர் பாவல்யுக் தெரிவித்துள்ளார்.

படையெடுப்பின் தொடக்கத்திலேயே செர்னோபில் ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, படையெடுப்பின் தொடக்கத்திலேயே செர்னோபில் ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது

மேலும் அவர் கூறுகையில், ரஷ்ய படை வீரர்கள் தற்போது இந்த நகரத்தின் மருத்துவமனையைக் கைப்பற்றி, மேயரை கடத்திச் சென்றனர் என்று டெலிகிராம் செயலியில் செய்தியை வெளியிட்டார்.

1986-ஆம் ஆண்டு பேரழிவிற்குப் பிறகு செர்னோபிள் ஐ.நா-வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு, நகரத்தில் நடக்கும் சண்டைகளால் தொழிலாளர்கள், இன்னும் பல அணுக் கழிவு கட்டுப்பாடு வசதிகளைக் கொண்ட ஆலைக்குச் சென்று வருவதைத் தடுப்பதாக வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவலில் கூறியுள்ளது.

படையெடுப்பின் தொடக்கத்திலேயே ரஷ்ய படைகள் செர்னோபிளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

லுவிவ் நகரில் மூன்று குண்டுவெடிப்புகள்

லுவிவ் நகரில் மூன்று சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்த சத்தம் கேட்டுள்ளது.

மேற்கு யுக்ரேன் நகரமான லுவிவ் நகரில் பல குண்டுவெடிப்புகள் நடந்துள்ளதாக பிபிசிக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. கீழேயுள்ள ஒளிப்படம் தூரத்தில் புகை எழுவதைக் காட்டுகிறது.

லுவிவ் நகரில் நடந்த குண்டுவெடிப்பு
படக்குறிப்பு, லுவிவ் நகரில் நடந்த குண்டுவெடிப்பு

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலந்தில் யுக்ரேன் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். போர் தொடங்கியதில் இருந்து நடக்கக்கூடிய மிக உயர்ந்த நேருக்கு நேர் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தப் பேச்சுவார்த்தையில், பைடன் கூடுதல் ராணுவ உதவிகளை அளிக்க உறுதியளித்துள்ளதாக யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால், அதுகுறித்த விவரங்களை இன்னும் தெரிவிக்கவில்லை.

அதோடு, புதின் நேட்டோவை பிளவுபடுத்த எதிர்பார்த்ததாகவும் அது நடக்காததைக் கண்டு புதின் ஆச்சர்யத்தில் இருப்பதாகவும் பைடன் கூறியுள்ளார்.

"யுக்ரேன் மக்களுக்காக பிரிட்டன் இன்னும் அதிகமாக செய்யவேண்டும்"

யுக்ரேன் மக்களுக்கு ஒருங்கிணைந்த ஆதரவை வழங்குவதற்காக இன்று மதியம் லண்டனின் ஹைட் பூங்கா அருகே ஒரு மிகப்பெரிய அணிவகுப்புக் கூட்டம் நடந்தது.

லண்டன் ஹைட் பூங்காவில் யுக்ரேன் மக்களுக்கு ஆதரவான அணிவகுப்பு

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, லண்டன் ஹைட் பூங்காவில் யுக்ரேன் மக்களுக்கு ஆதரவான அணிவகுப்பு

யுக்ரேனுக்கு ஆதரவான அந்த அணிவகுப்பில், யுக்ரேன் அகதிகளுக்கு உதவ பிரிட்டன் "இன்னும் அதிகமாக" செய்யவேண்டும் என்று லண்டன் மேயர் கூறினார்.

மேலும், "கடந்த சில வாரங்களாக லண்டன் மக்கள், யுக்ரேனில் சிறந்த பணிகளைச் செய்யும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிப்பதன் மூலமோ அல்லது யுக்ரேனில் இருந்து தப்பி வருபவர்களுக்காக இடம் கொடுப்பதன் மூலமோ, யுக்ரேனிய அகதிகளுக்குத் தங்கள் ஆதரவைக் காட்டுகிறார்கள்," என்று லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளார்.

அதோடு, அடுத்த சில வாரங்களில், "யுக்ரேனில் இருந்து தப்பி வருபவர்கள் இங்கு வருவதை எளிதாக்க வேண்டியது அவசியம்" என்றும் கூறியுள்ளார்.

காணொளிக் குறிப்பு, வேக்யூம் வெடிகுண்டை கையில் எடுத்ததா ரஷ்யா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: