குல்சார் பலூச்: பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் 756 கிலோமீட்டர் நடை பயணத்தை இவர் மேற்கொண்டது ஏன்?

பிரசுரிக்கப்பட்டது

"பலூசிஸ்தானின் தொலைதூரப் பகுதிகளில் வறுமையின் காரணமாக நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் வெறுங்காலுடன் நடக்கின்றனர். எனவே என்னாலும் வெறுங்காலுடன் நடக்கமுடியும் என்று நான் உறுதியாக நம்பினேன்."

இரானுடனான எல்லையில் உள்ள பலூசிஸ்தானின் கெச் மாவட்டத்தில் வசிக்கும் குல்சார், மாகாணத்தில் காணாமல் போனவர்களை மீட்பதற்காக துர்பத்திலிருந்து குவெட்டா வரை சுமார் 776 கி.மீ. நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

தூரத்தைப் பொருத்தவரை, கடந்த எட்டு ஆண்டுகளில் பலூசிஸ்தானில் இருந்து மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பெரிய பாத யாத்திரை இதுவாகும். இதில் பெண்களும் அவருடன் இணைந்துள்ளனர்.

பலூசிஸ்தானில் இருந்து காணாமல் போனவர்களின் உறவினர்களின் அமைப்பான ' வாய்ஸ் ஃபார் பலூச் மிஸ்ஸிங் பெர்ஸன்ஸ்' அமைப்பின் துணைத் தலைவர் மாமா கதீர் பலூச்சின் பெயரால் நடத்தப்படும் இந்த நடைபயணம், நான்கு நோக்கங்களைக் கொண்டுள்ளது.

குல்சார் பலூச் எதை அடைய விரும்புகிறார்?

இந்த அணிவகுப்பின் மூலம் நான்கு நோக்கங்களை நிறைவேற்ற விரும்புவதாகவும், அதில் முக்கியமானது காணாமல் போனவர்களை மீட்பது என்றும் குல்சார் பலோச் கூறினார்.

"காணாமல் போனோர் விவகாரம் மீது உலகின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றும், காணாமல் போன எல்லா பலூச் மக்களையும் பாதுகாப்பாக மீட்டெடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்," என்று அவர் கூறினார்.

"இரண்டாவது பெரிய பிரச்சனை போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாகாணத்தில் கட்டுப்பாடுகள் இல்லாத அதன் பயன்பாடு. தற்போது பலூசிஸ்தான் மற்றும் சிந்துவில் உள்ள பலூச் மக்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். போதைப்பொருள் ஒரு விஷம். அதன் மூலம் பலூச் மக்கள் பாழாக்கப்படுகிறார்கள்," என்று அவர் குறிப்பிட்டார்.

பலூசிஸ்தானில் இருந்து எல்லைப் படையை அகற்றுவதும், இந்த நடைப்பயணத்தின் நோக்கங்களில் ஒன்றாகும் என்று குல்சார் கூறினார். இந்தியாவில் 1894-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டமே இப்போதும் இங்கு தொடர்கிறது என்றார் அவர்.

இந்தச் சட்டத்தின் மூலம் பலூசிஸ்தான் மக்களின் மதிப்புமிக்க நிலங்கள் பறிக்கப்படுவதாகவும், இதுவரை ஆயிரக்கணக்கான ஏக்கர் பலூச் நிலங்கள் இந்தச் சட்டத்தின் கீழ் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

"ஏதாவது ஒரு சாக்குபோக்கை சுட்டிக்காட்டி, பலூச் மக்களை அவர்களின் சொந்த நிலத்திலிருந்து வெளியேற்றும் செயல்முறை நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்."என்றார் அவர்.

இந்த அணிவகுப்பு எப்போது தொடங்கியது, எத்தனை நாட்களில் முடியும்?

குல்சார் தோஸ்த் இந்த ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி கெச் மாவட்டத்தின் தலைமையகமான துர்பத்தில் இருந்து கால் நடையாக நீண்ட அணிவகுப்பைத் தொடங்கினார். அவரது இலக்கு பலூசிஸ்தானின் தலைநகரான குவெட்டா ஆகும்.

துர்பத்திலிருந்து குவெட்டா வரை அவர் அணிவகுத்துச்செல்லும் நெடுஞ்சாலை பெரும்பாலும் வறண்ட பாலைவனம் மற்றும் மலைப்பகுதிகள் வழியாக செல்கிறது. அவர் இந்த 776 கி.மீ தூரத்தை 22 நாட்களில் கடந்து குவெட்டாவை அடைவார்.

தான் தினமும் சராசரியாக 35 கி.மீ.நடப்பதாக குல்சார் கூறினார்.

சாலையில் நடப்பதால் கால்களில் கொப்புளங்கள்

துர்பத் சிவில் சொசைட்டியும்,தானும், இந்த அணிவகுப்பை தனித்துவமாக்க வெறுங்காலுடன் செல்ல முடிவு செய்ததாக குல்சார் கூறினார்.

"பலூசிஸ்தானின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள எங்கள் மக்கள் வறுமையின் காரணமாக வெறுங்காலுடன் நடப்பதால் என்னாலும் இந்த அணிவகுப்பை வெறுங்காலுடன் செய்ய முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று அவர் கூறினார்.

"நான் துர்பத்தில் இருந்து புறப்பட்டு இரண்டு நாட்கள் வெறுங்காலுடன் நடந்து சென்றேன். கடினமான சாலையால், என் கால்களில் முதலில் கொப்புளங்கள் வந்தன, பின்னர் அவை பிளவுபட்டு ரத்தம் வர ஆரம்பித்தது,"என்றார் அவர்.

காலில் காயம் ஏற்பட்டு நடப்பது மிகவும் சிரமமாக ஆன போதிலும், அவர் நடைபயணத்தைத் தொடர்ந்தார். ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு டாக்டர் ஹனிஃப் ஷெரீப்பின் தாயார் நசீமா பலோச் மற்றும் அவரது மகள் அவரிடம் வந்து ஷூ அணியுமாறு வற்புறுத்தினார்கள்.

"நான் அவரை என் தாயாரைப்போலவே பார்க்கிறேன். நான் மறுத்ததால், அவரும் வெறுங்காலுடன் நடக்க ஆரம்பித்தார். அவர் சிரமப்படுவதை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. எனவே நான் அவருக்கு கீழ்ப்படிந்து செருப்புகளை அணிந்தேன்,"என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த அணிவகுப்பை தனித்துவமாக்க துர்பத்திலிருந்து குவெட்டா வரை தனியாக நடந்து செல்ல முடிவு செய்ததாக குல்சார் பலோச் கூறினார்.

துர்பத் சிவில் சொசைட்டியின் முடிவின்படி, பஞ்ச்கூர் வரை இந்த நடைப்பயணத்தை அவர் தனியாகவே மேற்கொண்டார். ஆனால் பஞ்ச்கூரில் உள்ள அவரது வகுப்புத் தோழரும் நண்பருமான யாகூப் ஜோஸ்கி, மேலும் இரண்டு நண்பர்கள் ஜுபைர் அஸ்கானி மற்றும் சலாம் பலோச் ஆகியோரும் உடன் செல்ல வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த வேண்டுகோள் குறித்து சங்க உறுப்பினர்களுடன் தான் கலந்தாலோசித்ததாகவும், அவர்களின் அனுமதியுடன் இந்த மூன்று நண்பர்களும் பஞ்ச்கூரில் இருந்து தன்னுடன் இணைந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

நடைப்பயணம் மாமா கதீரின் பெயரால் ஏன்?

காணாமல் போனவர்களை மீட்பதற்காக மாமா கதீர் பலூச், வலுவான குரல் கொடுத்ததாகவும், எனவே தனது அணிவகுப்புக்கு அவரின் பெயரை சூட்டியதாகவும் குல்சார் கூறினார்.

மாமா கதீர் பலூச், லாங் மார்ச் நடத்தியது மட்டுமல்லாமல், நவீன உலக வரலாற்றில் மிக நீண்ட அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தினார். இது தற்போது 4600 நாட்களுக்கு மேலாக நடக்கிறது என்று அவர் கூறுகிறார்.

தங்களின் பாத யாத்திரையை மாமா கதீரின் அணிவகுப்புடன் எந்த வகையிலும் ஒப்பிட முடியாது என்கிறார் குல்சார் பலோச். "மாமா கதீர் இந்த அணிவகுப்பை நடத்தியபோது அவருடைய வயதை கருத்தில் கொண்டு பார்த்தால், இந்த நவீன யுகத்தில் மக்கள் அந்த அந்த வயதில் இவ்வளவு கடினமான மற்றும் நீண்ட நடைப்பயணத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாது."என்று அவர் விளக்கினார்.

மாமா கதீரின் அணிவகுப்பு சிரமங்கள் நிறைந்ததாக இருந்ததாக அவர் கூறுகிறார். ஆனால் தான் துர்பத்திலிருந்து குவெட்டா வரை பலூச் மக்கள் வசிக்கும் பகுதி வழியாகச் சென்றதால், தனக்கு எந்தப்பிரச்சனைகளும் ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

"எல்லா இடங்களிலும் மக்கள் எங்களை அன்புடன் வரவேற்றனர் . உணவுடன் கூடவே, தங்கவும் இடம் அளித்தனர்," என்று குல்சார் கூறினார்.

இந்த நேரத்தில் பலூசிஸ்தான் மக்கள் இக்கட்டான சூழலை எதிர்கொள்வதாகவும், அவர்களின் சிறு போராட்டம் அவர்களின் கடமையை நிறைவேற்றும் முயற்சி என்றும் குல்சார் பலூச் கூறினார்.

இந்த நடைப்பயணத்தால் பலன் உண்டா என்று கேட்டதற்கு, உலகில் எந்தப் போராட்டமும் வீண் போவதில்லை என்றார் அவர்.

முன்னதாக, மாமா கதீர் பலூச் நீண்டதூர பாத யாத்திரையை நடத்தினார். அதன் காரணமாக காணாமல் போன எத்தனை பலூச் மக்கள் மீட்கப்பட்டனர் என்பது பற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை. ஆனால் பலூசிஸ்தானின் மிகப் பெரிய மற்றும் மிகத் தீவிரமான பிரச்சனை மக்கள் காணாமல் போவது என்று மாமா கதீர் உலகம் முழுவதற்கும் கூறியதுடன், காணாமல் போனோர் விவகாரத்தின் மீது முழு உலகத்தின் கவனத்தையும் ஈர்த்தார்.

எல்லா பலூச்சுக்களையும் ஒன்று திரட்டி, காணாமல் போனோர் பிரச்சனையை அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டின் பிரச்சனையாக நினைக்கவேண்டும் என்பதை உணர்த்துவது, தனது நடைப்பயணத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்றும் அவர் கூறினார்.

பலூசிஸ்தானில் இருந்து காணாமல் போனவர்களை மீட்பதற்காக முதலில் குவெட்டாவிலிருந்து கராச்சி வரையிலும் பின்னர் கராச்சியிலிருந்து இஸ்லாமாபாத் வரையிலும் 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மாமா கதீர் பலூச் தலைமையில் அணிவகுப்பு நடத்தப்பட்டது.

இந்த நீண்டதூர அணிவகுப்பில் ஒரு குழந்தை உட்பட பல பெண்களும் கலந்து கொண்டனர். இந்த அணிவகுப்புக்குப் பிறகு, பலூசிஸ்தானில் உள்ள மக்கள் தங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க குவெட்டாவிற்கு பல பாத யாத்திரைகளை மேற்கொண்டனர்.

குல்சார் பலூச் யார்?

குல்சார் தோஸ்த் பலோச் , இரானுடனான எல்லையில் உள்ள பலூசிஸ்தானில், கெச் மாவட்டத்தின் திசாபான் பகுதியில் வசிப்பவர். அவர் தனது ஆரம்பக் கல்வியை கெச் மாவட்டத்தில் முடித்தார் மற்றும் குவெட்டாவில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

பலூசிஸ்தான் பல்கலைக்கழகத்தில், பத்திரிகையியல் மற்றும் அரசியல் அறிவியலில் எம்ஏ பட்டம் பெற்றவர்.

தனது மாணவப் பருவத்தில்அவர், பிரபல மாணவர் அமைப்பான பலூச் மாணவர் அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்தார். அவர் பலூசிஸ்தான் சிவில் சொசைட்டியின் தலைவராகவும், துர்பத் சிவில் சொசைட்டியின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: