You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டிஷ் படைகள் முழுமையாக வெளியேறின - தூதர் நாடு திரும்பினார்
ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டன் படைகள் முழுமையாக வெளியேறின. ஆப்கானிஸ்தானுக்கான பிரிட்டன் தூதர் சர் லௌரி பிரிஸ்டோ பிரிட்டன் போய்ச் சேர்ந்தார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து கிளம்பும் கடைசி பிரிட்டன் விமானம் எஞ்சியிருந்த பிரிட்டன் படையினரை ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை கிளம்பியது.
ஆகஸ்ட் 14ம் தேதி முதல் சுமார் 15 ஆயிரம் பேரை ஆப்கனில் இருந்து பிரிட்டன் வெளியேற்றியுள்ளது.
பிற நேசநாட்டுப் படையினரும் பாதுகாப்பாக வெளியேறும் வரை படை விலக்கல் நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்தது என்று சொல்வதற்குப் பதற்றமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் பிரிட்டன் வெளியேற்ற நடவடிக்கையை முன்னின்று நடத்திய வைஸ் அட்மிரல் சர் பென் கே.
இது ஒரு மிகப்பெரிய சர்வதேச நடவடிக்கை என்றும் ஆனால், நமக்கு இது கொண்டாடுவதற்கான தருணம் அல்ல என்றும் அவர் கூறியிருந்தார். விட்டுவிட்டு வர நேர்ந்தவர்களை நினைத்து சோகம் மேலிடுவதாகவும் அவர் கூறினார்.
பிரிட்டன் ஆப்கானிஸ்தானில் இருந்து கிளம்பியது, நம்முடைய வாழ்நாளில் பார்த்திராத வகையிலான ஒரு நடவடிக்கையின் நிறைவு என்று கூறினார் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன்.
தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய சூழ்நிலையில் வெளியேற விரும்பியவர்களுக்கான ஏற்பாடுகளை செய்தவரான பிரிட்டன் தூதுவர் லௌரி பிரிஸ்டோ கிளம்பிய விமானம் ஐக்கிய அரபு அமீரகம் வழியாக ஞாயிற்றுக்கிழமை பிரிட்டன் வந்து சேர்ந்தது.
காபூலில் விமானப் போக்குவரத்து குறைந்தது
காபூல் விமான நிலையத்தில் இருந்து இப்போது மிகக் குறைவான தகவல்களே கிடைக்கின்றன. அங்கிருந்த பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. தாலிபன்கள் அங்கு தங்கள் பாதுகாப்பை பலப்படுத்திவிட்டனர்.
அதே நேரம் புதிய தாக்குதல்கள் நடக்கலாம் என்ற அச்சமும் அங்கே இருக்கிறது.
"இன்று காலை காபூல் விமான நிலையத்தில் ஒரே ஒரு அமெரிக்க விமானம்கூட இருக்கவில்லை. ஒட்டுமொத்தத்தில் நேற்று இருந்ததைவிட குறைவான எண்ணிக்கையிலேயே விமானங்கள் இருந்தன," என்று கூறியிருக்கிறார் இன்னும் காபூலில் இருக்கும் அல் ஜசீரா ஊடக நிறுவனத்தை சேர்ந்த சார்லட்டி பெல்லிஸ்.
நூற்றுக் கணக்கானவர்கள் இன்னும் நாட்டைவிட்டு வெளியேற முயற்சி செய்கிறார்கள். தாலிபன் போராளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிலர் பேருந்துகள் மூலம் விமான நிலையத்துக்குள் நுழைகிறார்கள் என்று அவர் கூறினார்.
காபூல் விமான நிலையத்தில் அமெரிக்கப்படையினர் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்