ஆப்கான் கல்விக் கூடத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் - 18 பேர் உயிரிழப்பு மற்றும் பிற செய்திகள்

காயமடைந்தவர்களில் பலர் மாணவர்கள்

பட மூலாதாரம், Reuters

பிரசுரிக்கப்பட்டது

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கல்வி கூடம் ஒன்றிற்கு அருகில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மாணவர்களுக்கு உயர்நிலை வகுப்புப் பாடங்களை வழங்கும் தனியார் கல்வி கூடத்தில் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஷியா முஸ்லிம் மக்கள் அதிகமாக வசிக்கும் டாஷ் இ பார்ச்சி என்னும் பகுதியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயில வருவார்கள்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என ஐஎஸ் அமைப்பு சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளது. ஆனால் எந்த ஒரு ஆதாரத்தையும் வெளியிடவில்லை.

முன்னதாக இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தாலிபான் தெரிவித்திருந்தது.

காயமடைந்தவர்களில் பலர் மாணவர்கள்

பட மூலாதாரம், Reuters

தற்கொலைக் குண்டு தாக்குதாரி அந்த கல்வி கூடத்திற்குள் நுழைய முற்பட்டார் என உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார் என ஏஎஃப்பி செய்தி முகமை தெரிவிக்கிறது.

மேலும் தாக்குதல்தாரி பாதுகாவலர் ஒருவரால் அடையாளம் காணப்பட்டவுடன் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது.

உள்ளூர் குடியிருப்புவாசியான அலி ரெசா, கல்வி கூடத்திற்குள் செல்ல காத்திருந்த மாணவர்கள்தான் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாகவும், காயமடைந்துள்ளதாகவும் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்தார். "நான் அந்த கல்வி கூடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் இருந்தேன். அப்போது ஒரு பெரிய வெடிச்சத்தம் என்னை நிலைகுலையச் செய்தது," என அவர் தெரிவித்தார்.

Presentational grey line

நாசா விண்கலத்தில் உடைந்த கதவு: கீழே சிந்தும் சிறுகோள் துகள்கள்

நாசா விண்கலத்தில் உடைந்த கதவு: கீழே சிந்தும் சிறுகோள் துகள்கள்

பட மூலாதாரம், Reuters

பூமியிலிருந்து பல மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறு கோளில் இருந்து மாதிரிகளை எடுத்து வர நாசாவால் விண்கலம் ஒன்று அனுப்பப்பட்டு இருந்தது.

அந்த விண்கலம் அளவுக்கு அதிகமான மாதிரிகளை எடுத்துவிட்டதால் மாதிரிகளில் சில கீழே விழுகின்றன.

இந்த ஒஸிரிஸ்-ரெக்ஸ் விண்கல திட்டத்திற்கு பின்னால் உள்ள அதிகாரிகள் இந்த திட்டம் பெரும் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த விண்கலம் இந்த வாரம் தொடக்கத்தில் பென்னு எனும் சிறுகோளில் தரை இறங்கி உள்ளது.

உள்ளே இருக்கும் கூர்மையான பாறை ஒன்றால் வெட்டப்பட்டு, இந்த விண்கலத்தில் உள்ள கொள்கலன் ஒன்றின் கதவில் விரிசல் விட்டுள்ளதாகவும், அதில் இருந்து மிக மிகக் குறைந்த அளவு மாதிரிகள் கீழே சிந்துவதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

அந்த விண்கலத்தை பாதுகாப்பாக தரை இறக்க நாசா முயல்கிறது.

Presentational grey line

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: