You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நித்தியானந்தா கைலாசாவில் யாருக்கு முன்னுரிமை?
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி - 'கைலாசாவை கண்டுபிடிக்க முடியாது' - நித்தியானந்தா
தாம் உருவாகியுள்ள தனி நாடு என்று சாமியார் நித்தியானந்தா கூறும் கைலாசா நாட்டில் மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலையை சேர்ந்தவர்களுக்கு வணிக செயல்பாடுகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார் என்கிறது தினத்தந்தி செய்தி.
கைலாசா நாட்டில் ஹோட்டல் வைக்க அனுமதி கோரி, மதுரையை சேர்ந்த ஹோட்டல் அதிபர் ஒருவர் நித்தியானந்தாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். இதுகுறித்து நேரலையில் தோன்றி பேசிய நித்தியானந்தா, கைலாசா நாட்டு பொருளாதார, வணிக செயல்பாடுகளில், மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்தார்.
திருவண்ணாமலை மலை அடிவாரத்தின் பல்வேறு பகுதிகளில், சிசிடிவி கேமரா வைத்து தரிசனம் செய்து வருவதாக தெரிவித்த நித்தியானந்தா, சிசிடிவி சிக்னலை வைத்து கைலாசா நாட்டை கண்டுபிடிக்க இயலாது என்றும் சிரித்தவாறு கூறினார் என்கிறது அந்தச் செய்தி.
கைலாசா குறித்த பிபிசி தமிழின் விரிவான செய்தி:
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - மகேந்திர சிங் தோனி, ரோகித் சர்மா ரசிகர்கள் மோதல்
கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ். தோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் ரசிகர்களிடையே மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் மோதல் நடந்ததாக செய்திகள் வெளியான பின்பு, ரசிகர்களுக்குள் சண்டை எதுவும் இருக்கக் கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த பின் தோனிக்கு ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி பதாகைகள் வைக்கப்பட்டன.
அதற்கு சில நாட்களுக்குப் பின்பு ரோகித் சர்மாவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்ட பின்பு அவருக்காகவும் பதாகைகள் வைக்கப்பட்டன.
ரோகித் சர்மாவுக்காக வைக்கப்பட்ட பதாகைகள் சேதமாக்கப்பட்ட பின்பு தோனி மற்றும் ரோகித் சர்மாவின் ரசிகர்களிடையே மோதல் நடந்துள்ளது.
இதில் ஒரு தரப்பினர் இன்னொரு தரப்பினரைக் கரும்பு தோட்டத்தில் வைத்துத் தாக்கியுள்ளனர்.
தி இந்து - 'சீன பொருட்களை முற்றிலும் தடை செய்ய முடியாது'
சீனப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு எதிரான மனநிலை இந்தியாவில் அதிகமாக இருந்தாலும், அதை முழுமையாக செயல்படுத்துவது சாத்தியமில்லை என்று இந்திய அரசின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என்கிறது தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி.
"சீனாவின் முதலீடுகள் கணிசமான அளவு உள்ளன; சீனத் தயாரிப்புகளை முழுமையாக தடை செய்வது சாத்தியமில்லை; சில சீன நிறுவனங்கள் சீன ராணுவத்துடன் தொடர்பு இருப்பது கவலைக்குரிய ஒன்று," என்று பெயர் வெளியிட விரும்பாத இந்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என்கிறது அந்தச் செய்தி.
கிழக்கு லடாக்கில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே நடந்த மோதலுக்கு பின்பு சீன பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என பிரசாரம் இந்தியாவில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சீனாவுக்குச் சொந்தமான செயலிகளையும் இந்திய அரசு தடை செய்துள்ளது.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: