You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரேசில்: உச்சத்தை தொடும் கொரோனா பாதிப்பு; அடம்பிடிக்கும் அதிபர் - என்ன நடக்கிறது அங்கே?
"கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட ஒரு சாதாரண காய்ச்சல் போன்றதுதான்" என்று கூறும் அதிபர், பதவியேற்ற ஒரே மாதத்தில் ராஜிநாமா செய்த சுகாதாரத்துறை அமைச்சர், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டனுக்கு அடுத்து உலகளவில் நான்காமிடம் என அடுத்தடுத்து அதிர்வலைகளை எழுப்பி வரும் பிரேசிலிலிருந்து இன்று மற்றொரு செய்தி வெளிவந்துள்ளது.
கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரேசிலின் மிகப் பெரிய நகரமான சாவ் பாலோவில் இதே நிலை நீடித்தால் அடுத்த இரண்டு வாரங்களில் நகரின் சுகாதார அமைப்பு தகர்ந்துபோகும் என்று அதன் மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சாவ் பாலோ நகரிலுள்ள அரசு மருத்துவமனைகளில் 90 சதவீத இடம் ஏற்கனவே நிரம்பிவிட்டதாக மேயர் புருனோ கோவாஸ் எச்சரிக்கிறார்.
முடக்க நிலையை கடைபிடிக்காதவர்கள் மக்களின் உயிருடன் விளையாடுவதாக அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
பிரேசிலில் கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் ஒன்றான சாவ் பாலோவில் மட்டும் இதுவரை கிட்டத்தட்ட மூன்றாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
என்ன நடக்கிறது சாவ் பாலோவில்?
உலகின் பெரும்பாலான நகரங்களை போன்று சாவ் பாலோவிலும் இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே முடக்க நிலை அமலுக்கு வந்துவிட்டது. அங்கு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பள்ளி - கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு விட்டன.
இருந்தபோதிலும், மக்களில் பலர் முடக்க நிலை விதிகளை கடைபிடிக்காமல் வாரயிறுதிகளில் எப்போதும்போல கடற்கரைகளுக்கு சென்றதாக கூறுகிறார் பிபிசியின் தென் அமெரிக்க செய்தியாளர் கேட்டி வாட்சன்.
"சாவ் பாலோவில் விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களைத் தண்டிக்கும் திட்டங்கள் ஏதும் அமலில் இல்லை. எனவே, மக்கள் முகக்கவசங்களை அணியாமலும், சமூக விலகலை கடைப்பிடிக்காமலும் தெருக்களில் வழக்கம்போல் சென்றதை பார்க்க முடிந்தது" என்று அவர் கூறுகிறார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகளும் முடக்க நிலையில் தளர்வுகளை அறிவித்து இயல்புநிலையை நோக்கி திரும்பி வரும் நிலையில், சாவ் பாலோ நகரில் முடக்க நிலையை தீவிரமாக நடைமுறைப்படுத்தும் பேச்சுவார்த்தை இப்போதுதான் தொடங்கி உள்ளது.
சுமார் 1.2 கோடி மக்கள் தொகை கொண்ட சாவ் பாலோ நகரில் முடக்க நிலையை தீவிரப்படுத்துவது குறித்து தான் மாகாண ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக மேயர் கூறுகிறார்.
நகரம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் நெருக்கடி நிலை உருவாவதற்கு முன்னர் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டுமென்றும், அதற்கு மக்கள் தொடர்ந்து வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டுமென்றும் மேயர் கோவாஸ் கூறுகிறார்.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
என்ன சொல்கிறார் பிரதமர்?
பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 7,938 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதையும் சேர்த்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,41,000ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம், கொரோனா வைரஸ் பாதிப்பில் உலகளவில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டனுக்கு அடுத்து நான்காவது இடத்தை அடைந்துள்ளது பிரேசில். அங்கு இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் 16,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
நாடுமுழுவதும் போதிய அளவுக்குப் பரிசோதனைகளை மேற்கொள்ளாததால், நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகாரபூர்வ தரவை விட அதிகமாகவே இருக்குமென்று சுகாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
பிரேசிலில் கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் இவ்வளவு தீவிரமாக சென்றுகொண்டிருக்க, அந்த நாட்டின் அதிபரான தீவிர வலதுசாரி கொள்கை கொண்ட ஜெயிர் போல்சனாரோவோ இந்த விவகாரத்தில் தன் மீது உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு செவிசாய்க்கவில்லை. மேலும், சமூக விலகல் அறிவுரைகளையும் கிடப்பில் போட்டுவிட்டு, தனது ஆதரவாளர்களுடன் தலைநகர் பிரேசிலியாவில் நேற்று அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதுமட்டுமின்றி, தொடக்கத்திலிருந்தே முடக்க நிலைக்கு எதிரான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வரும் போல்சனாரோ, சமூக விலகல் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிடும் என்று வாதிடுகிறார்.
இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் நடந்த மாகாண ஆளுநர்களுடனான கூட்டத்தில் பேசிய அவர், "நமது வாழ்க்கை தொடர்ந்து நடக்க வேண்டும். வேலைகளை பாதுகாக்க வேண்டும். நாம் கண்டிப்பாக இயல்புநிலைக்குச் சென்றே தீர வேண்டும்" என்று கூறினார்.
பிரேசில் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், தான் உள்பட பெரும்பாலானவர்களுக்கு கொரோனா வைரஸால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று அவர் கூறி வருகிறார்.
கடந்த வாரம், பிரேசில் சுகாதார அமைச்சர் நெல்சன் டீச் தான் அந்த பதவியை ஏற்ற ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திலேயே ராஜிநாமா செய்தார். உடற்பயிற்சி மற்றும் அழகு நிலையங்களை மீண்டும் திறக்க அதிபர் போல்சனாரோ அளித்த ஆணையை பகிரங்கமாக விமர்சித்த பின்னர் அவர் பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: