யுக்ரைன் விமான விபத்து: விசாரணை தகவல் கூறுவது என்ன?

பிரசுரிக்கப்பட்டது

இரானில் 176 பயணிகளுடன் விபத்துக்குள்ளான யுக்ரைன் விமானம், விபத்து நடப்பதற்கு முன்னதாக விமான நிலையத்துக்கு திரும்பி செல்ல முயற்சித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போயிங் 737 -800 விமானம், டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து கிளம்பியவுடன் விபத்துக்குள்ளானது.

முதற்கட்ட விசாரணைகளில் அந்த விமானம் விமான நிலையத்தை விட்டு புறம்படும்போது கோளாறு ஏற்பட்டதாகவும் அதனால் தீப்பற்றியதாகவும் கூறப்பட்டது.

இரானின், உள்நாட்டு விமான போக்குவரத்து தலைவர் அலி அபெட்சாடே, "அந்த விமானம் முதலில் விமான நிலையத்தைவிட்டு வெளியேற மேற்கு நோக்கி பறந்த்து பின் பிரச்சனை என்றவுடன் அது வலது பக்கம் திரும்பி விமான நிலையத்தை நோக்கி வந்துள்ளது," என்று தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது.

இராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது இரான் தாக்குதல் நடத்திய சிறிது நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.

இருப்பினும் இரு சம்பவங்களுக்கு தொடர்பு இருப்பதாக எந்த தகவலும் இல்லை.

இரானின் முக்கிய தளபதி காசெம் சுலேமானீயை அமெரிக்கா கொன்றதையடுத்து இரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இருநாடுகளுக்கு மத்தியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

எனவே விபத்துக்குள்ளான உக்ரைன் விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட கருப்பு பெட்டியை அதன் உற்பத்தியாளரான போயிங் அல்லது அமெரிக்காவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று இரான் அறிவித்துள்ளது.

"விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியை நாங்கள் அதன் உற்பத்தியாளரிடமோ அல்லது அமெரிக்கர்களிடமோ கொடுக்கமாட்டோம்" என்று இரானின் விமானப்போக்குவரத்து அமைப்பின் தலைவர் அலி அபெட்ஸாதே தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சர்வதேச விதிகளின்படி விசாரணையை மேற்கொள்ள இரானுக்கு உரிமையுள்ளது.

விபத்துக்கான காரணம் என்ன?

விமானம் கடுமையாக சிதைந்துள்ளதால் பூமியில் விழுந்தபோது வேகமாக மோதியிருக்கலாம் அல்லது, பறந்துகொண்டிருக்கும்போதே ஏதாவது நிகழ்ந்திருக்கலாம் என்று விமானப் பயண பாதுகாப்பு நிபுணர் டாட் கர்டிஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த விமானம் எந்த வகையான கோளாறுகளையும் கொண்டிருந்ததாக அமெரிக்க அல்லது ஐரோப்பிய விமானப் பயண கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்று அவர் கூறுகிறார்.

வெளித்தோற்றத்தை வைத்துப் பார்க்கும்போது அது நன்றாக பராமரிக்கப்பட்ட விமானமாகவே தோன்றுகிறது என்கிறார் கர்டிஸ்.

உலகெங்கும் ஆயிரக்கணக்கான போயிங் 737 - 800 ரக விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவை பல கோடி பயணங்களையும் வெற்றிகரமாக முடிந்துள்ளன. இந்த வகை விமானங்கள் விபத்துக்கு உள்ளாவது இது 10வது சம்பவம் என்று அவர் தெரிவித்தார்.

இரான், உக்ரைன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் அதிகாரிகள் இந்த விபத்துக்கான காரணம் குறித்து ஆராய்வார்கள். ஆனால் அவர்கள் எப்படி ஒன்றாக செயல்படுவார்கள் என்று தெரியவில்லை என்று டாட் கர்டிஸ் தெரிவித்தார்.

பயணம் செய்தவர்கள் எந்த நாட்டவர்கள்?

உயிரிழந்தவர்களில் 82 பேர் இரான் நாட்டவர்கள், 63 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள், ஒன்பது விமான ஊழியர்கள் உள்பட 11 உக்ரைன் நாட்டவர்கள் என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பத்து சுவீடன் நாட்டவர்கள், நான்கு ஆப்கானியர்கள், மூன்று பிரிட்டானியர்கள் மற்றும் மூன்று ஜெர்மானியர்களும் இறந்தவர்களில் அடக்கம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: