இந்திய பங்குச்சந்தைகள்: 9 மாதங்களில் 20,000 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ் - எப்படி சாத்தியமானது?

    • எழுதியவர், கெளதமன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

கடந்த செப்டம்பர் 2019 காலகட்டத்தில் இந்திய பங்குச் சந்தைக் குறியீடுகள், தடுமாறிக் கொண்டிருந்தன.

மே 2019 காலகட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டதை, பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ஒரு நல்ல செய்தியாகப் பார்த்தார்கள்.

மே மாதத்தில், குறைந்தபட்சமாக 14 மே 2019 அன்று 36,956 புள்ளிகள் வரை இறக்கம் கண்ட சென்செக்ஸ்30 குறியீடு, தேர்தல் முடிவுகளுக்குப் பின் சென்செக்ஸ் குறியீடு 03 ஜூன் 2019 அன்று 40,308 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி50 குறியீடும், 14 மே 2019 அன்று குறைந்தபட்சமாக 11,108 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. தேர்தல் முடிவுகளுக்குப் பின், நிஃப்டி50 குறியீடு 03 ஜூன் 2019 அன்று 12,103 புள்ளிகள் தொட்டு வர்த்தகமானது.

அதன் பின் சந்தைகள் தொடர்ந்து இறக்கம் கண்டன. இதற்கு முக்கிய காரணம், இந்தியாவின் பொருளாதார மந்தநிலை.

இந்திய பொருளாதாரத்தில் நிலவிய மந்தநிலை

2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆட்டோமொபைல் துறை, மிகப் பெரிய விற்பனைச் சரிவுகளைச் சந்தித்து வந்தது. இதே போல பல்வேறு துறைகளின் விற்பனையும் மெல்ல சரியத் தொடங்கின. பொருளாதாரத்தில் நுகர்வு குறைந்து வந்ததையும், வேலையில்லா திண்டாட்டம் இருப்பதையும் அரசு கவனித்தது.

இந்திய பொருளாதாரத்தில் நுகர்வை அதிகரிக்க வேண்டுமானால், மக்கள் கையில் போதிய அளவுக்கு பணம் புழங்க வேண்டும், அதற்கு நல்ல வேலை வாய்ப்புகள் தேவை. வேலை வாய்ப்புகளுக்கு முதலீடுகள் தேவையாக இருந்தது.

ஆனால் நடைமுறையில், வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்து தொழில் தொடங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தன.

தீர்வு: கார்ப்பரேட் வரி குறைப்பு

எனவே அரசு கார்ப்பரேட் வரியை கணிசமாகக் குறைத்தது. இந்த நடவடிக்கைக்கு, பங்குச் சந்தையில் கைமேல் பலன் கிடைத்தது. 20 செப்டம்பர் 2019 அன்று காலையில் நிதியமைச்சரின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, சென்செக்ஸ்30 குறியீடு இரண்டே நாட்களில் 36,093-ல் இருந்து 39,090 புள்ளிகளுக்கு உயர்ந்தது.

நிஃப்டி50 குறியீடு 10,704 புள்ளிகளில் இருந்து, இரண்டே நாட்களில் 11,600 புள்ளிகளைத் தொட்டது.

இந்த ஏற்றம் ஜனவரி 2020 வரை நீடித்தது எனலாம். 20 ஜனவரி 2020 அன்று சென்செக்ஸ்30 குறியீடு அதிகபட்சமாக 42,273 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. நிஃப்டி50 குறியீடு 12,430 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. இது தான் இந்திய பங்குச் சந்தை குறியீடுகளின் அப்போதைய வாழ்நாள் உச்சம்.

கொரோனா வைரஸ் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

2020-ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் இருந்தே சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் செய்தி மெல்ல தலைப்புச் செய்தியாகத் தொடங்கியது. ஜனவரி கடைசி வாரத்தில் இந்திய பங்குச் சந்தை குறியீடுகளும், கொரோனாவை கவனிக்கத் தொடங்கின. குறியீடுகள் மெல்ல சரியத் தொடங்கின.

மார்ச் 2020-ல் உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸை ஒரு பெரும்தொற்று என வகைப்படுத்தியது.

அவ்வளவு தான் அதுநாள்வரை சிறுகச் சிறுக ஏற்றம் கண்டு வந்த இந்திய பங்குச் சந்தைக் குறியீடுகள், தடாலடியாக வீழ்ந்தன.

சென்செக்ஸ் 30 குறியீடு 23 மார்ச் 2020 அன்று ஒரே நாளில் 3,934 புள்ளிகள் சரிந்தது. இதுவரை சென்செக்ஸ்30 குறியீடு, இத்தனை பெரிய சரிவை தன் வாழ்நாளில் கண்டதில்லை. நிஃப்டி 50 குறியீடும், அதே 23 மார்ச் 2020 அன்று 1,135 புள்ளிகள் சரிந்தது. இது நிஃப்டி50 அதுநாள் வரை வரலாறு காணாத பெரிய சரிவு.

24 மார்ச் 2020 அன்று சென்செக்ஸ் 30 குறியீடு குறைந்தபட்சமாக 25,638 புள்ளிகளைத் தொட்டது. நிஃப்டி50 குறியீடு குறைந்தபட்சமாக 7,511 புள்ளிகளைத் தொட்டது. கொரோனா வைரஸ் ஏற்படுத்திய சரிவின் விளிம்பு இது.

இந்திய பங்குச் சந்தைக் குறியீடுகள் மட்டுமின்றி, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், பிரேசில், சீனா என பல நாட்டுப் பங்குச் சந்தைகளும் பெருத்த சரிவைக் கண்டன.

மீட்சி தொடக்கம்: முன்னெடுத்த பார்மா துறை பங்குகள்

இந்திய பங்குச் சந்தைக் குறியீடுகள் அளவுக்கு அதிகமாகச் சரிவைக் கண்டுவிட்டன என அப்போது பங்குச் சந்தை நிபுணர்கள் கூறினார்கள்.

பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மெல்ல, முதலீடு செய்யத் தொடங்கினர். பங்குகளின் விலை அதிகரிக்க அதிகரிக்க, சந்தைக் குறியீடுகளும் மெல்ல அதிகரித்தன.

ஃபார்மா, டெக்னாலஜி, வங்கி மற்றும் நிதி சார் நிறுவனங்கள் போன்ற துறைகளின் பங்குகள் மார்ச் மாத வீழ்ச்சிக்குப் பிறகு மெல்ல ஏற்றம் காணத் தொடங்கின.

2020-ம் ஆண்டில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் சுமாராக 1.40 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை விற்று வெளியேறினார்கள் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள்.

ஜூன் மாதத்தில் மீண்டும் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கினார்கள். ஜூன் மாதத்தில் 26,009 கோடி ரூபாய், ஜூலையில் 3,301 கோடி ரூபாய், ஆகஸ்டில் 49,879 கோடி ரூபாய் முதலீடு செய்தார்கள். இதுவும் பங்குச் சந்தைக் குறியீடுகள் அதிகரிக்க ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

ஏற்றத்துக்கான காரணங்கள் என்ன?

இந்தியாவில் ஏப்ரல், மே காலகட்டத்தில் தான் கொரோனா பொது முடக்க கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்தன. அந்த காலகட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் தவிர மற்ற செலவுகளை மக்களே தவிர்த்தார்கள். எனவே, நிறுவனங்களுக்கு பெரிய அளவில் லாபம் இல்லை. பொதுவாக, இப்படி லாபம் இல்லாமல் இருந்தால், பங்குச் சந்தைக் குறியீடுகள் அதிக ஏற்றம் காணாது.

இருப்பினும் இந்த முறை இந்திய பங்குச் சந்தைக் குறியீடுகள், பெரிய அளவில் ஏற்றம் கண்டு வருகிறது. ஜனவரி 2020 உச்சங்களை எல்லாம் கடந்து, சென்செக்ஸ்30 இன்று 46,560 & நிஃப்டி50 13,650 புள்ளிகளையும் தொட்டு வர்த்தகமாகி வருகின்றன.

கிட்டத்தட்ட மார்ச் மாத வீழ்ச்சியில் இருந்து சென்செக்ஸ்30 குறியீடு சுமாராக 20,000 புள்ளிகளும், நிஃப்டி50 குறியீடு சுமாராக 6,000 புள்ளிகளும் ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வருகின்றன.

இந்த ஏற்றம் சாத்தியமானது எப்படி?

பொதுவாகவே வணிகம் மற்றும் வியாபார நிறுவனங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கி இருப்பது, தொழில் துறை உற்பத்திகள் மார்ச் 2020-ல் கண்ட வீழ்ச்சிக்குப் பிறகு ஓரளவுக்கு அதிகரிக்கத் தொடங்கி இருப்பது, உலக வர்த்தகச் சக்கரம் சுழலத் தொடங்கி இருப்பது போன்ற காரணங்கள், இந்திய பங்குச் சந்தைக் குறியீடுகளின் ஏற்றத்துக்கு முதல் காரணம்.

1. ஆசிய நாட்டின் பங்குச் சந்தைகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாட்டின் பங்குச் சந்தைகள் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த மார்க்கெட் சென்டிமென்டால் இந்திய பங்குச் சந்தைக் குறியீடுகளும் ஏற்றம் கண்டன.

2. சென்செக்ஸ்30 மற்றும் நிஃப்டி50 குறியீடுகளில், அதிக வெயிட்டேஜ் கொண்ட பங்குகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கும் ஒன்று. இந்த பங்கின் விலை பி.எஸ்.இ-யில் மார்ச் 2020-ல் 875 ரூபாய் வரைத் தொட்டது. தற்போது சுமாராக 1,975 ரூபாயில் வர்த்தகமாகி வருகிறது. ஆக 125% விலை ஏற்றம் கண்டு இருக்கிறது. இந்த ஒற்றைப் பங்கின் விலை ஏற்றம், இரண்டு குறியீடுகளும் அதிவேகமாக உயர உதவியது.

3. வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள், மீண்டும் இந்திய பங்குச் சந்தைகளை நோக்கி படை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த அக்டோபரில் 21,826 கோடி ரூபாய், நவம்பரில் 62,782 கோடி ரூபாய், டிசம்பரில் (16.12.2020 வரை) 48,537 கோடி ரூபாய் என அதிகமாக முதலீடு செய்து கொண்டிருக்கிறார்கள். பங்குச் சந்தைகளில் கூடுதலாக முதலீடுகள் வந்தால், தன்னிச்சையாக பங்குகளின் விலை அதிகரித்து, ஒட்டுமொத்த குறியீடும் அதிகரிக்கத் தானே செய்யும். அதான் நடந்து கொண்டிருக்கிறது.

4. அமெரிக்க தேர்தலில் ஜோ பைடன் வெற்றி உறுதியாகி இருப்பது, அமெரிக்கா சீன வர்த்தகப் போர், இரான் அணு ஆயுத ஒப்பந்தப் பிரச்சனை, விசா பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகளுக்கு ஒரு சுமூகமான தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒட்டு மொத்த சந்தையையும் முன்னெடுத்துச் செல்கிறது.

5. இந்திய நிறுவனங்களின் செப்டம்பர் 2020 காலாண்டு முடிவுகள், எதிர்பார்த்ததை விட நன்றாக வந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. மும்பை பங்குச் சந்தை வலைதளத்தில், 776 நிறுவனங்கள் செப்டம்பர் காலாண்டில் நல்ல முடிவுகளையும், 1,127 நிறுவனங்கள் பெரிய மாற்றமில்லாத முடிவுகளை காட்டி இருப்பதாகவும், 948 பங்குகள் மட்டும் மோசமான காலாண்டு முடிவுகளை பதிவு செய்திருப்பதாகவும் குறிப்பிடுகிறது. இது சந்தையின் ஏற்றத்தில் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :