கீதாஞ்சலி ஸ்ரீ: சர்வதேச புக்கர் விருது பெற்ற 'டாம்ப் ஆஃப் சாண்ட்' புத்தகத்தின் கதை என்ன?

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ எழுதிய 'Tomb of Sand' புத்தகத்திற்கு சர்வதேச புக்கர் விருது அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியில் 'ரெத் - சமாதி' என்ற பெயரில் எழுதப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் புத்தகத்தின் கதை என்ன?

சர்வதேச புக்கர் விருது ஒவ்வொரு ஆண்டும் வேறு மொழிகளில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இங்கிலாந்திலோ, அயர்லாந்திலோ வெளியிடப்படும் புத்தகங்களுக்கு வழங்கப்படுகிறது. 2005ஆம் ஆண்டிலிருந்து இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தியில் எழுதப்பட்ட இந்த நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் டெய்சி ராக்வெல்.

இந்த நாவல் எதைப் பற்றிப் பேசுகிறது?

நாவலின் கதை இதுதான்: 80 வயது பெண்மணியின் (மா) கணவர் இறந்துவிடுகிறார். கணவர் இறந்ததிலிருந்து பெரும் அமைதி நிலைக்குச் சென்றுவிடுகிறார் அந்தப் பெண்மணி. கிட்டத்தட்ட சமாதி நிலை. குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும், அதனைக் கலைத்து அவரை சாதாரண நிலைக்குக் கொண்டுவர முயல்கின்றனர். ஆனால், அதில் பலனேதும் கிடைக்கவில்லை. கணவனை இழந்ததால் மிகப் பெரிய மன அழுத்தத்தில் இருக்கிறாரா என்று யோசிக்கிறார்கள். இதற்கிடையில் அவரது மகன் படே, காசோலைகளில் தாயின் கையெழுத்தை வாங்கிவைத்துவிடலாமா என்று யோசிக்கிறார்.

படேவின் மனைவி பஹு. பஹுவைப் பொறுத்தவரை தான் எவ்வளவோ தியாகங்களை இந்தக் குடும்பத்திற்காகச் செய்தும் அதை யாரும் மதிப்பதில்லை என்று கருதுகிறார். இரண்டு பேரக் குழந்தைகள் வேறு இருக்கிறார்கள்.

இதற்கிடையில், அந்தப் பெண்மணிக்கு ரோஸி என்ற ஒரு திருநங்கையுடன் நட்பு ஏற்படுகிறது. மாவின் மகளான பேடி, எந்த கட்டுகளுமற்ற ஒரு சுதந்திரமான வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறாள். தன் தாயை தன்னுடன் வைத்துப் பார்த்துக்கொள்ளவும் தயாராக இருக்கிறாள். ஆனால், தாயிடம் ஏற்படும் மாற்றங்கள், தன்னைப் புதுமையானவளாகவும் தாயைப் பழமையானவளாகவும் கருதிக்கொண்டிருந்த பேடிக்கு அதிர்ச்சியைத் தருகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்குச் செல்ல விரும்புகிறார் மா. மாவின் குடும்பத்தினர் இந்த ஆசையை நிறைவேற்ற விரும்பினாலும், இதெல்லாம் சரியா, பாதுகாப்பானதா என்ற கேள்வியும் அவர்களுக்கு எழுகிறது. பிறகு, விசா ஏதுமின்றி, மகளும் தாயும் எல்லையைக் கடந்து பாகிஸ்தான் செல்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் வந்த வழி அதுதான். அதாவது, தேசப் பிரிவினையின்போது பாகிஸ்தானிலிருந்து வந்த வழி!

696 பக்கங்களைக் கொண்ட இந்த நாவலின் உள்ளடக்கம் பெரும் தீவிரத்தன்மையைக் கொண்டதாகத் தோன்றினாலும், கீதாஞ்சலி ஸ்ரீயின் நடை விறுவிறுப்பூட்டும் வகையிலும் அசலான மொழியுடனும் அமைந்திருக்கிறது. அரசுகளாலும் மதங்களாலும் உருவாக்கப்படும் எல்லைகளை உடைப்பதுதான் இந்த நாவலின் அடிநாதம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: