பிக்பாஸ் சீசன் 5: “கமல் ஹாசனிடம் நடிக்க வாய்ப்பு கேட்ட காரணம் இதுதான்” - இமான் அண்ணாச்சி பேட்டி

பட மூலாதாரம், Immanannachi_official
- எழுதியவர், ச. ஆனந்தபிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
"நடிப்பு ஆசையில் சென்னைக்கு வந்து இறங்கியவனுக்கு கோயம்பேடு சந்தையில் தினசரி கூலிக்கு காய்கறி விற்கும் தொழில் அமைந்தது. முதல் சம்பாத்தியம் 99 ரூபாயில் ஆரம்பித்து 200 ரூபாய் என போய்க்கொண்டிருந்த போது, தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்க வாய்ப்பு வந்தது நானே எதிர்ப்பாராதது. படிப்படியாக அந்த நிகழ்ச்சிகள் தந்த வெளிச்சம்தான் நான் விரும்பிய சினிமாவுக்குள் கூட்டி சென்றது. சின்ன சின்ன கதாப்பாத்திரங்கள் நடித்து வந்தாலும் மக்களை மகிழ்விக்கும் வகையில் முழு நீள படத்தில் நகைச்சுவை கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்பதுதான் விருப்பம். அதற்கான திறவுகோலாக இந்த 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மக்களிடம் என்னை இன்னும் நெருக்கமாக கொண்டு சென்றிருக்கிறது. 'பிக்பாஸ்' வீட்டுக்குள் 106 நாட்களும் இருந்து வெற்றிக்கோப்பையை எடுத்துவிட்டு தான் வரவேண்டும் என்று நினைத்தேன். ஆனால், 70 நாட்களில் வெளியே வந்துவிட்டேன். இதுவும் வெற்றிக்கு நெருக்கமாக சென்றதற்கான அர்த்தம்தானே" என சிரிக்கிறார் இமான்.
தொலைக்காட்சியில் குழந்தைகள் நிகழ்ச்சியில் இமானின் கலகல பேச்சுக்கும் 'ஹே, மிஸ் பண்ணிடாதீங்க! அப்றம் வருத்தப்படுவீங்க!!' என்ற சொல்லாடலுக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் உண்டு. 'கோலிசோடா', 'பேய்மாமா' உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்தவர் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றிருக்கிறார். 70 நாட்கள் 'பிக்பாஸ்' வீட்டிற்குள் இருந்தவர் தற்போது அங்கிருந்து குறைந்த மக்கள் வாக்குகள் அடிப்படையில் வெளியேறி இருக்கிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த அனுபவம், சினிமாவில் அடுத்த கட்டம், குடும்பம் என பலவற்றை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார்.
"சினிமாவில் நடிக்க வேண்டும் என்று 18 வருடங்கள் போராடியவனுக்கு முதலில் கிடைத்தது என்னவோ தொலைக்காட்சி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிதான். மாதம் 6,000 ரூபாய் கோயம்பேட்டில் காய்கறி விற்று சம்பாதித்த தொகை பெரும்பாலும் குடும்பத்திற்கும் குழந்தைக்கு மருந்து, துணி வாங்குவதற்குமே சரியாக இருந்தது. இன்னொரு பக்கம் சினிமாவிலும் விடாமல் நம்பிக்கையாக வாய்ப்பு தேடி கொண்டிருந்தபோதுதான் நல்ல சம்பளத்தோடு தொலைக்காட்சி வாய்ப்பு வந்தது. ஆனால், 'இது நம்ம ஏரியாவே கிடையாதே!' என அந்த வாய்ப்பை ஏற்று கொள்ள தயங்கினேன். ஆனால், அப்போது நான் இருந்த சூழல் என் தயக்கத்தையும் தாண்டி வாய்ப்பை ஏற்று கொள்ள வைத்தது. அது சிறந்த முடிவு என்பதை இப்போது உணர்கிறேன். ஒரு விஷயத்தில் இறங்க வேண்டும் என முடிவு செய்தால் தடைகள் குறித்து வருத்த படவே கூடாது" என்றவரிடம் பெரும்பாலும் குழந்தைகள் நிகழ்ச்சிகளுக்கான வாய்ப்பு மட்டுமே வந்து கொண்டிருக்கிறதே என எண்ணியது உண்டா என்று கேட்டேன்.
"குழந்தைகளை மகிழ்விக்கும் அளவுக்கு கடவுள் என்னை அழகாக படைத்திருக்கிறான் என்றுதான் எண்ணி மகிழ்ந்திருக்கிறேன். அவர்களுடைய கண்களுக்கு நான் விருப்பமான ஒருவனாக இருந்திருக்கிறேன். கருப்பு நிறம் குறித்த பார்வையை மாற்றியிருப்பதில் எனக்கும் சிறிது பங்குண்டு என்பதில் எனக்கு பெருமைதான். இந்த நிகழ்ச்சி குழந்தைகளை தாண்டி, வயதான பெரியவர்களிடமும் என்னை கொண்டு சேர்த்தது. அப்படி ஒரு நாள் வயதான பாட்டி ஒருவருக்கு என்னுடைய கன்னத்தை கிள்ள வேண்டும் என பல வருடம் ஆசை இருந்திருக்கிறது. அந்த பெரியம்மா என்ன வாழ்த்தி ஆசிர்வதித்தார்.
இன்னொருவர் என்னுடைய தீவிர விசிறி. உடல்நலன் சரியில்லாமல் இறந்து போகக்கூடிய நிலையில் இருந்த போது அவருடைய மகன் அப்பாவை பார்க்க வேண்டும் என என்னை நேரில் அழைத்து சென்றார். நான் பார்த்துவிட்டு வந்த அடுத்த வாரம் அவர் தவறிவிட்டார். இது என் வாழ்வில் மறக்க முடியாத நெகிழ்ச்சியான தருணம்" என்று அமைதியானவர் சிறிது நேரம் கழித்து அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த அனுபவம் குறித்து பகிர்கிறார்.
"'அண்ணாச்சியை எதுக்காக வெளிய அனுப்பனீங்க?' என்றுதான் நான் சந்தித்த வரை வெளியில் மக்கள் ஏக்கம் கலந்த அன்புடன் கேட்டு கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு உண்மையாக விளையாடியுள்ளேன் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது" என்றவர் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்குள் செல்ல வாய்ப்பு வந்த கதையை தெரிவித்தார். "இந்த சீசன் மட்டுமல்ல, கடந்த இரண்டு மூன்று சீசன்களாவே என்னிடம் கேட்டு கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் தொடந்து படப்பிடிப்பு, மற்ற வேலைகள் என பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்ததால் தேதி கொடுக்க முடியவில்லை. சரி, இந்த சீசனிலாவது உள்ளே போக முடியுமா என்றால் கையில் வரிசையாக ஏழெட்டு படங்கள் இருந்தது. அதில் சில படங்கள் முடித்து கொடுத்தேன். சில படங்கள் என் மீதுள்ள அன்புக்காக காத்திருக்கிறோம் என சொன்னார்கள்."
'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்குள் போகும்போது பொதுவெளியில் இதுநாள் வரை ஒருவர் மீது இருந்த பிம்பம் நல்ல விதமாகவோ அல்லது எதிரான திசையிலோ மாறுவதற்கு வாய்ப்பு உண்டு. அது குறித்த தயக்கம் ஏதும் இருந்ததா?
"நிச்சயமாக இல்லை! வீட்டிலும், வெளியிலும் நான் இயல்பாக எப்படி எல்லாரிடமும் பழகுவேனா அதுபோலதான் நான் பிக்பாஸ் வீட்டிலும் இருந்திருக்கிறேன். உள்ளே போகும்போதே இதற்கு முந்தைய சீசனில் பலருடைய உண்மையான முகம் வெளியே தெரிந்து அவர்கள் மீதான எண்ணம் மாறியிருக்கிறது என்பதால் என்னையும் போக வேண்டாம் என்றுதான் சொன்னார்கள். என்னுடைய பெயர் பாதிக்கும் அளவிற்கு எல்லாம் நான் நடக்க மாட்டேன். அப்படி மாற வேண்டிய சூழல் வந்தால் கூட வேறு மாதிரியான முடிவுதான் எடுப்பேன். அதாவது, உள்ளே நான் சொல்லும் விஷயங்களை அவர்கள் கேட்டு கொண்டால் சரி, முடியாது என்று கருத்து வேறுபாடு வந்தால் என்னுடைய கருத்தை மாற்றி கொள்வேன் இந்த எண்ணத்தில் சென்றதால்தான் பெரிய அளவில் என் மீதான பிம்பம் வெளியில் மாறவில்லை" என்பவர் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி குறித்தான தன்னுடைய அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறார்.
"பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டதுதான் வாழ்க்கை. இந்த பயணத்தில் இதுநாள் வரை நாம் என்ன செய்திருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ளும் ஒரு இடமாகதான் இந்த வீட்டை நான் பார்த்தேன். இதுவும் ஒரு புதுவிதமான வாழ்க்கை அனுபவம். நான் அங்கிருந்து வெளியே வரும்போது போட்டியாளர்கள் பலரும் சொல்லிய ஒரு விஷயம் இவ்வளவு நாட்கள் நான் இருந்தது பெரிய விஷயம் என்று. ஏனெனில், நாட்கள் செல்ல செல்ல உடல்ரீதியிலான போட்டிகள் அங்கு கடுமையாக இருக்கும். வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்து இருக்கிறேன். அவற்றுடன் ஒப்பிடும்போது இந்த சவால்கள் எல்லாம் ஒன்றுமே கிடையாது. இந்த டாஸ்க்கில் நான் திணறிவிட்டேன் என ஒருவரும் சொல்ல முடியாத படிதான் என்னுடைய செயல்பாடுகள் அங்கு இருந்திருக்கும். இப்போது நான் சொல்வதை அங்கு செய்து காண்பிக்க முடியவில்லையே, அதற்குள் வெளியே வந்துவிட்டோமே என்ற வருத்தம்தான்" என்கிறார்.
உள்ளே உங்களுக்கும் இசைவாணிக்கும் இடையில் பனிப்போர் நடந்து கொண்டே இருந்ததே? குறிப்பாக அவர் முகத்திற்கு முன்பாக காலை ஆட்டி பேசியது வெளியில் சர்ச்சையானது குறித்து கேள்விப்பட்டீர்களா?
"பனிப்போர் என்பது எல்லாம் எதுவும் இல்லை. இதே கேள்வியை இசைவாணியிடம் கேட்டாலும் நானும் அவரும் எந்த அளவுக்கு அன்பாக பழகினோம் என்பதை சொல்வார். முகத்திற்கு முன்பாக நான் காலை ஆட்டிய அந்த காட்சி வெளியில் சர்ச்சை ஆனது கேள்விப்பட்டு எனக்கும் வருத்தம்தான். இது குறித்து விளக்குகிறேன். அந்த வாரத்தில் கண்ணாடி டாஸ்க்கில் இமான் - இசைவாணி என்று கொடுத்திருந்தார்கள். முதல் நாள் என்னை போல இசையும் அடுத்த நாள் அவர்களை போல நானும் மாறும் என்றுதான் நினைத்திருந்தோம். முதல்நாள், டாஸ்க் பஸ்ஸர் அடிப்பதற்கு முன்பு பேசிக்கொண்டிருந்த போது அவர் சாப்பிடாமல் இருந்தார். சாப்பிட்டுவிட்டு வர சொன்னேன். அதற்குள் பஸ்ஸர் அடித்துவிட்டது. அப்போது, பிக்பாஸ் அவரிடம் டாஸ்க் செய்யவில்லை என சொல்லி அந்த பேட்சை என்னிடம் கொடுக்க சொன்னார். இதில் இசைவாணிக்கு வருத்தம். பிக்பாஸ் இவ்வளவு கறாராக இருப்பார் என்பதை நான் எதிர்ப்பார்க்கவே இல்லை.

பட மூலாதாரம், INSTAGRAM/ ISAIVANI
அதற்கு பிறகு, இசைவாணி என்னிடம் நகைச்சுவையாக ஒரு சவால் விட்டார். 'இப்படி என்னை சாப்பிட அனுப்பிவிட்டு என்னுடைய பேட்சை வாங்கிட்டீங்கள்ள? இன்னைக்கு உங்களுடைய பிம்பமாக இருந்து உங்களை வெறுப்பேத்தறேன்' என சொன்னார். 'ஏ பாப்பா! அது யதார்த்தமா நடந்தது. நானும் பதிலுக்கு உன்னை வெறுப்பேத்தறேன்!' என ஜாலியாக பதில் சவால் விட்டேன். பின்பு பிரியங்கா என்னிடம் விளையாட்டாக பேட்ச் கேட்டு வாங்கி அந்த பேட்ச் கலரை வைத்து பாடி கொண்டிருந்தார். அதற்குதான் நான் பிரியங்காவிடம் அப்படி செய்து கொண்டிருந்த போது இந்த பக்கம் இசைவாணியிடமும் வந்தேன். அது திட்டமிட்டே கஷ்டப்படுத்த வேண்டும் என்பதில்லை. யதார்த்தமாக செய்தது. அது இசைவாணிக்கு பிடிக்காமல் தப்பு என சொன்னார். பிறகு நான் மன்னிப்பும் கேட்டுவிட்டேன். ஆனால், அது வெளியில் பார்வையாளர்களுக்கு அது வேறு மாதிரியாக புரிந்துவிட்டது".
உங்களை ராஜூ பிக்பாஸ் வீட்டிற்குள் கடைசி நாள் வரை கூட்டி செல்வேன் என்றார். அந்த நட்பு உங்களுக்கு இடையில் எப்படி உருவானது?
"பிக்பாஸ் வீட்டிற்குள்தான் நானும் ராஜூவும் அறிமுகமானோம். நகைச்சுவை உணர்வுதான் எங்களுக்குள் அண்ணன்-தம்பி உறவு உருவாக காரணமாக இருந்த ஆரம்பப்புள்ளி. அவருடைய திறமைகளை வெளியில் காட்ட வேண்டும் என்ற அன்பும் ஆசையும் இருந்தது. அதே விஷயத்தைதான் அவனும் என்னிடம் காட்ட விரும்பினான். நான் வெளியே வரும்போது 'சரி பார்த்துக்கலாம்' என்ற மனநிலையில்தான் இருந்தேன். என்னை போல அவ்வளவு வேகமாக வெளியே வந்ததும் யாரும் கிடையாது, ராஜுவை பார்த்து கண்கலங்கி நின்றதும் யாரும் இல்லை" என்றவர் வெளியே மேடையில் கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கேட்டது குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

பட மூலாதாரம், Getty Images
"விஜய், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி என பெரும்பாலும் எல்லா கதாநாயகர்களது படத்திலும் நடித்திருக்கிறேன். அஜித் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் அது அமையாமல் போய்விட்டது. ஆனால் ரஜினி, கமல் இவர்களுடைய படத்தில்தான் இன்னும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த ஆசை நடிகர்கள் எல்லாருக்கும் இருக்கும். அதற்கான தருணமாக அந்த மேடையை பயன்படுத்தி கொண்டேன். அவருடன் இணைந்து நகைச்சுவை கதாப்பாத்திரம் நடிக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அவரும் மகிழ்ச்சியாக ஒப்பு கொண்டு, என்னை வாழ்த்தியது மகிழ்ச்சி". என்றார்.
பிற செய்திகள்:
- முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - முழு விவரம்
- கிறிஸ்துமஸ் பயணங்களால் ஒமிக்ரான் பரவல் அதிகரிக்கும் - எச்சரிக்கும் அமெரிக்க நிபுணர்
- பகத் சிங்: ஜேம்ஸ் ஸ்காட்டுக்கு பதிலாக ஜான் சாண்டர்ஸ் கொல்லப்பட்டது எப்படி?
- ரூ. 80 லட்சத்துக்கு விலைபோன எருமை - செல்ஃபிக்கு அலைமோதிய கூட்டம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்
























