You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எனிமி: விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்துள்ள திரைப்படம்; எப்படி இருக்கிறது?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
நடிகர்கள்: விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், தம்பி ராமைய்யா, பிரகாஷ் ராஜ், கருணாகரன், மாரிமுத்து; இசை: தமன் (பாடல்கள்), சாம் சி. எஸ். (பின்னணி); ஒளிப்பதிவு: ஆர்.டி. ராஜசேகர்; இயக்கம்: ஆனந்த் சங்கர்.
அரிமா நம்பி, இருமுகன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஆனந்த் சங்கரின் அடுத்த படம் இது.
ராஜீவும் சோழனும் சிறுவயது முதலே நண்பர்கள். ராஜீவின் தந்தை (பிரகாஷ் ராஜ்) ஒரு ஒய்வுபெற்ற சிபிஐ அதிகாரி. அவர் ராஜீவிற்கும் சோழனுக்கும் சிறு வயது முதலே காவல்துறையின் நுணுக்கங்கள் குறித்து பயிற்சியளிக்கிறார். சில நாட்கள் கழித்து ராஜீவின் தந்தை யாராலோ கொல்லப்பட்டுவிட, ராஜீவும் சோழனும் பிரிகிறார்கள். வளர்ந்த பிறகு சிங்கப்பூரில் கடை வைத்திருக்கும் சோழன் (விஷால்), தனது நுண்ணறிவால் பலருக்கும் உதவுகிறார். ஒரு கட்டத்தில் தனது சிறுவயது நண்பனை (ஆர்யா) எதிர்பாராத தருணத்தில் சந்திக்கிறான் சோழன். ஆனால், அந்த நண்பன் இப்போது எதிரி. என்ன நடக்கிறது என்பது மீதிக் கதை.
ஒரு காவல்துறை அதிகாரி இரு சிறுவர்களை காவல்துறையின் நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்து வளர்க்கும் படத்தின் ஆரம்பகட்ட காட்சிகள் சுவாரஸ்யமாகவே இருக்கின்றன. சில புதிர்களை சிறுவர்கள் புத்திசாலித்தனமாக கண்டுபிடிப்பதும் நன்றாகவே இருக்கிறது. ஆனால், படம் சிங்கப்பூருக்கு நகர்ந்த பிறகு, முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக மாறிவிடுகிறது.
சிங்கப்பூரில் பணியாற்றும் சிலரது பாஸ்போர்ட்டை ஏதோ ஒரு சீன நிறுவனம் வைத்துக்கொண்டு தர மறுக்க, ரொம்ப சாதாரணமாக ராத்திரியில் கண்ணாடியை உடைத்து அந்த பாஸ்போர்ட்களை எடுத்துவந்து தந்துவிடுகிறார். படம் துவக்கத்தில் ஏற்படுத்தும் எதிர்பார்ப்புகளை இந்தக் காட்சி, நீக்கிவிடுகிறது.
இதனால் இதற்கடுத்து நடக்கும் வெடிவிபத்தின் பின்னணியை கதாநாயகன் கண்டுபிடிப்பது, அதன் பின்னணியைத் தேடுவது போன்றவையெல்லாம் எந்த ஆச்சரியத்தையும் ஏற்படுத்தாமல் கடந்துபோகின்றன. இதற்குப் பிறகு, விஷாலுக்கும் ஆர்யாவுக்கும் இடையிலான மோதல் காட்சிகளிலோ வேறு காட்சிகளிலோ பெரிய அளவு சுவாரஸ்யம் ஏதும் இல்லை.
படத்தின் துவக்கத்தில் சிறுவர்கள் இருவர் செஸ் விளையாடுகிறார்கள். ஒரு சிறுவன் அடுத்த நகர்வை யோசிப்பதற்குள், மற்றொரு சிறுவன், ஒரு கொலை செய்து, அந்தக் கொலையை மறைக்க பணத்தை ஒளித்துவைத்து, புதிய தடயங்களை உருவாக்கி, ஒரு வாகனத்தை நகர்த்தி என ஏதேதோ செய்துவிடுகிறான். அடுத்த அறையில் இருக்கும் மற்றொரு சிறுவனுக்கு அதுவரை எதுவுமே கேட்கவில்லை.
மற்றொரு காட்சியில், தன் கடையில் விற்பனைக்கு உள்ள இருளில் ஒளிரும் பெயிண்டை தரையில் ஊற்றிவிடச் சொல்கிறார் கதாநாயகன். அடியாட்கள் வந்துவிட்டுப் போனதும் அந்தப் பகுதியையே இருட்டாகி, இருளில் ஒளிரும் பெயிண்ட் மீது ஏற்றிச் சென்ற வாகனத்தின் டயர் தடையங்களை வைத்து, அவர்கள் எந்தப் பக்கம் போனார்கள் எனக் கண்டுபிடிக்கிறார் நாயகன். எதற்கு இப்படி சுத்தி வளைக்க வேண்டும்? சாதாரண பெயிண்டை ஊற்றிவிட்டாலே, கண்டு பிடித்திருக்கலாமே? அதை விட்டுவிட்டு, இருளில் ஒளிரும் பெயிண்டை ஊற்றி, பிறகு மின்சாரத்தை நிறுத்தி, நகரை இருட்டாக்கி... எதுக்கு இதெல்லாம்?
இந்தப் படத்தில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தைக் காட்டுகிறார்கள். இந்த நிறுவனத்தின் போர்ட் மீட்டிங், கமல் நடித்த காக்கிச் சட்டைப் படத்தில் சத்யராஜ் தலைமையில் கொள்ளைக் கும்பலின் கூட்டம் ஒன்று நடக்குமே.. அது போலவே இருக்கிறது. எல்லா மீட்டிங்கிலும் யாரையாவது கொலைசெய்ய வாக்கெடுப்பு நடத்துகிறார்கள். இப்படி ஒரு நிறுவனமா?
விஷால் பலவற்றைக் கண்டுபிடிக்கிறார் என்பது ஓகேதான். அதற்காக சிங்கப்பூருக்கு வெளிநாட்டு அமைச்சர் வந்தால் அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையுமா மளிகை கடை வைத்திருக்கும் விஷாலோடு விவாதிப்பார்கள்? அதேபோல, ஆர்யாவின் பாத்திரம் டிராஃபிக் லைட் முதல் எல்லாவற்றையும் ஹேக் செய்வதெல்லாம் வேறு லெவல்.
படத்தில் விஷால் துருதுருவென இருக்கிறார். ஆர்யாவுக்கு நெகடிவ் பாத்திரம் என்பதால் எல்லோரையும் குறுகுறுவெனப் பார்க்கிறார். இந்தப் படத்தில் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ் என இரண்டு பிரதான பெண் பாத்திரங்கள் இருக்கிறார்கள். ஆளுக்கு மூன்று காட்சிகள்.
பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, ஜார்ஜ் மரியான் ஆகியோர் வழக்கம்போலவே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்தில் கருணாகரன் இருந்தாலும் அவர் நகைச்சுவைக்கு முயற்சிக்கவில்லை.
இந்தப் படத்தில் எதற்கு இத்தனை பாடல்களெனத் தெரியவில்லை. எந்தப் பாடலும் மனதில் பதியவில்லை. பின்னணி இசை ஓகே.
எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்வகையில் படத்தை ஆரம்பிக்கும் இயக்குனர், ரொம்வும் சுமாராக படத்தை முடித்திருக்கிறார்.
பிற செய்திகள்:
- மீண்டும் கொரோனா வைரசின் மையமாகும் ஐரோப்பா: எச்சரிக்கும் WHO, நான்காவது அலையா இது?
- வாயில் ரத்தம் வடிய விழுந்து இறந்த 10 நெருப்புக் கோழிகள்: என்ன நடக்கிறது வண்டலூரில்?
- இலங்கை கபடி அணிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஸ்கரன் பயிற்சியாளராக நியமனம்
- 'முப்பாட்டன் காலத்துலகூட இவ்வளவு கிடைக்கல' - ஸ்டாலின் உதவியால் நெகிழும் நரிக்குறவர் பெண் அஸ்வினி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்