You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடுவன்: சினிமா விமர்சனம்
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
நடிகர்கள்: பரத், அபர்ணா வினோத், கோகுல் ஆனந்த், அருவி பாலா, ஜார்ஜ் மரியான்; இசை: தரண்குமார்; இயக்கம்: ஷாரங். OTT: Sony Liv.
சில படங்கள் சாதாரணமான கதையைக் கொண்டிருந்தாலும் எடுக்கப்பட்ட விதத்தால் பார்க்கவைத்துவிடும். ஆனால், கதை சாதாரணமாக இருக்கிறதே என்பதற்காக, தத்துவப் பின்னணி, மர்ம இசையெல்லாம் சேர்த்துக் கொடுப்போம் என ஏற்கனவே சுமாராக உள்ள திரைக்கதையை மேலும் சுமாராக்கிவிடுவார்கள் சில இயக்குனர்கள். நடுவனுக்கு அதுதான் நடந்திருக்கிறது.
கொடைக்கானலில் வசிக்கும் கார்த்தி (பரத்) தன் நண்பனுடன் சேர்ந்து ஒரு தேயிலைத் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். ஆனால், நண்பனோ அந்தத் தொழிற்சாலையின் நிர்வாகத்தில் ஈடுபாடு காட்டாமல் எந்நேரமும் குடித்துக்கொண்டிருக்கிறார். அப்போது கார்த்தி, புதிதாக ஒரு இளைஞனை தனது தொழிற்சாலையில் வேலைக்கு அமர்த்துகிறார். அந்த இளைஞன், கார்த்தியின் குடும்ப வாழ்க்கையில் உள்ள ஒரு ரகசியத்தைக் கண்டுபிடிக்கிறான். இதையடுத்து, ஏற்படும் பிரச்னைகள், மோதல்களே மீதிப் படம்.
இரு நண்பர்கள், திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு, ஒரு சிறிய திருட்டுக் கும்பல், ஒரு கொலை என ஒரு எளிமையான த்ரில்லர் கதை. அப்படியே எளிமையாக எடுத்திருந்தால் நன்றாகவும் வந்திருக்கக்கூடும். ஆனால், படத்தின் துவக்கத்தில் முகமூடி, மனிதனின் மறுபக்கம் என ஏதேதோ பேசப்படுவதால், 'பயங்கர சைக்கோ த்ரில்லர்' போலிருக்கிறது என நினைக்க வைக்கிறார் இயக்குனர். ஆனால், அடுத்த பத்து நிமிடத்திலேயே ஒரு தொலைக்காட்சித் தொடருக்கான காட்சியமைப்புகளோடு மிக மெதுவாக நகர ஆரம்பிக்கிறது படம்.
இந்தப் படத்தை ஐந்து - ஆறாகப் பிரித்து பல்வேறு துணைத் தலைப்புகளோடு தொகுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு தலைப்பையும் பார்க்கும்போது ஏதோ பெரிய திருப்பம் இருக்கிறது என நினைக்க வைக்கிறார்கள். ஆனால், ஒன்றும் நடப்பதில்லை.
ஒரு பரபரப்பான கொலையைச் செய்து மாட்டிக்கொண்டவர்களிடம் "காசு கொடு விட்டுவிடுகிறேன்" என பேரம் பேசுகிறார் ஒரு இன்ஸ்பெக்டர். அவர்கள் அந்தக் காசைக் கொடுக்க திருட்டில்தான் இறங்குவார்கள், அது ஒரு பெரிய வழக்காக மாறும் என தெரியாதா?
பரத் நிவாஸ் என்ற பெயரோடு இந்தப் படத்தில் நடித்திருக்கும் பரத் சில காட்சிகளில் திக்கித் திக்கிப் பேசுகிறார். எதற்கு எனத் தெரியவில்லை. கதாநாயகி, வில்லன் பாத்திரங்களில் நடித்திருக்கும் அபர்ணாவுக்கும் கோகுலுக்கும் நடிப்பதற்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. ஆனால், சின்னச் சின்ன பாத்திரங்களில் வரும் ஜார்ஜ் மரியானும் அருவி பாலாவும் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
படத்தின் துவக்கத்தில் வரும் பாடல், படத்தின் வேகத்தைக் குறைக்கிறது என்றாலும் நன்றாக இருக்கிறது. ஒளிப்பதிவும் ஓகே.
இந்தக் கதை இப்படி தடுமாற்றத்துடன் துவங்கி, மெதுவாக நகர்ந்து, எதிர்பார்த்ததைப் போலத்தான் முடியப்போகிறது என்றால், அதை சாதாரணமாகவே செய்திருக்கலாமே; எதற்கு யு டர்ன் அடித்து, டேபிளை நொறுக்கி...?
பிற செய்திகள்:
- 'இல்லாத நகைக்குக் கடன்; ஒரே ஆதாருக்கு 300 கடன்கள்'- அதிமுகவுக்கு சிக்கலா?
- பணக்கார நாடுகளிடம் கோவிட் தடுப்பூசி குவியல்: 241 மில்லியன் தடுப்பூசிகள் வீணாகுமா?
- தமிழர் வரலாறு: ‘மன்னர் மனைவியின் சாபம் பெற்ற‘ பகுதியில் நடக்கவுள்ள தொல்லியல் ஆய்வு
- சீன செல்பேசிகளை வீசியெறியுங்கள்: நுகர்வோரை எச்சரிக்கும் லித்துவேனியா அரசு
- 'போரில் காணாமல் ஆக்கப்பட்டோர் கொல்லப்பட்டார்கள் என இலங்கை அரசு ஏற்றுக்கொள்கிறதா?'
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்