சீமான்: 'தம்பி விஜய் இந்த அவதூறிலிருந்து வெளிவர அவருக்கு துணையாக நிற்பேன்'

பட மூலாதாரம், VIJAY
நடிகர் விஜய் 9 ஆண்டுகளுக்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரியும் அபராதமும் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, அவர் வரி ஏய்ப்பு செய்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் திரைப்பட இயக்குநருமான சீமான்.
நடிகர் விஜய்க்கு பெருகும் ஆதரவு
2012ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு நுழைவு வரி கட்ட விலக்கு வேண்டும் என நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். ஏற்கெனவே இறக்குமதி வரி செலுத்திவிட்ட நிலையில், காருக்கான நுழைவு வரி கட்டுவதில் இருந்து விலக்கு வேண்டும் என கேட்டிருந்தார்.
கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு பிறகு இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், "நடிகர்கள் ரீல் ஹீரோவாக இருக்க வேண்டாம்; ரியல் ஹீரோவாக இருங்கள்" என கூறி "வரி என்பது நாட்டு குடிமக்கள் ஒவ்வொருவருடைய கடமை, வரி ஏய்ப்பு செய்ய நினைப்பது தேசதுரோகம்," எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த தீர்ப்பு வெளியானதும், சமூக வலைதளங்களில் நடிகர் விஜய்யை தாக்கியும் அவருக்கு ஆதரவு அளித்தும் நிறைய கருத்துகள் பார்க்க முடிந்தது. அதில் நடிகர் விஜய் காருக்கான அனைத்து வரிகளும் கட்டிவிட்டார் எனவும் பொதுவாக ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் வாங்குபவர்களுக்கான நுழைவு வரி அதிகமாக இருக்கும் என்பதால் நீதிமன்றத்தில் இதுபோன்று வழக்கு தொடுப்பது வழக்கம் எனவும் நிறைய பதிவுகள் சமூக வலைதளங்களில் உலவின.
இந்த நிலையில், நடிகர் விஜய் நுழைவு வரி விலக்கு உண்டா என்றுதான் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தாரே தவிர அவர் வரி கட்ட மாட்டேன் என்று சொல்லவில்லை. அப்படி இருக்கும் போது, வரி விலக்கு உண்டு இல்லை என்பதை மட்டும் குறிப்பிடாமல் விஜய்யின் நடிப்பு தொழிலை குறிப்பிட்டு ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ என நீதிமன்றம் சொல்ல வேண்டிய அவசியம் என்ன எனவும் நிறைய பேர் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.
சீமான் தந்த ஆதரவு
இந்த நிலையில்தான் இயக்குநரும் 'நாம் தமிழர் கட்சி'யின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது. துணிந்து நில் தம்பி இது அவதூறுதானே தவிர குற்றம் கிடையாது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
உன் படத்தில் வரும் 'நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு' பாடல் வரிகள் போல மன உறுதியோடு முன்னேறி வா தம்பி எனக்குறிப்பிட்டு நான்கு பக்கள் கொண்ட கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, மகிழுந்திற்கு நுழைவு வரி விலக்கு கேட்டு வழக்கு தொடுத்ததற்காக தம்பி விஜய்யை வசைபாடுவதும், பழிவாங்கும் நோக்கோடு அவதூறு பரப்புவதும் ஏற்று கொள்ளக்கூடியதல்ல. மேலும் நீதிமன்ற தீர்ப்பு வரிவிலக்கு தீர்ப்புதானே தவிர வரி ஏய்ப்பு செய்து விட்டார் என்பதல்ல. அவர் வரி ஏய்ப்பு செய்துவிட்டதை போல போலியான கருத்துருவாக்கும் வலதுசாரிக்கும்பல் அவரை குறிவைத்து தாக்க முற்படுவது கண்டனத்துக்குரியது என குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் வன்மத்தின் வெளிப்பாடு

பட மூலாதாரம், VIJAY
கடந்த வருடம் 'மாஸ்டர்' படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடந்ததை குறிப்பிடும் அவர், இது அவரை அச்சுறுத்தும் உள்நோக்கத்தோடு நடத்தப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் திரைப்படங்களில் பாஜகவின் ஆட்சி முறையை சாடியதற்காகவே அவருக்கெதிராக பொய்யுரைகள் பரப்புவது அரசியல் வன்மத்தின் வெளிப்பாடு எனவும் நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார் சீமான்.
தனக்கான நீதியைப் பெறுவது என்பது அரசியலமைப்பு ஒவ்வொரு தனிமனிதருக்கும் வழங்கிய உரிமை. அதைத்தான் தம்பி விஜய்யும் செய்திருக்கிறார். தற்போது நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை அவர் ஏற்கலாம் அல்லது மேல்முறையீடு செய்யலாம். கடந்த ஆண்டுகளில் மட்டைப்பந்து வீரர்களுக்கு இவ்வாறு வரிச்சலுகை அளிக்கப்படிருக்கிறது என, கிரிக்கெட் வீரர் சச்சின் தனது ஃபெராரி காருக்கு வரிவிலக்கு கேட்டு பெற்றதை குறிப்பிட்டுள்ளார் சீமான்.
மக்களை சுரண்டுவதற்கான கருவி வரி

பட மூலாதாரம், ACTOR VIJAY
அரசாங்கத்தை ஏமாற்ற நினைக்கும் எவரும் நீதிமன்றம் செல்ல மாட்டார்கள் என அந்த கடிதத்தில் கூறியுள்ள சீமான், இந்த நாட்டில் 'வரி' மக்களை சுரண்டுவதற்கான அரசின் கருவி எனவும் சாடியுள்ளார். மேலும் நாட்டில் வாழும் ஒவ்வொரு தனிமனிதனும் எதிர்கொள்ளும் பிரச்சினையாக வரி விலக்கு முறைகள் இருக்கிறது. அதனால், அது யாவற்றையும் மக்களை சுரண்டாத வகையில் மாற்றி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாமக்கல்லை சேர்ந்த சிறுமி மித்ராவின் மருத்துவ உதவிகளுக்கு தேவையான பணத்துக்கு கட்ட வேண்டிய வரியை கூட கேட்டு விலக்கு பெற வேண்டிய கொடுஞ்சூழலில் உள்ளோம் என கூறியுள்ள சீமான், மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் சுருட்டிய லலித் மோடியும், விஜய் மல்லையாவும் நாட்டை விட்டு தப்பும்போது தப்பிக்க விட்ட மோதி அரசை ஏன் விமர்சிக்கவில்லை? அதேபோல, அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகளுக்கு வழங்கப்படும் சலுகை பற்றியும் எவரும் கேட்பதில்லை. அப்படி இருக்கும் போது விஜயின் வரிவிலக்கு சலுகை வழக்குக்கு பொங்குவது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இப்படி வரி போன்ற அரசின் கொள்கை முடிவுகள் மக்களுக்கு எதிராக இருக்கும் போது குடிமகனுக்கு நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு என்ன வழி இருக்க முடியும்? அதனால் தம்பி விஜய் நீதிமன்றத்தை நாடியதில் தவறில்லை. அவர் மத்தியில் ஆளும் பாஜக அரசை கடந்த காலங்களில் திரைப்படங்களில் சாடியதற்காக தற்போதைய சூழலை பயன்படுத்தி அவரை பழிவாங்க துடிப்பது மலிவான அரசியல். அவருக்கு நிச்சயம் நான் துணை நிற்பேன். 'நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு' என அவரது படத்தில் வரும் பாடல் வரிகள் போல அவர் முன்னேறி வர வேண்டும் என தனது விருப்பத்தையும் தெரிவித்துள்ளார் சீமான்.
பிற செய்திகள்:
- கைடெக்ஸ் விவகாரத்தில் என்ன நடந்தது?: தங்கம் தென்னரசு பிரத்யேகப் பேட்டி
- காமராஜ் பிறந்தநாள்: அதிகம் அறியப்படாத 'கிங் மேக்கரின்' கதை
- போதை ஊசிகள் வியாபாரம்: கோவை இளைஞர்கள் இலக்காவது எப்படி?
- 5 மணி நேரத்துக்கு ஒரு என்கவுன்டர்; லவ் ஜிகாத் கைதுகள் - உ.பி அரசை விமர்சித்து சிசிஜி திறந்த மடல்
- அமுல் நிறுவனத்தில் 1 லட்சம் முஸ்லிம்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்களா?
- ராகுல், பிரியங்காவுடன் சந்திப்பு: பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் இணைகிறாரா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்




















