You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாஸ்டர், ஈஸ்வரன் படங்கள் பொங்கலன்று திரைக்கு வருமா? திரையரங்க 100% இருக்கை அனுமதி சர்ச்சை
- எழுதியவர், வினோத் குமார்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
தமிழ்நாட்டில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை நிரப்ப மாநில அரசு வழங்கிய அனுமதி சர்ச்சையாகி வருவதையடுத்து, ஒருவேளை பழையபடி 50 சதவீத இருக்கைகளை நிரப்ப கட்டுப்பாடு விதிக்கப்பட்டால் வரும் பொங்கல் பண்டிகையின்போது திரையரங்குகளில் திரையிட உத்தேசிக்கப்பட்டிருந்த மாஸ்டர், ஈஸ்வரன் போன்ற படங்கள் குறித்த தேதியில் வெளியாவது தள்ளிப்போக வாய்ப்புள்ளது.
கொரோனா பொதுமுடக்கத்தைத் தொடர்ந்து மத்திய அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் அடங்கிய வழிகாட்டுதலின்படி திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க தமிழ்நாட்டில் ஆளும் அதிமுக அரசு கடந்த அக்டோபர் மாதம் நடவடிக்கை எடுத்தது.
ஆனால், அவற்றுக்கு செல்ல நிலவிய பொதுமக்களின் அச்சம் காரணமாக முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவரவில்லை.
இந்த நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள் 100% இருக்கைகளை நிரப்ப அனுமதி வழங்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக நடிகர் விஜய் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது தான் நடிக்கும் மாஸ்டர் படம் வெளியாவதை முன்னிட்டு 100% இருக்கைக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
100 சதவீத திரையரங்குகள் திறந்தாலொழிய தியேட்டர் மற்றும் திரையரங்க தொழில்கள் லாபம் பெறாது என்று நடிகர் சிலம்பரசன் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் திரையரங்குகளில் 100% இருக்கைகளை நிரப்ப தமிழக அரசு சமீபத்தில் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது.
அதன்படியே இரு படங்களும் பொங்கலுக்கு தியேட்டரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மறுபுறம் அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு குரல்கள் கிளம்பின. மூடிய அரங்கு என்பதால் இது ஆபத்தானது, கொரோனா எளிதில் பரவும் என மருத்துவ நிபுணர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என பல தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.
மூடப்பட்ட ஏ.சி அரங்கிற்குள் மக்கள் மூன்று மணி நேரம் அமர்ந்து ஒரு படத்தைப் பார்ப்பது ஆபத்தானது என்றும் அது கொரோனா பாதிப்புள்ளவர்களிடம் இருந்து வைரஸ் மேலும் சில மணி நேரம் உயிர்ப்புடன் இருக்க வாய்ப்பாக அமையலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்தனர்.
இதற்கிடையே அரசு தன்னுடைய நிலையில் மாற்றம் கொண்டுவரும் என தெரிகிறது. 100% இருக்கை தொடர்பான விவகாரத்துக்கு முதல்வருடன் பேசி முடிவுஎடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மாநில தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தியேட்டர்களுக்கு 100 சதவீத இருக்கை அனுமதி என்பது மத்திய அரசு பிறப்பித்த வழிமுறைகளுக்கு எதிரானது என்று குறிப்பிட்டது. இதைத் தொடர்ந்து தியேட்டர்களில் மீண்டும் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் மாநில அரசு அனுமதி வழங்கும் என்ற தகவல் பரவி வருகிறது. ஆனால், மாநில அரசு இது குறித்து இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
இதனால், பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட 'மாஸ்டர்' படம் வெளியாகுமா, ஆகாதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
திரையுலகினரும் அது குறித்து தெளிவாக பதில் தர முடியாத நிலையில் உள்ளனர். 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்றால் 'மாஸ்டர்' படம் வியாபார தொகையான 200 கோடி ரூபாயை வசூலிக்க காலதாமதம் ஆகும்.
தமிழ்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தியேட்டர்களுக்கு முன்பதிவு ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில் 'மாஸ்டர்' பட வெளியீடு நிலை என்ன என்பது அரசின் 50 சதவீத அறிவிப்புக்குப் பிறகே தெரிய வரும் என்கிறார்கள் அந்த படம் பற்றிய விவரம் அறிந்தவர்கள்.
இந்நிலையில் 100% பார்வையாளர்கள் அனுமதி என்ற உத்தரவை அரசு திரும்பப் பெற்றால், மாஸ்டர் படம் மட்டுமே வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக திரையரங்க உரிமையாளர் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்ரமணியன், தெரிவித்துள்ளார். ஒருவேளை மாஸ்டர் படம் வெளியாவது தள்ளிப்போனால் மட்டுமே ஈஸ்வரன் படத்தை வெளியிட முடியும் என்றும் அவர் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக திரை விமர்சகர் பிஸ்மியை பிபிசி தமிழ் சார்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஈஸ்வரன் கண்டிப்பாக பொங்கல் பண்டிகை அன்று வெளியிடப்படும் எனவும் சிம்பு படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதில் ஆர்வம் காட்டப்படுவதாகவும் கூறினார்.
இந்நிலையில் ஈஸ்வரன் பொங்கலுக்கு நிச்சயம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமும் கூறியிருக்கிறது. இதுவரை 200 திரையரங்குகளை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் 100% இருக்கையை ரத்து செய்தாலும் படத்தை வெளியிடுவோம் எனவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
- மலேசிய காட்டில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி இறந்தது எப்படி?
- ஜனவரி 20இல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு
- அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவு கும்பல் கலவரம், 4 பேர் பலி: வரலாறு காணாத காட்சிகள்
- "திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதி; 100% தேவையற்ற ஒன்று" - சுயநலத்துக்காக அரசியல் செய்கிறதா திரைத்துறை?
- தலை முடி உதிர்வுக்கு தீர்வு என்ன?
- "திரையரங்கில் 100% பார்வையாளர்கள் தற்கொலைக்கு சமம்" - மருத்துவரின் ஆதங்க பதிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்