Wonder Woman 1984: திரை விமர்சனம்

Wonder Woman 1984

பட மூலாதாரம், Wonder Woman 1984

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

நடிகர்கள்: கால் கேடோ, க்ரிஸ் பைன், க்ரிஸ்டன் விக், பெட்ரோ பாஸ்கல், ராபின் நைட்; இசை: ஹான்ஸ் ஸிம்மெர்; இயக்கம்: பேட்டி ஜென்கின்ஸ்.

டிசி காமிக்ஸில் 1940களிலும் 80களிலும் வெளிவந்த Wonder Woman காமிக்ஸின் திரைவடிவமாக 2017ல் 'Wonder Woman' வெளிவந்தது. இந்தப் படத்திற்குப் பரவலாக பாராட்டுகள் கிடைத்ததோடு, வணிக ரீதியாகவும் இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. இதன் தொடர்ச்சியாகத்தான் 'Wonder Woman 1984' வெளியாகியிருக்கிறது.

2017ல் வெளியான முதல் படத்தின் கதை இது: அமெஸானியன்களோடு பெண்கள் மட்டுமே வசிக்கும் தீவில் வசிக்கிறாள் இளவரசியான டயானா. முதலாம் உலகப் போரின்போது அமெரிக்க பைலட்டான ஸ்டீவ், வழிதவறி அந்தத் தீவிற்குள் வந்துவிடுகிறான். அவனை அமெஸானியன்கள் விசாரிக்கும்போதுதான் வெளியுலகில் மிகப் பெரிய யுத்தம் நடப்பதே தெரிகிறது. இந்த யுத்தத்தை ஸீயஸின் மகனான ஆரிஸ்தான் நடத்துவான் என கருதி, அவனை வீழ்த்துவதற்கான ஆயுதங்களுடன் தீவை விட்டு வெளியேறுகிறாள்.

இந்தப் படத்தின் கதை 1984ல் நடக்கிறது. அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் இன்ஸ்டிட்டியூட்டில் பணியாற்றுகிறாள் டயானா. அங்கே இருக்கும் Dream stone என்ற கல், நினைத்ததைச் செயல்படுத்தும் ஆற்றல் கொண்டது. மேக்ஸ்வெல் லார்ட் என்பவன் அதைக் கைப்பற்றி, தன் நாசகார செயல்களைச் செய்ய ஆரம்பிக்கிறான். இதிலிருந்து உலகத்தை டயானா எப்படிக் காப்பாற்றுகிறாள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

1984ல் நடக்கும் கதை என்பதால், உடை, வாகனங்கள், கருவிகள், தொழில்நுட்பம் என எல்லாவற்றிலும் அந்த காலகட்டத்தைக் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். உண்மையுடன் நடந்துகொள்வது எவ்வளவு பெரிய பலம் என்ற பாடத்துடன் மிக மெதுவாகத் துவங்குகிறது படம். ஆனால், பிரதான கதைக்குள் வந்தவுடன் வேகமெடுக்க ஆரம்பித்து விடுகிறது.

"ஆகா, நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறதே" என்று நினைத்தால், இரண்டாம் பாதியில் ரொம்பவுமே சோதிக்கிறார்கள். அதுவும் எகிப்தின் சாலையில் நடப்பதுபோன்ற சண்டைக் காட்சி மிகச் சுமாராக இருக்கிறது. க்ளைமாக்ஸில் டயானாவுக்கும் பார்பராவுக்கும் நடக்கும் சண்டையும் அவ்வளவு பிரமாதமில்லை.

டிசி காமிக்ஸின் படங்களைப் பார்த்தவர்களுக்கு ஒரு விஷயம் புரியும். ஸ்பைடர் மேன் படங்களில் இருப்பதைப்போல, இந்தப் படங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் சாகஸங்கள் நடக்காது. கதையின் போக்கில்தான் சாகஸங்கள் நடக்கும். ஆகவே திரைக்கதை வலுவாக இருக்கும்பட்சத்தில், படம் அட்டகாசமாக இருக்கும். வொண்டர் வுமனின் முதல் பாகம் அப்படித்தான் இருந்தது.

ஆனால், இந்தப் படத்தில் சற்று சொதப்பியிருக்கிறார்கள் என்பதால் இரண்டாம் பாதியில் நெளிய வேண்டியிருக்கிறது. முந்தைய படம் அளவுக்கு இல்லாவிட்டாலும், பின்னணி இசை இதில் சிறப்பாகவே இருக்கிறது.

DC காமிக்ஸிலிருந்து வெளியான Batman Vs Superman, Justice league ஆகிய படங்கள் கைவிட்ட நிலையில், Wonder Woman ஒரு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. ஆனால், அந்த நல்ல பெயரை இந்தப் படத்தின் மூலம் பெரிய அளவுக்குத் தக்கவைக்க முடியவில்லை. ஆனால், டிசி காமிக்ஸ் ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :