பிக்பாஸ் சீசன் 4: வெளியேற்றப்பட்ட சனம் ஷெட்டி - ஆதரவு தரும் திரை பிரபலம்

பிக்பாஸ்

பட மூலாதாரம், BIGG BOSS SEASON 4

பிரசுரிக்கப்பட்டது

பிக்பாஸ் வீட்டில் இருந்து சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்ட நிலையில், அவருக்கு திரை பிரபலம் ஒருவர் ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார்.

சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டது பிக்பாஸ் பார்வையாளர்களிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இசையமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் தனது சமூக வலைதள பக்கத்தில் இது தொடர்பாக நீண்ட பதிவை எழுதியுள்ளார். "பிக்பாஸ்" சீசன் 4-வது நிகழ்ச்சியின் 64ஆவது நாளில் 6ஆவது போட்டியாளராக சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டார்.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அந்தவகையில் இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சனம் ஷெட்டி வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் ரசிகர்களின் பேராதரவு இருந்தும் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டது விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

பிக்பாஸ்

பட மூலாதாரம், BIG BOSS SEASON 4

பிக்பாஸ் வீட்டில் சனம் ஷெட்டி தனித்து சிறப்பாக விளையாடியதாக கமல்ஹாசன் பாராட்டிய நிலையில், அவர் வெளியேற்றப்பட்டதை பிக்பாஸ் ரசிகர்கள் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு சிலர் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டதால் இனி பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க மாட்டோம் என்றெல்லாம் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டனர்.

இந்நிலையில் சனம் வெளியேற்றப்பட்டது குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் எழுதியிருக்கும் ஜேம்ஸ் வசந்தன், "சனம் வாக்களிப்பால் வெளியேறினாரா? திட்டமிட்டு அனுப்பப்பட்டாரா? இது எல்லார் மனதிலும் எழுந்திருக்கிறக் கேள்வி. பலருக்கு சந்தேகமே இல்லை.. இது சதிதான் என்று அடித்துச் சொல்கிறார்கள்.

நான் பார்த்த, விசாரித்த, ஆய்வுசெய்த வகையில் அவருக்கு மக்களிடம் பெருத்த ஆதரவு இருக்கிறது என்பது மட்டும் தெளிவாகியது. பின் ஏன் அனுப்பப்பட்டார்? என்ன காரணம்? தயாரிப்பாளர்களுக்கு என்ன வியூகம், நோக்கம் என்பது விளங்கவில்லை. ஆனால், அவர் எப்படி பெரும்பான்மை பார்வையாளர்களைக் கவர்ந்தார் என்பதுதான் என் கண்ணோட்டம்.

தொடக்கத்தில் நான் இந்நிகழ்ச்சியைப் பார்க்காததால் எனக்கு ஆரம்ப நிகழ்வுகள் தெரியாது. ஆனால் மக்களால் அவர் வெறுக்கப்பட்டார். சண்டைக்காரி என்கிற சாயல் அவர்மேல் படிந்தது என்பதை மட்டும் விளங்கிக்கொண்டேன். ஆனால் வாரங்கள் போகப்போக, அவருடைய நிலைப்பாடு மக்களுக்கு விளங்கத் தொடங்கியது.

நிலையான போக்கைக் கொண்டவராயிருந்தார். எத்தனை பேர் எதிர்த்து நின்றாலும், துணிவுடன் உறுதியாகத் தன் கருத்துகளை நிதானமாக வாதாடினார். வாதங்களில் தெளிவும், கண்ணியமும் இருந்தது. யாரையும் தவறான வார்த்தைகளில் பேசியதில்லை.

பிக்பாஸ் சீசன் 4

பட மூலாதாரம், BIG BOSS SEASON 4

ஒரு குறிப்பிட்ட வாதத்தில், பாலாஜி மூர்க்கத்தனமாக நெருங்கி வந்து (ஆணென்கிற ஆணவத்துடன்) மிரட்டியபோதும் சற்றும் சளைக்காமல் அதே நிதானத்துடன் எதிர்கொண்டார்.

கடைசியாக நடந்த 1 - 13 இடங்களுக்கான வாதத்தின்போது கூட, வயதில் மூத்த இவரை பாலாஜி நீ, வா, போ என்று அழைக்க, இவர் இறுதிவரையில் பாலாஜியை நீங்க, வாங்க, போங்க என்றுதான் விவாதித்தார். கேப்ரியலா பாலாஜியை அவன், இவன் என்பதை நினைவில் கொள்ளவும். தேவையில்லாமல் மற்றவரைப் பகைத்துக்கொள்ளவேண்டாம் என்று (அங்கிருக்கிற சிலரைப் போல இல்லாமல்) ஒருபோதும் தன் கருத்துகளைப் பொது சர்ச்சைகளில் சொல்லாமல் இருந்ததில்லை. ஆனால் அமைதியாக வேறுபட்டார்.

அர்ச்சனா கேங் இவரை ஒட்டுமொத்தமாகக் குறிவைத்து விளையாடியபோதும் அசராமல் தனிப்புலியாகப் திரிந்தார். எல்லாவற்றுக்கும் சிகரமாக, வீட்டிலிருந்து வெளியேறியபோது அப்படி ஒரு முதிர்ச்சியுடனும், புன்சிரிப்புடனும் எல்லாருடனும் கலகலத்துவிட்டு நடந்தார்.

இதுவரை வெளியேறிய எல்லாரும் கமலுடன் மேடையில் நின்று ஒவ்வொருவரையும் பற்றிக் கருத்து சொல்லும்போது தங்கள் கோபத்தையும், வன்மத்தையும் காட்டியதுதான் வழக்கம். இவர் எல்லாரிலும் இருந்து வேறுபட்டு, தனித்துவத்துடன், ஏகப்பட்ட மனமுதிர்ச்சியுடன் அவர்களது நேர்மறைப் பக்கங்களைப் பாராட்டியும், எதிர்மறைப் பக்கங்களைப் பக்குவமாக எடுத்துச் சொல்லியும் உயர்ந்து நின்றார். அவருக்கு வாக்களிக்காதவர் உள்ளங்களையெல்லாம் அள்ளிச்சென்றார்," என்று ஜேம்ஸ் வசந்தன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: