எஸ்.பி.பியின் உடல்நிலை: தற்போதைய நிலவரம் என்ன?

பட மூலாதாரம், Spb facebook page
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் உள்ள பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தற்போது வாய்வழியாக உணவு அருந்த ஆரம்பித்துள்ளதாகவும் தினமும் சிறிது நேரம் எழுந்து அமர்வதாகவும் அவரது மகன் எஸ்.பி. சரண் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.பியின் உடல்நிலை தொடர்பாக எஸ்.பி. சரண் சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள காணொலியில், எஸ்.பி.பி. தொடர்ந்து வென்டிலேட்டர் மற்றும் எக்மோவுடன்தான் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், அவரது உடலின் பிற நலக்குறியீடுகள் சாதாரண நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், "அவரது சுவாசத்தில், நுரையீரலில் இன்னும் சில முன்னேற்றம் தேவைப்படுகிறது. அவர் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் எழுந்து அமர மருத்துவர்கள் உதவுகின்றனர். தினமும் 15-20 நிமிடங்கள் எழுந்து அமர்கிறார். தவிர, நேற்று முதல் வாய்வழியாக உணவருந்த ஆரம்பித்துள்ளார். இது அவர் வலிமை பெற உதவும்" என எஸ்.பி.பி. சரண் தெரிவித்திருக்கிறார்.
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கோவிட் - 19 அறிகுறிகளுடன் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மிதமான அறிகுறிகளே இருந்த நிலையில், ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று இரவு அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிர்காக்கும் இயந்திரங்கள் பொறுத்தப்பட்டுள்ளன.
கோவிட் - 19 பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது வீடியோ ஒன்றை வெளியிட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம், தான் நலமுடன் இருப்பதாகவும் யாரும் தொலைபேசியில் அழைத்து விசாரிக்க வேண்டாமென்றும் கூறியிருந்தார்.
ஆந்திர மாநிலம், நெல்லூரில் பிறந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம், 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். அவருக்கு வயது 74.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












